செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா . 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

20 மே 2000

கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே

புதிய சிந்தனைகளுடனும் நமபிக்கை தரும் வழிகாட்டுதல்களுடனும் இலங்கை நாட்டை முன்னெடுத்துச் செல்லத்தக்க, மேன்மை தங்கிய ஜனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இலங்கையின் அரசியல் தலைமையை மக்கள் தமது வாக்குரிமையின் மூலம் ஒப்படைத்துள்ளார்கள். புதிய அரசியல் தலைமையின் வழிகாட்டுத லோடு கூடும் முதலாவது பாராளுமன்ற அமர்வில் இச்சபையில் நாம் கூடியிருக்கிறோம்.

இலங்கை அரசியல் வரலாற்றில் சுமார் 40 வருடங்கள் பொது மக்கள் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்த எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டில் வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களை இதுவரை அனுபவித்த வந்த அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு தீர்வை நடைமுறைச் சாத்தியமான வழியில் காண்பர் என்பதில் ஈ.பி.டி.பி.க்கு உறுதியான நம்பிக்கை உண்டு. ஜனாதிபதி அவர்களின் செயற்திட்டத்திற்கும் புதிய அணுகு முறைக்கும் இச்சபையிலுள்ள நாமெல்லாம் பரிபூரண ஆதரவை வழங்க வேண்டுமெனக் கோரும் இச்சந்தாப்பத்தில் மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு ஈ.பி.டி.பி.யின் சார்பிலும் தமிழ் பேசும் மக்களின் சார்பிலும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, எனது சக அமைச்சரவை உறுப்பினர்களே, சபை உறுப்பினர்களே

அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகின்ற இச்சந்தர்ப் பத்தில், இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினை, சகல இன மக்களின் உளப்பூர்வமான ஆதரவுடன் இணைந்த அரசியல் கட்சிகளினது பங்கு பற்றுதலுடனும் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய அவிசியத்தை நாம் எல்லோரும் உணர்ந்திருக்கின்றோம்.

பல்வேறு தடவைகளில் பல்வேறுபட்ட அரசியல் கலாசார சூழல்களில் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் கை கூடவில்லை. இத்தகைய தோல்விகளின் விளைவால் நாடு பெரும் உயிரிழப்புக்களையும் உடைமை அழிவுகளையும் சந்தித்து பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு நிற்கிறது.

இதனால் வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களும் அடிப்படை வசதிகள் தொடக்கம் அன்றாட உணவு வரைக்கும் அனைத்தையும் பெறுவதில்  கஷ்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.வறுமைவேலையில்லாத் திண்டாட்டம் கலாசார சீரழிவு என எமது சமூகக் கட்டமைப்புக்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலைமையை மக்கள் பிரதிநிதிகளாக நாம் நேரடியாகவே கண்டு வருகின்றோம்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணம் சமாதான மற்ற சூழல் என்பதை நாமறிவோம். ஆகவே நமது  ஜனாதிபதிக்கு முன்னுள்ள உடனடியானதும் பிரதானமானதும் கடமை தேசிய இனப்பிரச்சினைக்கு நம்பிக்கையானதும் கௌரவமானதுமான தீர் வொன்றைத் தரும் உறுதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகும்.

ஜனாதிபதி அவர்கள், தமது பதிவியைப் பொறுபேற்றுக் கொண்டவு டன் ஆற்றிய உரையானது நாட்டிலுள்ள மக்களுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் வெளிநாடுகளுக்கும் நம்பிக்கையைத் தந்துள்ளது. அவரது கொள்ளை உரைக்கு பலத்த வரவேற்புக் கிடைத்துள்ளது.சமாதானத்தை அடைந்து கொள்வதற்காக அவர் நீட்டியுள்ள நேசக் கரத்தை நாம் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே

