புத்தபெருமானின் சிலையை ஒரு ஆக்கிரமிப்பு அடையாளமாக சில இனவாதிகள் பாவிப்பது தடுக்கப்பட வேண்டும்-நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா

Thursday, December 8th, 2016

இந்த நாட்டில் நீதி அமைச்சராக இருப்பவரே புத்த சாசன அமைச்சராகவும் இருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயம் என்றே நான் கருதுகின்றேன். அந்த வகையில், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாதுள்ள ஒரு விடயம் தொடர்பில் முதலில் இங்கு அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

1938ம் ஆண்டு சேனாநாயக்க சமுத்திரம் உருவாக்கப்பட்டதன் பின்னர் அப்போது கற்குகைகளில் வாழ்ந்திருந்த சுமார் 7 ஆதிவாசிகளின் குடும்பங்கள், அக் குடும்பங்களது காட்டு வாழ்க்கையை முடிவுறுத்தி அழைத்து வரப்பட்டு, பிபிலை பிரதேசத்தில் ரத்துகல பகுதியில் குடியமர்த்தப்பட்டு, தற்போது சுமார் 78 வருடங்கள் ஆகின்ற நிலையில், அக்குடும்பங்கள் 108 குடும்பங்களாகப் பெருகி இருக்கும் நிலையில், அக் குடும்பங்களுக்கு எவ்வித அரச உதவிகளும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் காட்டு வாழ்க்கைக்கே திரும்பிச் சென்று விடுவோமா? என்றுகூட நினைக்கும் அளவுக்கு அந்த மக்கள் இந்த வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையே தோன்றியிருந்ததாகவும் தெரிய வந்தது.

எனவே, இந்த மக்களின் தேவைகளை உரிய அமைச்சுக்களுடன் இணைந்து பூர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டும் எனக் கௌரவ அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்  என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (08) வரவு – செலவுத் திட்டத்தின் புத்ததாசன அமைச்சு, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சுத் தொடர்பான குழு நிலை விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையி லயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து  தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் தென் பகுதிகளில் பல பௌத்த விஹாரைகள் பொருளாதாரமின்மை காரணமாக மூடப்பட்டு வந்த நிலைமையை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது. இவை சிறிய விஹாரைகளாக இருந்தும், அவற்றால் அந்தந்த பகுதிகள் – கிராமங்கள் மத, கலாசார, பண்பாட்டு விழுமியங்களால் கட்டியெழுப்பப்பட்டு வந்தன என்பது உண்மையே. எனவே, இந்த நிலைமைகள் தொடராமல், அந்தக் கட்டமைப்பினை உறுதிப்படுத்தவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடு, இந்த நாட்டில் எந்தவொரு இடத்திலும் கௌதம புத்த பெருமானின் சிலைகளை வைப்பதற்கு அந்த மதத்தை வழிபடுவோருக்கு முழமையான உரிமை இருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், அந்த மதத்தை வழிபடும் மக்கள் இல்லாத பகுதிகளில் வேறு மத மக்கள் வாழும் நிலையில், அவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்தச் சிலைகளை வைப்பதே தற்போது ஒரு முரண்பாட்டு நிலையை எமது சமூகங்களிடையே ஏற்படுத்தி வருகின்றது என்பதையும், மதங்களுக்கிடையிலான சமத்துவங்கள் பேணப்பட வேண்டும் என்பதையும், இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாகக் கூறப் போனால், இவ்வாறான சிலரது செயல்கள் காரணமாக கௌதம புத்த பெருமானின் சிலை என்பது ஓர் ஆக்கிரமிப்பின் அடையாளமா என ஒரு சாரார் நினைக்கும் அளவுக்கு மாறியிருப்பதால், கௌதம புத்த பெருமானின் மகிமை மதிக்கப்பட வேண்டிய நிலையில் அது, சில இனவாதிகளின் குறுகிய சுயலாபங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு, அவரது மகிமை புறக்கணிக்கப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது.

