பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்தக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, February 22nd, 2018

 

குற்றங்கள் நிகழும்வரையில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு குற்றம் நிகழ்ந்த பின்னர் ஓடிச் சென்று பிடித்து தண்டப் பணம் அறவிடுவதைவிட, குற்றங்கள் நிகழும் முன்பதாக அவற்றைத் தடுக்கக்கூடிய பணிகளிலும் போக்குவரத்து பொலிஸார் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டால், போதியளவு குற்றங்களைத் தடுக்க முடியும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான கட்டளை 203ஆம் அத்தியாயம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொணடு கருத்துத தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர மேலும்; தெரிவிக்கையில்  –

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான கட்டளை 203ஆம் அத்தியாயம் தொடர்பில் எனது கருத்துக்களையும் இங்கு முன்வைப்பதற்கு எனக்குச் சந்தர்ப்பம் வழங்கியதையிட்டு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மோட்டார் போக்குவரத்து தொடர்பில் கருத்து கூறுகின்றபோது, எமது நாட்டில் நாளாந்தம் அதிகரித்து வருகின்ற வாகன விபத்துகள் குறித்தே மிக முக்கிய அவதானத்தைச் செலுத்த வேண்டியிருக்கின்றது.
அந்த வகையில் கடந்த வருடத்தில் மாத்திரம் சாரதிகள் மற்றும் பாதசாரிகளினால் வீதி ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிக்காததன் காரணமாக சுமார் 40 ஆயிரம் வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக 2,922 வீதி வாகன விபத்துகளில் 3,100 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் சுமார் 7,500 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
பொலிஸ் தலைமையக வாகனப் பிரிவின் மூலமாக, வீதிச் சட்டங்களை முறையாக கடைப்பிடிக்காதோர் குறித்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது சுமார் 1 இலட்சம் பேர் அடையாளங்காணப்பட்டதாகவும், பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைகளில்; சிக்காதோர் மேலும் பலர் கடந்த வருடத்தில் இருந்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ள மேற்படி அறிக்கையானது, கடந்த வருடத்தில் வீதிச் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1 இலட்சத்து 40 ஆயிரம்பேருக்கு தண்டப் பணம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது.
கடந்த வருட புள்ளிவிபரங்களைப் பார்க்கின்றபோது வீதி விபத்துகள் காரணமாக 935 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அந்த வகையில் கடந்த சில வருடங்களைப் பார்க்கின்றபோது, வருடமொன்றுக்கு சுமார் 100 பாதசாரிகள் முறையாக வீதி ஒழுங்குகளைப் பின்பற்றி, பாதசாரிகளுக்கான கடவைகளின் ஊடாகப் பயணஞ் செய்கையில் முறையற்ற வாகன சாரதிகளால் கொல்லப்படுவதாகவும், சுமார் 1000 பேர் வரையிலான பாதசாரிகள் காயமடைவதாகவும் தெரிய வருகின்றது.
இத்தகைய வீதி விபத்துக்களைப் பார்க்கின்றபோது எமது நாட்டில் நாளாந்தம் சுமார் 10 பேர் வீதமாக வீதி வாகன விபத்துகளால் உயிரிழப்பதுடன், சுமார் 20 பேர் வரையில் அங்கவீனமாக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது, மேற்படி விபத்துகள் காரணமாக வருடத்திற்கு சுமார் 20 பில்லியன் ரூபா மருத்துவ செலவாக அரசு செலவிட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது என்பதையும் நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.
வேகக் கட்டுப்பாட்டினை மீறுதல், போதையில் வாகனத்தைச் செலுத்துதல் போன்ற காரணங்களும் மேற்படி வீதி விபத்துகளுக்கான காரணங்காளக முன்வைக்கப்படுகின்ற நிலையில், வீதி சமிக்ஞைகள், வீதிக் குறியீடுகளின் பொருத்தமற்ற தன்மைகள், வீதிகளின் மோசமான நிலைமைகள், பாதசாரி கடவைகளில் பொருத்தப்பட்டுள்ள போக்குவரத்து விளக்குகள் பொருத்தமான வகையில் செயற்படாமை, போக்குவரத்து மின்விளக்குகளுடன் காணப்படுகின்ற நேரமானிகளில் ஏற்படுகின்ற குளறுபடிகள் போன்றவையும் இத்தகைய விபத்துகளுக்கு காரணங்களாக முன்வைக்கப்படுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை.
அத்துடன், பாதசாரி கடவைகளில் இடம்பெறுகின்ற விபத்துகளில் 30 வீதமான விபத்துகள் கைத் தொலைப்பேசி பாவனை மூலமாக ஏற்படுவதாக இலங்கை தகவல் பொறியியல் பல்கலைக்கழகம் தகவல்களை வெளியிட்டிருக்கின்றது. பாதசாரிகள,; பாதசாரி கடவைகளைக் கடக்கின்ற போது கைத் தொலைப்பேசிகளைப் பயன்படுத்துவதாலும், வாகன சாரதிகள் வாகனங்களைச் செலுத்திக் கொண்டு பாதசாரிக் கடவைகளைக் கடச்கின்ற நிலையில் கைத் தொலைப்பேசியைப் பயன்படுத்துவதனாலும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