இன்று நாம் இச்சபையில் அவசரகால நிலை தொடர்பாக பேச நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம். அமைதிச் சூழலைக் குழிதோண்டிப் புதைத்து தமது இயக்க அதிகாரத்தை நிலைநாட்ட முற்படும் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளால் கிடப்பில் கிடந்த அவசரகால நிலைமை ஏற்படுத்தியது புலிகள்தான் 2002ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பயன்படுத்திப் புலிகள் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றும் மாற்று ஜனநாயக சக்திகளை வேரறுத்தும் சமாதானச் சூழலுக்கு சவாலை ஏற்படுத்தி வந்தனர் வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 12ம் திகதி முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களை புலிகள் படுகொலை செய்ததை அடுத்தே காணாமல் போயிருந்த அவசரகாலச் சட்டம் கண்டெடுக்கப்பட்டது. புலிகளின் ஜனநாயக விரோதச் செயல்கள் மனித உரிமை மீறல்கள் படுகொலைகள் ஒவ்வொன்றும் தமிழ் பேசும் மக்களை வருத்தி அவாகளது இயல்பு வாழ்வை குழிதோண்டிப் புதைப்பதாகவே உள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அழித்தொழிப்பதற்கு புலிகள் பல்வேறு கொலைகளைச் செய்து பார்த்தனர். ஆனால் அரசாங்கத்தின் உறுதி யான நிலைப்பாட்டினால் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட்டே வந்தது. ஆகவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர புலிகள் திட்டப்பட்டு மிகப்பெரும் இலக்கான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைக் குறிவைத்தனர். தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு சர்வதேச சமூகமும் காட்டிய “சமாதானத்திற்கான பொறுமையில்தான்” போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அவசர காலச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை அரசாங் கத்திற்கு புலிகளின் கொலைகளால் ஏற்படுகிறதே தவிர அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி அழகு பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்பியதால் அல்ல என்பதே உண்மையாகும்.வன்னியிலுள்ள மறைமாவட்டத்தில் இருந்து கொண்டு பிராபகரன் எய்யும் ஒவ்வொரு அம்பும் தமிழ் பேசும் மக்களைச் சாகடித்துக் கொண்டேயிருக்கிறது. இந்த உண்மையைத் தமிழ் பேசும் மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டு விட்டனர்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே

நாங்கள் தமிழ் பேசும் மக்களுக்கும் தென்னிலங்கை அரசியல் தலைவர் களுக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும் சொல்லிவருகின்ற செய்தி “புலிகளின் பிரச்சினை வேறு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வேறு: அவசரகாலச் சட்டத்தின் காரணமாக எந்தவொரு அப்பாவி மனிதனும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அதேநேரம் அழிவுகளுக்கும் மக்களின் அவலங்களுக்கும் காரணமான பயங்கரவாதிகள் வன்முறையாளர்கள் தப்பிவிடக்கூடாது.” என்பதுதான் இதுவே எமது தெளிவான நிலைப் பாடாகும். எந்தவோர் அரசியல் கட்சிக்கும் அரசியல் இயக்கத்திற்கும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த உரிமை இருக்கின்றது.  அதனை ஏற்பதற்கும் நிராகரிப்பதற்கும் உரிமை மக்களுக்கு உள்ளது. மக்கள் வாக்களிக்க கூடாது எனக்கோரவும் வாக்களிக்க உரிமையும் விருப்ப மும் உள்ள மக்களை அச்சுறுத்தவும் வன்முறையினால் அவர்களை வாக்களிப்பில் இருந்து தடைசெய்யவும் உரிமை இல்லை.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கில் வாழும் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க ஈ.பி.டி.பி. தன்னையே அர்ப்பணித்தது. ஆனால் எமது பிரசாரத்திற்கு அமைய தேர்தலில் வாககளிக்க முன்வந்த மக்களைப் புலிகள் அச்சுறுத்தி, தமது கொலை வெறியின் ஊடாக அடிபணிய வைத்தனர். ஜனாதிபதித் தேர்தலில் மக்க்ளின் அடிப்படை உரிமையான வாக்குரிமைத் தமிழ் பேசும் மக்கள் பிரயோகிப்பதற்குப் புலிகள் தடையாகவிருந்தனர்.குண்டு வீசினர் ஆட்களைக் கொன்றனர். வாக்களித்த மக்களின் அங்கங்களைக கூட வெட்;டியெறிந்து இரத்தம் குடித்தனர். எமது கட்சியின் ஆதரவாளர்களை பொதுமக்களை வாக்களிப்பதற்குப் புலிகள் அனுமதிக்கவில்லை. இந்த உண்மைகளைச் சர்வதேசத் தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் சுயாதீனத் தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களும் சுதந்திர ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