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இந்த அரசு கொண்டுள்ள சிந்தனைகளை இவ்வாறான செயற்பாடுகள் சிதைப்பதாகவே இருக்கின்றன என்பதால், இவ்வாறான செயற்பாடுகள் தடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு, குறிப்பாக, கடந்த யுத்த காலத்தில்கூட நயினாதீவு விஹாரையையும், யாழ் நகரிலுள்ள நாக விஹாரையையும் பாதுகாத்து வந்துள்ளனர். குறுகிய சுயலாபங்களுக்காக சிலர் நாக விஹாரையை உடைத்த போதிலும் அது பின்னர் உரிய முறையில் கட்டியெழுப்பப்பட்டு, இன்றும் எமது மக்கள் அந்த விஹாரைகளுக்குரிய கௌரவத்தை வழங்கி, பேணி வருகின்றனர். இந்த நிலையே நாடெங்கிலும் பின்பற்றப்பட வேண்டும் என விரும்புகின்றேன்.

தபால் சேவையை நவீன மயப்படுத்த வேண்டும்நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

எமது நாட்டின் பொது மக்களுடன் பரிச்சயமான மிக முக்கிய துறையான தபால் சேவையானது இன்றைய பல்வேறுபட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பிரபலமாகாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், அதன் முக்கியத்துவத்தின் அவசியம் தொடர்ந்து எமது மக்களுக்கு இருப்பதாகவே கருதுகின்றேன். அந்த வகையில் இத் துறையானது மேலும், மேலும் நவீனமயப் படுத்தல்களுக்குத் தொடர்ந்து உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அந்த நிலையில், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இத்துறை சார்ந்து சில தேவைகளை இங்கு முன்வைக்கலாம் என நினைக்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

யாழ் தபாலகத்தில் மெயில் கொண்டு செல்ல ஒரேயொரு தரமற்ற வாகனமே இருப்பதால் இன்னொரு வாகனமும், மின்சாரம் தடைப்படும் நேரத்தில் பயன்படுத்த ஒரு மின் பிறப்பாக்கியும் தேவை.

மேலும், யுத்தத்திற்கு முன்னர் முல்லைத்தீவில் அமைந்திருந்த தபாலதிபருக்கான அலுவலகத்தை அங்கு மீள அமைப்பதற்கும், வருமானம் கூடிய தபாலகங்களைத் தரமுயர்த்துவதற்கும், உப தபால் அதிபர்களாகக் கடமையாற்றுவோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதால், அவர்களுக்கான வீட்டு வசதிகள் தொடர்பிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கும், அவர்களுக்கான பதவி உயர்வுகளை வழங்குவதற்கும், உயரதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கும், மேலதிக சீருடைகளை தபாலகப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கும், தரமான மழை அங்கிகளை வழங்குவதற்கும், போதியளவிலான துவிச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கும் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கில் 14 தபாலகங்கள் தனியார் கட்டிடங்களிலேயே இயங்குகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