வேகக் கட்டுப்பாட்டினை மீறுகின்ற வாகனங்களின் சாரதிகளைப் பிடிப்பதற்காக இன்றும்கூட பல பொலிஸ் நிலையங்களில் நவீன இயந்திர சாதனங்கள் இல்லாத நிலையும், போக்குவரத்து பொலிஸாரின் பணிகள் அதிகாலை நேரங்களில் காணப்படாத நிலைமைகள் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது.
குற்றங்கள் நிகழும்வரையில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, குற்றம் நிகழ்ந்த பின்னர் ஓடிச் சென்று பிடித்து, தண்டப் பணம் அறவிடுவதைவிட, குற்றங்கள் நிகழும் முன்பதாக அவற்றைத் தடுக்கக்கூடிய பணிகளிலும் போக்குவரத்து பொலிஸார் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டால், போதியளவு குற்றங்களைத் தடுக்க முடியும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
மேலும், பாதை திருத்தங்கள் நடைபெறுகின்ற பாதைகளிலும், பாதை திருத்தங்கள் காரணமாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டிய இடங்களிலும் பொதுவாகவே தமிழ் மொழியில் அறிவிப்புகள் இடம்பெறுவதில்லை. இவ்விடயம் தொடர்பிலும் அவதானமெடுத்து, இத்தகைய சந்தர்ப்பங்களில் மும் மொழிகளிலும் அறிவிப்புகள் இடம்பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
அதே நேரம், கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு இடையிலான தனியார் பேரூந்து போக்குவரத்து சேவைக்கான வழித்தட அனுமதிக் கட்டணம் என்பது எமது நாட்டைப் பொறுத்த வரையில் மிகவும் அதிகமானதொன்றாகவே காணப்படுகின்றதாலும், வழித்தட அனுமதிகளின் பங்கீடுகளில் இடம்பெறுகின்ற முறைகேடுகளாலும், வழித்தட அனுமதியைப் பெறாமல் போக்குவரத்து சேவையில் பேரூந்துகள் சில ஈடுபடுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை. அதேநேரம், வழித்தட அனுமதிகளின் உரிய எண்ணிக்கையினை மீறிய வகையில் முறைகேடாக வழங்கப்படுகின்ற வழித்தட அனுமதிகளும் இல்லாமல் இல்லை. இத்தகைய நிலைமைகள் காரணமாக போக்குவரத்துகளின்போது பல்வேறு முறைகேடுகள், ஒழுங்கு விதிகள் மீறல்கள் போன்றவை மட்டுமன்றி, எரிபொருள் மாற்றுப் பாவனைகளும் மேற்கொள்ளப்படுவதால் அதிகளவில் சூழல் மாசுறுகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன.
எனவே, இத்தகைய நிலைமையினை அவதானத்தில் கொண்டு, போக்குவரத்து அமைச்சானது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மேற்படி வழித்தட அனுமதியின் கட்டணக் குறைப்பிற்கும், வழித்தட அனுமதி பங்கீடுகளில் முறைகேடுகள் இடம்பெறாதிருப்பதற்கும் வழிவகுக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி வடக்கு மகாணத்தைப் பொறுத்தவரையில் தனியார் பேரூந்து போக்குவரத்து சேவை தொடர்பில் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையையே இன்னமும் மேற்கொண்டு வருவதாகத் தெரிய வருகின்றது. வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையினை செயற்படுத்துவதற்கு நிதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு, அதனை செயற்படுத்துவதற்கான நிதியை தனியார் பேரூந்து உரிமையாளர்களிடம் கோரப்படுவதாகவும், வட மாகாண உள்ளூர் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பேரூந்துகளுக்கான வழித்தட அனுமதிக் கட்டணம் 3 ஆயிரம் ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபா வரையில் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. பின்னர் 7 ஆயிரத்து 500 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ள போதிலும் இதனை 5 ஆயிரம் ரூபாவாகக் குறைக்குமாறே தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரி வருகின்றனர்.
அதேபோன்று மாதாந்த லொக்சீற் கட்டணம் 200 ரூபாவிலிருந்து 1000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டு, பின்னர் 750 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை 500 ரூபா வரை குறைக்குமாறு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோன்று பழைய பேரூந்தினை விற்றுவிட்டு, புதிய பேரூந்து வாங்குவோருக்கான பதிவுக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபாவாக வடக்கிற்கு மாத்திரம் அதிகரிக்கப்பட்டள்ளதாகவும் தெரிய வருகின்றது.
எனவே, இத்தகைய நிலைமைகள் உடனடியாக மாற்றப்பட்டு, தென்னிலங்கையில் என்ன நியதியோ, அதே நியதியை வடக்கிலும் நிலைநாட்டுவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறத்த விரும்புகின்றேன்.