தேர்தலில் தமக்கு அக்கறை  இல்லை எனச் சொல்லும் புலிகள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்;களை அச்சுறுத்தி அவர்களது வாக்குரிமையைப் பறித்து வர்களிக்கும் உரிமையைத் தமது ஆதிக்கக் கைகளில் எடுத்தே புலிகளின் பினாமிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிரை வெல்ல வைத்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினரின் அறிக்கையே இதற்கு ஒரு தக்க சான்றாகும். வடக்கு – கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மக்கள் தமது மன உணர்வுக்கு அமைய வாக்களிக்கப் புலிகள் தொடர்ந்தும் தடையாகவே இருந்து வருகின்றனர். ஆனாலும் புலிகளின் கொலை அச்சுறுத்தலையும் மீறி வடக்கு – கிழக்கு மக்கள் வாக்களித்துள்ளமையானது புலிகளுக்கு கிடைத்த மிகப் பெரிய தோல்லியாகும்.

புலிகள் தற்போது நடைமுறையிலுள்ள அமைதிச் சூழலை குழப்பியடிப் பதற்கு வடக்கு – கிழக்கில் பல்வேறு நாசகாரத் திட்டங்களைத் தீட்டி வருகின்றனர். படையினரையும் தமிழ் மக்களையும் மோதவிட்டு தமிழ் மக்களுக்கு மத்தியில் ஜனநாயக அமைப்பினரைத் தமது குண்டர்களைப் பயன்படுத்தி வெளியகற்ற, தமிழ் – முஸ்லிம் மக்களிடையே கலவரங்   களை ஏற்படுத்த அவர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இப்போது கொண்டாட்டங்கள் என்ற போர்வையில் வடக்கு – கிழக்கு வாழ் மக்களின் அன்றாடச் செயற்பாடுகளுக்கும் இயல்பு வாழ்விற்கும் புலிகள் பங்கம் விளைவித்து வருகின்றனர். தமது கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு மக்களை அச்சுறத்தி வருகின்றனர்.

ஆகவே, புலிகளின் அடக்குமுறையிலிருந்து தமிழ் பேசும் மக்களை மீட்டெடுப்பதற்கு அரசியல் தiமைகள் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதுடன் தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வழிமுறைகளையும் மக்கள் முன் வைக்க வேண்டியுள்ளது. குறுகிய காலத்திற்குள் இனப் பிரச்சினையைத் தீர்க்கும் செயற்பாடுகளல் ஈடுபடப் போவதாக ஜனாதிபதி அவர்கள் அறிவித்துள்ளார்கள். “மீண்டும் ஒரு யுத்தம் வெடித்து மனித உயிர்கள் பலியாவதைத் தடுத்து நிறுத்துவேன்” என அவர் தெளிவாகத் தெரி வித்துள்ளார். இத்தகைய கருத்துக்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் புதிய எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை விதைத்துள்ளதாக தமிழ் பேசும் பொதுமக்கள் பலர் என்னிடம் தெரிவிக்கின்றமையை இச்சபையில் அழுத்தந்திருத்தமாகச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவாகளே

