நாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இன்னமும் உருவாக்கப்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 18th, 2019

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுபோலவே இன்று இந்த நாட்டில் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு என்பது பிளவுபட்டுள்ள நிலையில், அது இனவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் கொண்டாட்டங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2000ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழான கட்டளைகள் – மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான மூன்று அறிவித்தல்கள் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பெற்றோர்கள் காவல் இருக்க பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்க வேண்டிய நிலையும், மத வைபவங்களைக் கூட மித மிஞ்சிய பாதுகாப்புடன் நடத்த வேண்டிய நிலையும் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகையதொரு நிலை இந்த நாட்டில் உருவாக வேண்டிய அளவிற்கு ஆட்சி நிர்வாகம் அசமந்தப் போக்கில் இருந்துவிட்டு, எல்லாமே நடந்து முடிந்த பின்னர் இன்றும்கூட – கிட்டத்தட்ட இரு மாதங்கள் ஆகின்ற நிலையிலும், இன்னும் உங்களது அரசியல் குடும்பிச் சண்டையே நீடிக்கின்றதே அன்றி, மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இன்னமும் உருவாக்கப்படவில்லை என்றே தோன்றுகின்றது.

இன்று காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் கூறப்படுகின்றது. கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முடங்கிவிட்ட பல்வேறு தொழில்துறைகள் இன்னும் ஒழுங்குபடுத்தப்படாமலேயே இருக்கின்றன.

அத்தகைய துறைகளை ஒழங்கபடுத்துவதாக அரச தரப்பில் கூறிக் கொண்டாலும், அரசின் நிச்சயமற்ற தன்மை காரணமாக அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் அத்தகைய துறைகளைக் கட்டியெழுப்புவதற்கு எந்த வகையில் கிடைக்கின்றன? என்பதும் தொடர் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

உங்களது பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக அரச அதிகாரிகள் தங்களது பதவிகளை விட்டே ஒதுங்குகின்ற, அல்லது ஓரமாகி நிற்கின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

புதிது புதிதாக பிரச்சினைகளை உருவாக்கி, தொடர்ந்தும் அவற்றின் நிழலில் இருந்து கொண்டு, பிழைக்கப் பார்க்கின்ற நிலையில், எமது மக்களது அடிப்படை, அன்றாட, அத்தியாவசியப் பிரச்சினைகள் யாவும் அடித்தட்டுக்குப் போடப்பட்டு விட்டுள்ளன.

புதிது புதிதாகத் திட்டங்களைக் கொண்டு வருகின்றீர்கள். அழகழகான பெயர்களை அவற்றுக்கு சூட்டுகின்றீர்கள். ஆடம்பரமாக அறிமுகஞ் செய்து வைக்கின்றீர்கள். அவற்றினால் ஏதும் பயன் கிடைக்கின்றனவா? எனப் பார்த்தால், எமது மக்கள் வெறும் அச்சிட்ட அட்டைகளை கையில் வைத்துக் கொண்டு அலைந்து திரிகிறார்கள்.

ஏற்கனவே பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகஞ் செய்து, அரச வங்கிகள் ஆட்டங் கண்டு கொண்டிருக்கின்ற நிலையில், தற்போது சமுர்த்தி கடன் அட்டைகளைக் கொடுத்து சமுர்த்தி வங்கியும் ஆட்டங் காணப் போகின்றது என்றே மக்கள் பொதுவாகவே கதைக்கின்ற அளவுக்கு உங்களது திட்டங்கள் மக்கள் மத்தியில் நன்றாகவே எடுபட்டுப் போயுள்ளன.

இத்தகைய திட்டங்கள் கnhண்டு வரப்படுகின்றபோது, தேசிய நல்லிணக்கம் பேசுகின்ற நீங்கள் அத் திட்டங்களின் பெயர்களுக்கேற்ற தமிழ்ச் சொற் பதங்களை அதனுடன் இணைத்து வழங்குவதில்லை. கேள்வி கேட்டால், அது வர்த்தகப் பெயர் எனக் கூறுகிறீர்கள். ஆக, எல்லாவற்றிலும் நீங்கள் வர்த்தகம் செய்து கொண்டிரக்கிறீர்கள். இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததாகக் கூறும் தமிழ்த் தரப்பும் தங்களது கட்சிப் பெயரில் மாத்திரம் தமிழை வைத்துக் கொண்டால் போதும், இந்த நாட்டில் வேறு எதற்குமே தமிழ்ப் பெயர் தேவையில்லை என்ற போக்கில் வாய் மூடிக் கொண்டு இருக்கின்றது.