அதேநேரம், எமது நாட்டில் குறிப்பாக வடக்கு நோக்கிய இரயில் கடவைகள் பலவும் பாதுகாப்பற்றனவாகவே இன்றும் இருந்து வருகின்றன. இதனால், தொடர்ந்தும் பல விபத்துகள் இரயில் கடவைகளில் இடம்பெற்று வருகின்றன. வடக்கிற்கான இரயில் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பொலிஸ் திணைக்களத்தினால் பாதுகாப்பற்ற இரயில் கடவைகளின் பாதுகாப்பிற்காக பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எனினும், இதுவரையில் இவர்களது தொழில் ஒரு தொழிற்துறையாக ஏற்றுக் கொள்ளப்படாமலும், நிரந்தரமாக்கப்படாமலும் இருக்கின்றது. அத்துடன், இவர்களுக்கான மாதக் கொடுப்பனவு என்பது இவர்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்ள இயலாத வகையில் மிகவும் சொற்பமான ஒரு தொகையாகவே இருந்து வருவதுடன், விடுமுறைகள்கூட இல்லாத நிலை காணப்படுகின்றது.
மேற்படி பாதுகாப்பற்ற இரயில் கடவைகளின் பாதுகாப்புப் பணியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நான் பலமுறை இந்தச் சபையில் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, மேற்படி பணியாளர்களை இலங்கை புகையிரதத் திணைக்களத்துடன் இணைத்து, அவர்களது தொழிலை நிரந்தரமாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டக் கொள்கின்றேன்.
அத்துடன், இரயில் சேவையினை மேலும் அதிகரித்தும், தரமுயர்த்தியும் விஸ்தரிப்பதன் ஊடாக எமது நாட்டில் காணப்படுகின்ற வாகன நெரிசல்களுக்கு போதியளவு தீர்வு காணலாம் என எண்ணுகின்றேன். அந்த வகையில், வடக்கின் இரயில் சேவையில் பாரிய நெருக்கடிகள் காணப்படுவதால், இரண்டாவது தபால் இரயில் சேவையை ஆரம்பிப்பதற்கும், ரஜரட்ட ரெஜின உள்ளிட்ட நகரங்களுக்கு இடையிலான இரயில் சேவைகளை வவுனியாவிற்கும், கிளிநொச்சிக்கும் இடையில் நடத்துவதற்கும், காங்கேசன்துறைக்கும் பளைக்கும் இடையில் அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களது வசதி கருதி விசேட இரயில் சேவையொன்றை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
அதேபோன்று, மாNhகவிற்கும், பொல்கஹவலைக்கும் இடையில் வடக்கு – கிழக்குப் பகுதிகளிலிருந்து எதிர்த்திசையில் பயணிக்கும் இரயில்கள், கடவைகளில் தாமதமடைவதால், இரு வழிப் பாதை அமைப்பதற்கும், யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு உதவி இயந்திரி அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கும், உத்தரதேவி இரயில் சேவையை கல்கிஸ்ஸை வரையில் நீடிப்பதற்கும், குளிரூட்டப்பட்ட இரயில் சேவைகளில் ஈடுபடுகின்ற இரயில்களில் விசேட பெட்டிகளை தினம்; தேவை கருதி இணைப்பதற்கும், இரயில்களின் ஆசனங்கள், மலசலகூடங்கள் உள்ளிட்டவற்றின் தரங்களை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும், வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான இரயில் சேவையில் போதியளவில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளை, பணியாளர்களை நியமிப்பதற்கு கூடிய கவனம் செலுத்துமாறும் மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்துடன், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமானது அதனது வினைத்திறன்களைக் கருத்தில் கொண்டு முழுமையாக கணினிமயப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்திருந்தன. இந்த ஏற்பாடுகள் தற்போது எந்ந நிலையில் இருக்கின்றன? என அறிய விரும்புகின்றேன்.
கடந்த காலங்களில் ஊழல், மோசடிகள் தொடர்பில் ஊடகங்களால் பேசப்பட்ட துறைகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும் முக்கிய இடத்தினை வகித்திருந்தது. இத்தகைய நிலைமைகளை ஒழிப்பதற்காகவே மேற்படி கணினிமயப்படுத்தல் கொண்டுவரப்படப் போவதாகக் கூறப்பட்டது. எனவே, அதனது தற்போதைய நிலைமைகள் குறித்து அறியத் தருமாறு கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.
நன்றி.

Related posts:

வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! நாடாளுமன்றில்  செயல...
வடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில...
இரசாயண ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானதோ பொலித்தீன் பாவனையும் அவ்வாறானதே - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ச...

அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்! - டக்ளஸ் தே...
வன இலாக்காவால் அபகரிக்கப்பட்டுள்ள மன்னார், குஞ்சுக்குளம் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - செயலாளர் ந...
தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா !