கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2019

இந்த நாட்டிலே கறுப்பு ஜூலை ஆரம்பித்து வைக்கப்பட்ட இன்றைய தினத்திலே, அதன் வேதனைகள் இன்னமும் மறையாதிருக்கின்ற நிலையில் மறக்காதிருக்கின்ற நிலையில் இந்த வருடம் மீள அதனை நினைவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியிலே இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாக்கப்பட்டுள்ள நிலையிலேயே நான் இந்த விவாதத்தில் கலந்து கொண்டிருக்கின்றேன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற  நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இனங்களிடையேயும் மதங்களிடையேயும் முரண்பாடுகளையும் கசப்புணர்வுகளையும் வளர்த்தெடுக்கின்ற ஓர் அபாயம் மிகவும் சுதந்திரமாகவே நாட்டுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற இந்த கால கட்டத்தில் ஆட்சி நிர்வாகமானது கைகளைக் கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் கவலை தருகின்ற விடயமாக உள்ளது.

நாட்டுக்குள் ஒரு பக்கம் வறட்சி ஒரு பக்கம் மழை வெள்ளம் ஒரு பக்கம் கடும் காற்று எனப் பார்த்தால் ஆட்சிக்குள் எல்லாப் பக்கங்களிலும் வறட்சி நிலையே காணப்படுகின்றது.

இந்த துறைமுக நகரமும் இலங்கை வரைபடத்தில் இணைக்கப்பட்டு உருவாகின்ற இலங்கை வரைபடமானது கையை விரித்த மாதிரி இருக்குமென்று கூறப்படுகின்றது. உண்மையில் அது இந்த நாட்டின் தற்போதைய நிலைமைக்குப் பொருந்தும் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரம் உயர்த்தல் தொடர்பிலான விடயத்திற்கு இன்று என்ன நேர்ந்திருக்கின்றது? என்பது தொடர்பில் எவ்விதமான பதிலும் இல்லை. அங்கே உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு இருந்தபோது போய் வாக்குறுதி வழங்கியவர்கள் கன்னியா நீராவியடி கந்தப்பளை என வரும்போது என்ன செய்தார்கள்? என்பதும் உங்களுக்குத் தெரியும்.

இறுதியாக இந்த அரசின்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது இந்த அரசை மீண்டும் தாங்கிப் பிடித்த தமிழ்த் தரப்பினர் கல்முனை வடக்கு உப பிரதேசத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் எழுத்து மூல ஒப்பந்தம் ஒன்றை அரசுடன் செய்து கொண்டுதான் அரசை தாங்கிப் பிடித்ததாகக் கூறினார்கள். இன்று இதே அரசைக் கொண்டு ஒரு கணக்காளரை இந்தத் தமிழ்த் தரப்பினரால் நியமித்துக் கொள்வதற்கு முடிந்ததா? அதுவும் இல்லை.

இங்கே நான் எந்தத் தரப்பினருக்கும் அநியாயம் இழைக்கப்பட வேண்டும் எனக் கதைக்கவில்லை. அனைத்துத் தரப்பினருக்கும் நியாயம் வேண்டும் என்ற நிலையில் இருந்தே கதைக்கின்றேன்

கல்முனை வடக்கு உப பிரதேச சபையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையானது அம்மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக இருக்கின்றது. ஓர் இரவில் இதோ முடிந்துவிடும் இந்தப் பிரச்சினை எனக் கூறி இந்த அரசை இந்த முறையும் தாங்கிப் பிடித்தவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்? என்றே கேட்கத் தோன்றுகின்றது.