கடந்தகால யுத்தம் காரணமாக வடக்கில் 6 உப தபாலகங்கள் இதுவரையில் மீளத் திறக்கப்படாதுள்ளன. (யாழ்ப்பாணத்தில் மையிலிட்டி, தையிட்டி – கிளிநொச்சியில் முகமாலை – மன்னாரில் பண்டாரவெளி, முள்ளிக்குளம் – முல்லைத்தீவில் கொக்குத்தொடுவாய்). அவை தொடர்பிலும், மக்கள் தற்போது அதிகளவில் மீளக் குடியமர்த்தப்பட்டு வருவதால், அக் குடியேற்றங்களின் தேவைக்கு ஏற்ப வடக்கு மாகாணத்தில் புதிய தபாலகங்களைத் திறப்பது குறித்தும் அவதானம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 14 தபாலகங்கள் இன்னும் தனியார் கட்டிடங்களிலேயே இயங்கி வருவதால், இவற்றுக்கான கட்டிட ஏற்பாடுகளுக்கான  நடவடிக்கைகளை எடுக்கும்படியும்; கேட்டுக் கொள்வதுடன், இதற்கு முன்னர் எமது நாட்டில் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சினால் முஸ்லிம் கலைஞர்கள், இலக்கியவாதிளுக்கு விருதுகள் மற்றும் நிதிக் கொடைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதைப்போல், இன்று சமூகத்தில் இருக்கின்ற முஸ்லிம் கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளை ஊக்குவித்து, கௌரவிப்பதற்கும்,  மேலும், பள்ளிவாயில்கள் தோறும் மத்ரஸாக்கள் மூலமான கல்விமுறைமையைக் கட்டியெழுப்பும் முகமாகவும், அதனை ஊக்குவிக்கும் முகமாகவும் அந்தக் கற்கை நெறிகளைப் போதிக்கின்ற மௌலவிமாருக்கு ஒரு மாதாந்த ஊதியத் தொகையை தொடர்ச்சியாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கும் படியும் கௌரவ அமைச்சர் ஹலீம் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கிலும்  சுற்றுலாத் தளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

இலங்கையில் தற்போது சுற்றுலாத்துறைப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுகின்றது. அதே நேரம், கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சைப் பொறுத்த வரையில் அமைசர் அவர்கள் ஆயர்களது கூட்டங்களிலும் தொடர்ந்து கலந்து கொண்டு வருவதால், பாரபட்சமற்ற வகையில் அனைத்துப் பகுதிகளுக்குமான சமய அலுவல்களை அவர் முன்னnடுத்து வருகிறார். அந்த வகையில் கௌரவ அமைச்சர் ஜோன் அமரதுங்ஹ அவர்கள் முன்னnடுத்த வருகின்ற நடவடிக்கைகள்  பாராட்டத்தக்கவையாக உள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .

அந்த வகையில், தற்போது அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளால் வளர்ச்சி பெற்று வருகின்ற எமது சுற்றுலாத்துறையின் விரிவாக்கம் – மேம்பாடு கருதி வடக்கின் சுற்றுலாத் தளங்களையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. வடக்கை நோக்கியும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு இந்த ஏற்பாடுகள் அவசியமாகும் எனக் கருதுகின்றேன்.

குறிப்பாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக, கூட்டாக வருவோர் உட்பட வடக்கின் கரையோரப் பகுதிகளை அதிகமாக நாடி வருகின்றனர். இந்தப் பகுதிகளிலேயே அதிக காலத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சாட்டி மற்றும் கசுரினா கடற்கரைகள், காரை நகர் கடற்கோட்டை, காங்கேசன்துறை கடற்கரை, பருத்தித்துறை, நெடுந்தீவு, நயினாதீவு போன்ற இடங்கள் இவற்றுள் முக்கியத்துவம் பெறுகின்றன.

எனவே, இந்த இடங்களை அதிக அபிவிருத்தி செய்வதற்கும், அதே நேரம், தற்போதைய நிலையில் நெடுந்தீவு, நயினாதீவு போன்ற தீவுப் பகுதிகளை நோக்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதற்கு ஏற்ப படகு போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வதற்கும், அந்தப் பகுதிகளில் விடுதிகள் மற்றும் சிறந்த உணவு வகைகளை அவர்கள் பெற்றுக் கொள்வதற்கும், உரிய ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியமாகவுள்ளது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புவதுடன், வடக்கில் மேலும் பல சிறந்த – இயற்கை செழிப்புமிகு இடங்கள் உள்ளன. அவற்றையும் இனங்கண்டு விருத்தி செய்வதற்கும் கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

10.-1-300x229

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 7 ஜூலை 2011 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
கிளிநொச்சி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கு நீர் வசதி விரைவில் கிட்டும் - டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத...
குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம...

மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காணமுடியாத நிலை காணப்படுவதேன்?...
ஆணைக்குழுக்களால் கண்டபயன்கள் ஏதுமில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளு+ராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரத...