வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, December 7th, 2016

வடக்கில் மின்சாரம் பெறுவதற்கு இயலாதுள்ள வறிய குடும்பங்களுக்கு ‘நாடே வெளிச்சத்தில் – இருள் அகற்றப்படுகின்றது’ என்னும் தேசிய மின்சார வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு விஷேட ஏற்பாடு செய்து  மின்சார வசதியினைப் பெற்றக்கொடுக்க நடவடிக்கை எடுத்து உதவுமாறும், அல்லது வடக்கின் வசந்தம் திட்டத்தைத் தொடர நடவடிக்கை எடுக்குமாறும்  கேட்டுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி விவகார அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தற்போது பல இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருவதையிட்டும், அப்பகுதியின் மின்சாரத் தேவைகள் தொடர்பாக அடிக்கடி அவதானித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பிலும் கௌரவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய அவர்களுக்கும், பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், மேலும் சில ஏற்பாடுகள் எமது பகுதியிலே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. இங்கு, நேரம் கருதி அவற்றை மாத்திரம்  சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாக, மீள்குடியேற்றப் பகுதிகளில் பல இன்னும் மின்சார வசதியினை – மின்சார இணைப்புகளைப் பெறாத நிலையே காணப்படுகின்றன. இதற்கு, அம்மக்களது பொருளாதார வசதியின்மையே பிரதான காரணமாக அமைகின்றது.

கடந்தகால யுத்தம் காரணமாக எமது மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்தே இன்று மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில். அவர்களிடம் பொருளாதார வசதிகளை எதிர்பார்க்க முடியாத நிலையே காணப்படுகின்றது. அதே போன்று தற்போதைய நிலையில் அவர்களுக்கான வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையும் காணப்படுகின்றது.

இதன் காரணமாக நாம், கடந்த காலங்களில் இவ்வாறு மீளக் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்புக்களை வழங்கி வந்தோம். அந்த வகையில் இந்தத் திட்டத்தை முன்னெடுத்து மீள்குடியேறிய எமது மக்களுக்கு மின் இணைப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு கௌரவ அமைச்சர் அவர்கள் ஏற்பாடுகளை செய்து எமது மக்களுக்கு உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே போன்று வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கும் இதே நிலையே ஏற்பட்டுள்ளது. சமுர்த்திக் கொடுப்பனவுகளில் கழித்துக் கொள்ளும் வகையில் மின் இணைப்புகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்ற போதிலும், அந்த சமுர்த்தி உதவிகளை நம்பியே வாழ்ந்து வரும் நிலையில் இருக்கின்ற எமது மக்களில் பலருக்கு அந்த ஏற்பாடுகூட ஏற்புடையதாக இல்லாத நிலையே காணப்படுகின்றது.

இந்த நிலையில், ‘நாடே வெளிச்சத்தில் – இருள் அகற்றப்படுகின்றது’ என்கின்ற தங்களது தேசிய மின்சார வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு விஷேட ஏற்பாடாக மேற்படி மக்களும் மின்சார வசதியினைப் பெற நடவடிக்கை எடுத்து உதவுமாறும், அல்லது அதே வடக்கின் வசந்தம் திட்டத்தைத் தொடர நடவடிக்கை எடுக்குமாறும்  கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், தற்போது எமது கோரிக்கைக்கு அமைவாக, எழுவைதீவுக்கு காற்றாலை மூலம் மின்சாரம் வழங்கப்படுகின்ற நிலையில், மின் பிறப்பாக்கிகள் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வரும் வடக்கின் ஏனைய தீவுகளான நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவுப் பகுதிகளில் இந்த பிறப்பாக்கிகள் அடிக்கடி பழுதடைந்துவிடும் காரணத்தாலும், போதியளவு மின் விநியோகம் இன்மையாலும், அதிக செலவினையும் கருத்தில் கொண்டு  மேற்படி காற்றாலை மூலமான மின்னுற்பத்தி வசதிகளை இப்பகுதிகளுக்கும் செய்து கொடுக்குமாறும் கௌரவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம் யாழ் குடாநாட்டில் மின்தடை தற்போதும் இடம்பெற்று வருகின்றன. அதே போன்று கொழும்பிலும்கூட ஞாயிற்றுக்கிழமை உட்பட வார நாட்களிலும் திடீர் திடீர் என இவ்வாறான மின் தடைகள் ஏற்படுவதைக் காண முடிகின்றது. தொழில்நுட்ட ரீதியிலான ஏதேனும் கோளாறுகள் இதற்குக் காரணமா? அல்லது வேறேதும் காரணங்கள் உண்டா என்பது பற்றி அறியத் தருமாறும், இவ்வாறு தடைகளை ஏற்படுத்தாத வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே போன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1500க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும், முல்லைத்தீவில் சுமார் 6000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. இக் குடும்பங்களும் மானிய அடிப்படையில் மின் இணைப்பைப் பெறும் நிலையிலுள்ள குடும்பங்களாகவே இருக்கின்றன என்பதையும் இங்கு அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

அத்துடன், அம்பகமுவ பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கால்வாய்களை மையப்படுத்தி சிறிய பரிமாணத்திலான நீர் மூல மின்சார உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அங்குள்ள நீரக உயிரினங்கள் மற்றும் நீர்த் தாவரங்கள் என்பன அழிவடைந்து வருவதாகக் கூறப்படுகின்றது.

அதே நேரம், யடியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடமோதர பகுதியில் களணி கங்கையை மறைத்து மேற்கொள்ளப்படவுள்ள உத்தேச கிதுல்கல மின் உற்பத்தி நிலையத்தை செயற்படுத்தவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுதாகவும், இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அப்பகுதியில் பாரிய மண் சரிவுகள், வெள்ளம் மற்றும் பாரிய சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்களால் சுட்டிக் காட்டப்படுகின்றது.

எனவே, இவ்விடயங்கள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்;;கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்கு ஒன்று தொடர்பாக நேற்று மாலை தனது நாடாளுமன்ற உரையில்  பிரஸ்தாபித்துள்ளார்.

ஆனால் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு சட்டத்தின் பிரகாரம் அதனை விவாதிக்கவோ, விமர்சிக்கவோ முடியாது. ஆகையால் நாடாளுமன்ற ஹான்சாட்டிலிருந்து அதனை அகற்றுமாறு கௌரவ சபாநாயகர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

Related posts:

மலையக மக்களும் இலங்கையின் இறையாண்மையுள்ள தமிழ் மக்கள்தான்- நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்த...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 3 டிசம்பர் 2011 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் - டக்ளஸ் எம்.பி. அஞ்ச...