செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 8 டிசம்பர் 2012  அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, December 8th, 2012

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே!

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, நான் சொல்லும் கருத்துக்கள் தனிநபர் கருத்துக்களே தனியொரு குழுவின் கருத்துக்களோ அல்லது தனியொரு கட்சி சார்ந்த கருத்துக்களோ அல்ல. இவை மனிதகுலம் சார்ந்த கருத்துக்கள் ஒரு மக்கள் சமூகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருத்துக்கள். மனித நாகரிகத்தை விரும்பம் எந்தத் தரப்பாலும் ஏற்க முடிந்த கருத்துக்கள். நான் இங்கு பேசும் கருத்துக்கள்  நீண்ட வரலாற்று அனுபவங்களைக் கொண்டவை. சுமார் 15வருட கால ஆயுதப் போராட்ட அனுபவங்களையும்  20 வருடங்களுக்கு மேலான ஜனநாயக வழிமுறையிலான அனுபவங்களையும் கொண்டவை என் கருத்துக்கள்.

எமது மக்கள் முப்பதாண்டு கால போருக்குப் பின்னர் இப்போதுதான் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுக்கிறார்கள். இப்பொழுதுதான் இந்த மக்களுக்கு ஒரு புதிய உலகத்தின் அனுபவம் கிடைத்துள்ளது. குறிப்பாக வன்னியிலிருக்கம் இளைஞர்கள் உலக ஓட்டத்திலுள்ள பல விடயங்களை இப்பொழுதுதான் அறிந்து வருகிறார்கள். ஆனால் இதற்கிடையில் இந்த நல்ல நிலைமையைப்; பாழாக்குவதற்குச் சில சக்திகள் முயற்சிக்கின்றன. இது கண்டிக்கப்படவேண்டிய வேண்டியது. தீர்வுத் திட்டத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு அதற்கு எதிராக பிரச்சினைகளை உருவாக்கும் இந்த நடவடிக்கைகள் யாரும் அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே இருந்த புலிகளின் தலைமை முள்ளிவாய்க்கால் வரையில் மக்களை இழுத்துச் சென்று மரணச்சூழலில் தள்ளியதைப்போல மீண்டும் ஓர் அழிவுப் பாதையில் தள்ளிவிடுவதற்கு அதே புலிக்கொடியை ஏந்திய புலம்பெயர் தமிழர்கள் சிலர் முயற்சிக்கிறார்கள். இவர்கள் பாதிக்கபட்ட மக்களுக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் உதவலாம். ஆனால் பாதிப்புக்களை உரு வாக்குவதற்கு முயற்சிக்கக்கூடாது. மாற்றம் ஒன்று நிகழும் என்பதைத் தவிர இங்கு மாறாதிருப்பது எதுவுமேயில்லை. இந்தக் கருத்தில் நானும் என்னைப் போன்றவர்களும் மிக நீண்ட காலமாகவே  உறுதியாக இருந்து  வந்திருக்கின்றோம். மாற்றங்களை உருவாக்குவதற்கு நாம் கையாளவேண்டிய வழிமுறை என்பது கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்தும் சாணக்கிய தந்திரங்களே ஆகும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது எமது வரலாற்றுச் சூழலில் பாரியதொரு மாற்றத்தை உருவாக்கியிருந்தது. சம்பந்தப்பட்ட தமிழ்த் தலைமைகள் அந்த மாற்றத்தை உணர்ந்து அதை எமது மக்களுக்கான ஓர் அரிய வாய்ப்பாகப் பய்னபடுத்த மறுத்ததனால் 22 வருடங்களாக இலங்கைத் தீவு இரத்தத் தீவாக மாறியிருந்தது. இழந்த உரிமைகளைப் பெறவேண்டிய எமது மக்கள் இருந்த உரிமைகளையும் பலிகொடுத்து நிற்க யுத்த சூழலுக்குள் எமது நாடு சிறைப்பட்டுக் கிடந்திருக்கிறது.எந்தவொரு மக்கள் சமூகத்திற்கும் தேவiயான அடிப்படை உரிமை என்பது உயிர் வாழ்வதற்கான உரிமை ஆகும். சுவர் இருந்தால் மட்டும்தான் சித்திரம் வரைய முடியும்.

அதுபோல் எமது மக்களும் உயிர் வாழ்வதற்கான உரிமை பெற்றவர்களாக இருந்தால் மட்டுமே நாம் அனுபவிக்க முடிந்த சகல உரிமைகளையும் அடைய முடியம்.உரிமைகளைப் பெறுவதற்கான வழி என்பது அழிவு யுத்தமல்ல. இதைநாம் இலங்கை – இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டத்திலிருந்து இறுதிவரை உறுதியாகத் தெரிவித்து வந்திருக்கின்றோம். அழிவுயுத்தத் தினால் எது நடக்கும் என்று நாம் தெரிவித்திருந்தமோ அதுவே இங்கு நடந்த முடிந்திருக்கின்றது. எது நடக்கப்போகின்றது என்று நாம் தீர்க்கதரிசனமாக தெரிவித்திருந்தமோ அதுவும் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது. எது நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தமோ அதுவே இங்கு நடக்கப் போகின்றது. இப்போத எமது மக்களுக்கு அச்சம் தரும் சூழல் இல்லை. துப்பாக்கிச் சத்தங்கள் இல்லை.