அரசியல் உரிமையைப் பெறுகின்ற வரையில் எவரும் அபிவிருத்தி பற்றிப் பேசக் கூடாது என்ற இந்தத் தமிழ்த் தரப்பினர், அபிவிருத்தி என்றலே அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என்றவர்கள், எமது பிள்ளைகள் தொழில் வாய்ப்புகளைக் கோரிச் சென்றபோது, தாங்கள் நினைத்தால் பத்தாயிரம் வேலைவாய்ப்புகளையும் பெற்றுத் தரலாம், ஆனால், அப்படி செய்தால் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு என்பது பாதிக்கப்பட்டு விடும் என எமது பிள்ளைகளிடம் கூறி, அப்பிள்ளைகளின் கனவுகளை – வாழ்க்கையினை அடியோடு சிதைத்த தமிழ்த் தரப்பினர் இன்று ‘கம்பெரலியவுடன்’ புரண்டு கிடக்கிறார்கள்

அபிவிருத்தியே வேண்டாம் என தங்களது அரசியல் வரலாற்றிலேயே கூறி வந்தவர்கள், திடீரென எப்படி இப்போது அபிவிருத்தியில் இறங்கிவிட்டார்கள்? எமது மக்கள்மீது அந்தளவுக்கு பாசம் வந்துவிட்டதா? என ஆராய்ந்து பார்த்தால், அதிலும் ஊழல் மோசடிகளை செய்வதற்குத் தான் இந்த நாடகத்தை இவர்கள் ஆடுகிறார்கள் என்பது தெரிய வருகின்றது.

இந்த ஊழல், மோசடிகளை அம்பலத்திற்குக் கொண்டு வர வேண்டும் என அது தொடர்பில் இந்தச் சபையிலே கேள்வி எழுப்பினால், அந்தக் கேள்விக்கு பதில் வழங்க முடியாமல், தட்டிக் கழிக்கபட்டது. இதிலிருந்தே தெரிகின்றது கம்பரெலியவில் இந்தத் தமிழ்த் தரப்பினர் எந்தளவு ஊழல், மோசடிகளை செய்திருப்பார்கள் என்பது.

ஆக, இந்தத் தமிழ்த் தரப்பினர், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதை உறுதிபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்றே எமது மக்கள் கதைக்கின்றனர்.

அந்த வகையில், எமது பகுதிகளில் இந்த ‘கம்பெரலிய’ கிராமப் பிறழ்வு இந்த தமிழ் அரசியல்வாதிகள் அரசைவிட்டு பிறழாது இருப்பதற்கு கொடுக்கப்பட்ட இலஞ்சமாகவே எமது மக்களால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு என மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் ஒரு காப்புறுதித் திட்டம் ‘சுரக்சா” – அதாவது பாதுகாப்பு என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அது தொடர்பில் அண்மைக்காலமாக சில பிரச்சினைகள் எழுப்பப்பட்டு வந்தன.

100 மில்லியன் ரூபா நிதி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் மூலமாக கல்வி அமைச்சருக்கோ அல்லது கல்வி அமைச்சுக்கோ வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்கு தற்போது விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிய வருகின்றது. அதன் ஒரு கட்ட விசாரணைகளின் பிரகாரம், மேற்படி காப்புறுதித் திட்டத்தின் முதற் கட்டம் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக செயற்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் அதை ஜே. டீ. போடா (J. D. BODA) எனும் தரகு நிறுவனத்தின் ஊடாக மீள் காப்புறுதி செய்துள்ளதாகவும், இந்த தரகு நிறுவனமே இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு கொமிசன் தொகையினை வழங்கியதாகவும், இந்தத் தொகையானது மீள் காப்புறுதி தவணைகள் மூன்றுக்கென செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதில் ஒரு தவணைக் கொடுப்பனவிற்கான எழுத்து மூல ஆவணங்கள் தவிர ஏனைய இரண்டு தவணைகளுக்கான கொடுப்பனவு தொடர்பிலான எழுத்து மூல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அது காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் நிதிப் பிரிவே அறியும் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் தொடர்வதாகவும் அறியக் கிடைக்கின்றது.