இப்படியான பித்தலாட்ட அரசியலில் தொடர்ந்து இவர்கள் ஈடுபட்டு வருவதன் காரணமாகத்தான் அண்மையில் மட்டக்களப்பிற்குப் போய் விரட்டப்;பட்டு இரவோடிவராக தங்குவதற்கு இடம்தேடி களுவாஞ்சிக்குடி வரை ஓட வேண்டிய நிலை இவர்களுக்கு எற்பட்டது என்ற நிலைமையில்கூட இவர்கள் இனிமேல் எமது மக்களது நலன் கருதிய அரசியலில் ஈடுபடாவிட்டால் இவர்களை வேறு எவ்வாறு அழைப்பது? என்றே எமது மக்களுக்குத் தெரியவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் அல்லது சர்வதேச பொருளாதார நகரம் என்கின்ற இந்த கடலிலிருந்து பெறப்பட்ட பகுதியானது 446.6153 ஹெக்டயர் நிலப் பரப்பைக் கொண்டது எனக் கூறப்படுகின்றது. இந்தப் பகுதி கொழும்பு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவுடன் இணைக்கப்படவுள்ளதாகவே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது.

சரி பிழைகளுக்கப்பால் இன்று இந்த துறைமுக நகரம் அமைக்கப்பட்டு இதனது ஐந்து வலயங்களில் ஒன்றான பொருளாதார வலயத்தின் நிர்மாணப் பணிகள் 2025ஆம் ஆண்டளவில் நிறைவுறும் என்றும் முழுமையான பணிகள் மேலும் 25 ஆண்டுகளில் நிறைவுபெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இந்த ஐந்து வலயங்களில் முக்கிய வலயமாக பொருளாதார வலயம் அமையப்பெறவுள்ளதுடன் பொது மக்களது பொழுதுபோக்கு தொடர்பிலான செயற்கை கடற்கரை அடங்கலான பூங்கா சார்ந்த வலயம் சர்வதேச விடயங்களுக்கான சர்வதேச தீவு என்கின்ற வலயம் படகுகளை நிறுத்தி வைப்பதற்கான ஒரு மென் படகுத்துறை சார்ந்த வலயம் சொகுசு மாளிகைகள் அடங்கியதான ஒரு தீவு வலயம் என்பன ஏனைய வலயங்களாக அமையப்பெற உள்ளன எனக் குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஐந்து வலயங்களையும் பொறுத்தமட்டில் இந்த நாட்டிலே வாழுகின்ற சாதாரண மக்களுக்கான வாய்ப்புகள்  எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்ற நிலையில் இந்த சர்வதேச விடயங்களுக்கான வலயம் என்பது எத்தகைய சர்வதேச விடயங்களுக்கானவை? என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.

இந்த துறைமுக நகர் பகுதியின் நிலங்களின் உரிமம் யாருக்கானது? என்ற கேள்வி எழுகின்ற நிலையில்தான் இந்த சர்வதேச விடயங்கள் யாருக்கானவை என்பது தொடர்பில் பதில் எழும் என நினைக்க முடிகின்றது. 

மேற்படி நகரின் பொருளாதார வலயத்தில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் முதலீட்டாளர்களை கொண்டுவரக்கூடிய உரிமை இலங்கைக்கு இல்லாது போகின்ற சந்தர்ப்பத்தில் அந்த நகரின் ஊடாக இந்த நாட்டின் இறைமைக்கு பாரிய அழுத்தங்கள் ஏற்படும் என சூழலியலாளர்கள் குறிப்பிட்டு வருவதையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.

அதேநேரம் துறைமுக நகரை அண்டியதான கடலில் கடற்றொழில் தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும். அதுவும்கூட எமது நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாத ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டுவிடும் போலவே தோன்றுகின்றது.

இந்த வகையில் பார்க்கின்றபோது பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் உருவாகி வருகின்ற துறைமுக நகர் என்பது கொழும்பு பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டாலும் அது வெறும் பெயரளவிலான ஒரு பகுதியாக இப் பிரதேச செயலகத்திகுள் இருக்கும் போலவே தோன்றுகின்றது.