மரணங்கள் ஓலங்கள் இல்லை. மனித அவலங்கள் இல்லை. இந்த மாற்றத்தை உருவாக்கித் தந்திருக்கும் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நான் தமிழ் மக்களின் சார்பாக நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். அழிவு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்தின் படைகள் மட்டுமல்ல தமிழ் மக்களும் அளவுக்கதிகமாக விலையினைச் செலுத்தியிருக்கின்றார்கள்.அதாவது உயிரிழப்பு சொத்திழப்பு இடம்பெயர்வு என்று ஏகப்பட்ட இழப்புக்களை எமது மக்கள் சந்தித்திருக்கிறார்கள். ஆகவே நாம் அதிக விலை செலுத்தி வாங்கிய அமைதியானதும் அச்சமற்றதுமான  இந்தச் சூழலை நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் நின்று எமது அரசியலுரிமைப் பெற்றுக் கொள்வதற்காகச் சரியாகப் பயனபடுத்த வேண்டும்.

எஞ்சியுள்ள மக்களையும் மீளக் குடியமர்த்துதல், உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பிரதேசங்களை மக்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றுதல், மீளக்குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை உருவாக்கிக் கொடுத்தல் என்பன இன்று நடந்து கொண்டிருக்கின்றன.நாம் சொன்னதுபோல் கட்டங்கட்டமாக இவற்றினை அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது. அதற்குப் பாதுகாப்பு தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்தச் செயற்பாடுகள் எமக்கு நம்பிக்கையினை வளர்த்திருக்கின்றன.

அழிவு யுத்தத்தில் இருந்து மீண்டுவந்த எமது மக்களுக்;கான வாழ்வாதார வசதிகளை முழுமையாக நிறைவேற்றிக் கொடுத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு நாம் செல்லத் தயாராக வேண்டும். 13வது  திருத்தச் சட்டத்தின் பிரகாரம் வடமாகாண சபைக்கான தேர்தல் நடாத்தப்பட்டு அது மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளதுபோன்று மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதேநேரம் 13வது திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும் சமவுரிமையும் கூடிய அரசியல் சூழலை உருவாக்குவதற்காக நாம் உழைக்க வேண்டும்.

கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, கடந்தகால அழிவு யுத்தச் சூழலில் வெறும் வன்முறைகளை மட்டுமே கண்டும் கேட்டும் வந்திருந்த எமது மக்கள் முழுமையாக ஒரு ஜனநாயக சூழலுக்குள் வாழ்வதற்கான வழிகளை நாம் விரைவாகத் தேட வேண்டும். எமது மக்கள் சமூகத்தை முழமையாக ஜனநாயக மயப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக மாற்றியமைக்க வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் முயற்சிகள் மட்டுமன்றித் தமிழ்த் தலைமைகளின் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது, ஒரு கையினால்  மட்டும் ஓசை எழுப்ப முடியாது. இரு கைகள் இணைந்தால் மட்டுமே ஓசை எழுப்பும்.

அதுபோல் இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சகல உரிமைகளிலும் சம உரிமை பெற்றவர்களாக வாழ்வதற்குச் சகல தமிழ் தலைமைகளும் இந்த அரசுக்குத் தமது ஒத்துழைப்பை இனியாவது வழங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன். அதற்கான மனமாற்றங்கள் தெரிகின்றன. இந்த மனமாற்றங்கள் உண்மையுள்ளதாக இருக்கட்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே சகலரும் கடந்தகால தவறுகளை உணர்ந்திருக்கின்றார்கள் என்று அர்த்தமாகும். தவறு செய்யாதவன் யார்? என்று கேட்டால் பிறக்காத குழந்தையும் இறந்த மனிதன்தான் என்று மாபெரும் தத்துவ மேதை சொன்ன விடயம் எனக்கு ஞாபகம் வருகின்றது.

ஆகவே துரதிருஷ்டவசமாகச் சில தமிழ்த் தலைமைகள் செய்த குற்றங்களுக்காக அப்பாவித் தமிழ் மக்களே கடந்த காலங்களில் அழிவுகளைச் சந்தித்த துயரங்கள் இங்கு நடந்து முடிந்திருககின்றன. இனியும் தவறுகள் இங்கு நடக்காதென்றே நான் நம்புகின்றேன். நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லதாகவே இருக்க வேண்டும் என்பதற்கான நல்லெண்ண சமிக்ஞையோடு வருபவர்கள் யாராக இருப்பினும் அவர்களை வரவேற்கவேண்டும்.