அதேநேரம், மேற்படி காப்புறுதித் திட்டத்தின் பயனாளிகளான மாணவ, மாணவிகளின் விபரங்களைத் திரட்டியுள்ளதிலும் தகுந்த வழிமுறைகள் பேணப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது.

இங்கே கூறப்படுகின்ற ஜே. டீ. போடா (J. D. BODA) என்ற தரகு நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருந்த நிறுவனம் என்றும் கூறப்படுகின்றது. அதாவது, ஸ்ட்ரெடிஜிக் இன்சூரன்ஸ் பிரோக்கர்ஸ்; (Strategic Insurance Brokers) நிறுவனம் DSP/00007/2018 ன் கீழ் ஜே. டீ. போடா (J. D. BODA) நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கின்போது இந்த நிறுவனத்திற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதன் பின்னர் இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டதாகவும், மேற்படி நிறுவனம் இலங்கையில் மீள் காப்புறுதி தரகு தாரராக செயற்படுவது அல்லது அதற்கென முன்னிற்பது தடை என அந்த இடைக்காலத் தடை உத்தரவில் கூறப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.

எனவே, முன்வைக்கப்படுகின்ற திட்டங்கள் யாவும் ஏதோ வகையில் அதன் பயனாளிகள் எனக் குறிப்பிடப்படுவோருக்கு எவ்விதமான பயனையும் வழங்காமலேயே இருந்து வருவதையும், அவை ஒரு குறிப்பிட்ட சாராருக்கு பல்வேறு முறைகேடுகளுக்கு வழியவே வாய்ப்புகளை வழங்கி  வருவதையமே காணக் கூடியதாக இருக்கின்றது

கடந்த ஆண்டில் மதுவரித் திணைக்களம் மேற்கொண்ட சுற்றி வளைப்புகளின்போது சுமார் 203.46 மில்லியன் ரூபா அத் திணைக்களத்திற்கு வருமானமாகக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதேநேரம், இலங்கையில் மது பானங்களைத் தயாரிக்கின்ற சில நிறுவனங்கள் தமது உற்பத்திகள் தொடர்பில் சரியான – உண்மையான புள்ளி விபரங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால் அரசாங்கம் வருடாந்தம் 10 முதல் 12 பில்லியன் ரூபா வரையில் மது வரி வருமானத்தை இழந்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

இதைவிட சட்ட ரீதியற்ற மதுபான உற்பத்திகளில் ஈடுபடுவோர் காரணமாகவும் பாரிய வருமான இழப்பிற்கு அரசு உட்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மதுவரிக் கட்டளைச் சட்டமானது சுமார் 106 வருடங்கள் பழைமைவாய்ந்தது என்பதால், அதனை மறுசீரமைத்து, புதிய வழிமுறைகள் மற்றும் வினைத்திறன் மிக்கதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

மேலும், அண்மைக் காலமாக மது வரித் திணைக்களத்தில் அதிகாரிகளின் பதவி உயர்வுகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுவந்ததை அறியக் கூடியதாக இருந்தது. துணை மது வரி ஆணையாளர்களை பிரதி மது வரி ஆணையாளர்களாக பதவி உயர்த்துவதில் இழுபறி நிலைமை காணப்படுவதாகவும், இதனால் மேற்படித் திணைக்களத்தின் பணிகள் முடங்கிய நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது. அதன் தற்போதைய நிலை என்னவென அறியத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்

Related posts:

வடக்கு  மாகணத்திலுள்ள கைத்தொழில்சாலைகளை மீளியக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வல...
டொரிங்டன் தோட்ட, கல்மதுரை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலி...
ஊடகங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...