ஈ.பி.டி.பி. யினராகிய நாம் மூன்று கட்ட அடிப்படையில் இனப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என நம்புகின்றோம். முதலாவது, இலங்கை  – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் நடைமுறையிலுள்ள மாகாண சபையை வடக்கு – கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் கையளித்தல். இந்த விடயததில் ஓர் உண்மையை நான் வலியுறுத்த விரும்புகிறேன். அதாவது மாகாண சபைமுறை என்பது எமது மக்களினதும் எமது இளைஞர் யுவதிகளினதும் இரத்தத்தையும் தசையையும் தானமாகக் கொடுத்து, இந்திய அரசின் உதவுடன் அமுல்படுத்தப்பட்ட ஒன்றாகும். இதனை அனுபவிப்பதற்கும் அவ்வதி காரப் பகிர்வின் ஊடாகத் தமது அவலங்களைத் தீர்ப்பதற்கும் எமது மக்களுக்கு முழு உரிமையும் உள்ளது. இதுதான் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதற்கட்டமாகும்.

இரண்டாவது கட்டமாவது அரசியலமைப்பின் 13வது சட்டத்தைப் பலப்படுத்தி அதிக அதிகாரங்களை வழங்குவதாகும். இவ்விரு கட்டங்களும் செம்மையாக செயற்படுத்தப்படுமானால்,அதிகாரப் பகிர்வின் ஆழத்தை சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனுபவத்தில் உணர்ந்து கொள்வார்கள். இனங்களுக்கிடையே நம்பிக்கையையும் சமத்துவமும் தானாகப் பிறந்துவிடும்.

அப்போது மூன்றாவது கட்டமான ஐக்கிய இலங்கைக்குள் “மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி” என்பது நடைமுறைச் சர்தியமாகி விடும். இதுவே ஈ.பி.டி.பி. யின் அரசியல் திட்டமும் தீர்க்கமான நிலைப்பாடுமாகும். இவை குறித்து நாம் கௌரவ ஜனாதிபதியுடன் பேசியுள்ளோம்.

“ஐயா வரும்வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா” என தமிழில் பழமொழி உண்டு. நாங்கள் ஐயருக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்கிற நெய்யை வைத்துக் கொண்டு நாம் எண்ணெய்க்கு அலையத் தேவையில்லை. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தம் முதற்படி என்பது போல இனப் பிரச்சினைத் தீர்வுச் செயற்பாட்டில் எமது நேச நாடான இநதியாவின் பங்களிப்பும் அவசியத்தலும் அவசியமானது.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு தேவை.அதற்கான காலம் கனிந்து விட்டது. ஜே.வி.பி. போன்ற அரசியல் தலைமைகளும் நாம் வலியுறுத்தும் இரண்டு கட்டத்திற்கு தமது முழு ஆதரவையும் வழங்குவார்கள் என நம்புகின்றேன். புலிகளின் சுயலாப அதிகாரப் பசியைக் காரணம் காட்டி தமிழ் பேசும் மக்களுக்கான நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வை நாம் தள்ளிப் போடவே முடியாது. நாம் ஏற்கனவே வலியுறுத்திய மூன்று கட்டங்களில் முதல் இரண்டு கட்டங்களையும் உறுதியுடன் நாம் முன்கொண்டு செல்வோமேயானால் அவசரகாலச் சட்டம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாத புலிகள் வரலாற்றுத் தோல்விகளை இப்போது சந்திக்கத் தொடங்கி விட்டனர். மக்கள் அடக்கு முறையின் சிறையிலிருந்து மேலெழுந்து வரத் தொடங்கி விட்டனர். ஆகவே நாம் இப்போது நம்பிக்கை தரும் எதிர்காலத்தை சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ளோம் என்பதை மீளவும் வலியுறுத்தி விடைபெறுகின்றேன். நன்றி. வணக்கம்.

 20 மே 2000

Related posts:


தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றி ணைப்பேன் - நாடாளு மன்றில் எம்.பி. டக்ளஸ் தேவா...
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் ...