அண்மையில் இலண்டனுக்கு ஜனாதிபதி அவர்கள் சென்றிருந்த போது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் சில அங்குள்ள  மக்களை ஆர்ப்பாட்டங்களை நடத்த தூண்டிவிட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த மக்களை உணர்ச்சியூட்டும் விதமான பிரச்சாரங்களை அங்கே முன்னெடுத்து வருகின்றன. அரசாங்கம் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்து வருகின்றது. அதுமட்டுமல்ல விடுவிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புக்களையும் வழங்கி அவர்களைச் சமூக வாழ்வில் இணைத்து வருகிறது.இது ஓர் ஆக்கபூர்வமான நடவடிக்கையாகும்.

இவ்வாறு ஏறக்குறைய 5000க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுக்குள் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றகரமான நடவடிக்கை இதுவாகும். இதேவேளை யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் மீள்குடியேற்றப் பணிகளையும் சமகாலத்தில் அரசாங்கம் செய்துள்ளது. இதுவரையில் ஏறக்குறைய 90சதவீதமான மக்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்னர்.

இரண்டு ஆண்டுகளுக்குள் போர் நடந்த பகுதிகளில் மீண்டும் இந்த மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.என்பதை நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதைப் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற பெரும்பாலானோர் மிகத் தெளிவாகப் புரிந்துவைத்துள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவiயான  உதவிகளைப் பகிரங்கமாகவே செய்ய முன்வந்திருக்கிறார்கள். ஆனால் இன்னொரு தரப்பினர் திரை மறைவில் அழிவு மற்றும் நாசகார வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் மீண்டும் மக்களை அழிவுப் பாதையில் கொண்டு போகவே விரும்புகின்றனர். சகல மக்களினதும் மன உணர்வுகளை நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த நாட்டில் யுத்தம் நடக்கும் வரை மனித உரிமை மீறல்களும் நடந்துகொண்டே இருக்குமென்று நான் பல தடவைகள் கூறி வந்திருக்கினறேன். யுத்தம் நடக்கும்வரை மனிதப் படுகொலைகளும் நடந்து கொண்டே இருக்குமென்று நான் இந்தப் பாராளுமன்றத்தில் கூடத்தில் தெரிவித்திருக்கின்றேன். இந்த நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான பல சந்தர்ப்பங்கள் எம்மைக் கடந்து போயிருக்கின்றன. அப்போதெல்லாம் அரசியல் தீர்வுக்கு உடன்பட்டுச் செல்லுங்கள் என்றும் அரசியல் தீர்வாக கிடைப்பதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கோரிப் புலம்பெயர் மக்கள் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தால் இன்ற அதுபோன்ற அவலங்க ளைக் காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய தேவை அவர்களுக்கு வந்திருக்காது.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி. இதுதான் உண்மையும் கூட. இலங்கை – இந்திய ஒப்பந்தம், பிரமேதாஸ – புலிகள் பேச்சுவார்ததை, சந்திரிக்கா – புலிகள் பேச்சுவார்த்தை, ரணில் விக்கிரமசிங்க – புலிகள் பேச்சுவார்தை ஆகிய சகல சந்தர்ப்பங்களிலும் போதும் யுத்தத்தின் மூலம் உரிமையை வென்றெடுப்போமென்று தெரிவித்தே பேச்சுவார்த்தைகளைப் புலிகளின் தலைமை முறித்துக் கொண்டு சென்றிருந்தது. இதற்கு அப்போதைய சில தமிழ்த் தலைவர் களும் ஆதரவளித்து வந்தனர். அவ்வேளையில் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகுறித்து நாம் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம். ஆனாலும் துரதிஷ்டவசமாகப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அவைகளைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர். கடைசியான சந்தர்ப்;பம் தற்போது கிடைத்திருக்கின்றது. ஆகவே இந்தச் சந்தர்ப்பதை நாங்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவறுகள் நடந்தால் குற்றங்கள் இருப்பின் அவை தாராளமாக வெளிக்கொண்டுவரப் வேண்டும்.அவ்வாறு வெளிக்கொண்டு வரப்படும் வேளைகளில் அவைகளை ஆராந்து உரிய நடவடிக்கை எடுக்கப்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடக்கப்போவது நல்லதாக நடக்கட்டும் என்று கூறி விடைபெறுகின்றேன் நன்றி. வணக்கம்.

8 டிசம்பர் 2012

Related posts:

டொரிங்டன் தோட்ட, கல்மதுரை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலி...
தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா !
வடக்கில் மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்புக்காகத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் – நாடாளுமன...

கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில்...
இறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பதன் மூலமாக எமது உற்பத்திகளுக்கான உள்ளூர் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கலா...