கொழும்பு பிரதேச சபையை பொறுத்தவரையில் பொருளாதார ரீதியில் ஓரளவு நடுத்தர மற்றும் பாரியளவில் வறிய மக்களுமாக வாழ்ந்து வருகின்ற பகுதியாகவே காணப்படுகின்றது. இந்தப் பகுதியானது பாரிய வர்த்தக முயற்சிகளை பெரும்பாலாக கொண்டிருந்தாலும் இந்தப் பகுதியில் வாழுகின்ற பெரும்பாலான மக்கள் அந்த வர்த்தக முயற்சிகளில் ஊழியர்களாகவே பங்கேற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகையதொரு நிலையில் இந்தப் புதிய நகரம் – அதாவது துறைமுக நகரம் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவின் கீழ் கொண்டுவரப்படுவதால் இந்தப் பகுதியில் வாழுகின்ற மக்களுக்கு ஓரளவு ஊழியப் பங்களிப்பைத் தவிர – சிலவேளை அதுவும் நிச்சயமில்லை – வேறு எவ்விதமான நன்மைகளும் கிட்டாமல் போய்விடலாம் என்பதையும் முன்கூட்டியே இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன். இதற்கு காலம் பதில் சொல்லும் என நினைக்கின்றேன

தற்போது வடக்கு மாகாணத்திலே செயற்பட்டு வருகின்ற சில நிர்வாக அலகுகள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் நான் பலமுறை இங்கே முன்வைத்து வந்துள்ளேன்

குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலே தற்போது செயற்பட்டு வருகின்ற சாவகச்சேரி பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரித்து சாவகச்சேரி பிரதேச செயலகம் என்றும் கொடிகாமம் பிரதேச செயலகம் என்றும் இரு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

35 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட கொழும்பு பிரதேச செயலகத்துடன் மேலும் நிலப் பகுதிகள் இணைக்கப்படுகின்ற நிலையில் 60 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட சாவகச்சேரி பிரதேச செயலகத்தைப்   பிரித்து இரண்டு செயலகங்களாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என்றே கருதுகின்றேன்.

அதேபோன்று தற்போது செயற்பட்டு வருகின்ற கோப்பாய் பிரதேச செயலகத்தையும் கோப்பாய் பிரதேச செயலகம் அச்சுவேலி பிரதேச செயலகம் என இரண்டாகப் பிரிக்க வேண்டிய தேவையும் உணர்த்தப்பட்டு வருகின்றது.

அதேநேரம் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளு+ராட்சி அமைச்சு இன்றைய இந்த விடயத்துடன் தொடர்புபட்டிருப்பதால் உள்ளு+ராட்சி மன்ற நிர்வாகத் தேவைகள் குறித்தும் சில விடயங்களை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.

குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது செயற்பட்டு வருகின்ற கரைச்சி பிரதேச சபையின் கீழேயே கிளிநொச்சி நகரும் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நகரின் தேவைகள் அதிகரித்து வருகின்றமை காரணமாக கிளிநொச்சி நகரினதும் தேவைகளை அவதானத்தில் கொண்டு ஒரு நகர சபையினை கரைச்சி பிரதேச சபைக்கு மேலதிகமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டி இருக்கின்றது.

அதேநேரம் முல்லைத்தீவு மாவட்த்திலும் புதிதாக ஒரு பிரதேச சபை ஒட்டுசுட்டான் பிரதேச சபை என உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நான் ஏற்கனவே முன்வைத்திருந்தேன். அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது. எனினும் அதன் தற்போதைய நிலை என்ன என அறிய விரும்புகின்றேன்

கிளி மாவட்டத்தில் புதிதாக அக்கராயன் பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும். வவுனியா மாவட்டத்தில் வவுனியா மேற்கு பூவரசங்குளத்தினை மையமாகக் கொண்ட ஒரு புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளத்தினை மையமாகக் கொண்டு மேலதிகமாக ஒரு பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கு அப்பால் உள்@ராட்சி என்று வரும்பொழுது வுவனியா நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்த வேண்டும். 

கிளிநொச்சி முல்லைத்தீவு நெல்லியடி சுன்னாகம் மானிப்பாய் சங்கானை ஆகிய நகரங்களை நகர சபைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.

வடமராட்சி கிழக்கு கண்டாவளை மடு மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலங்களில் அதாவது ஒதுக்கப்பட்டு அமுல்படுத்தப்படாத கிராம அதிகாரி பிரிவுகள் தரப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு  பண வீக்கத்தை எதிர்கொள்ளப் போதாது - நாடாளுமன்றத்தி...
நாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இன்னமும் உ...