வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Friday, March 15th, 2019

இந்த நாட்டில் தமிழ்க் கல்வித் துறையின் தரத்தினை எடுத்துப் பார்க்கின்றபோது, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கல்வி நிர்வாகமானது வர, வர செயலிழந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையே தொடர்ந்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இது குறித்து தமிழர் ஆசியர் சங்கம் அண்மையில் விடுத்திருந்த ஓர் அறிக்கையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வித்துறையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் எத்தகைய குற்றங்கள் செய்தாலும், அவர்களை விசாரிக்கவோ, அன்றி தண்டனை வழங்கவோ முடியாத அளவுக்கு வடக்கு, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கள் அவர்களைப் பாதுகாப்பதாகத் தெரிவித்துள்ளது.

மாறாக அதிபர்கள், ஆசிரியர்கள் சார்ந்த முறைப்பாடுகள் கிடைத்தததும் அதற்கான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, விசாரணை செய்யும் அதிகாரிகள் பல இலட்சம் ரூபாக்களைச் சம்பாதித்து, முறையான தீர்ப்புகள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் செய்கின்ற குற்றச் செயல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள் பற்றி கல்வி அமைச்சிடம் முறைப்பாடுகள் செய்தால் முறைப்பாடு செய்தவருக்குப் பதிலேதும் அனுப்பாமலும், முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்யாமல் இருப்பதும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி அமைச்சுகளுக்கு சர்வ சாதாரணமான விடயமாகிவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் கல்வி அமைச்சுகளுக்குப் பொறுப்பாக இருந்த தரப்பினராகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்றே தெரிய வருகின்றது. (குருகுலராஜா, சர்வேஸ்வரன், தண்டாயுதபாணி)

இந்தக் கூட்டமைப்பினர் எமது மக்களின் வாக்குகளைப் பெற்று, எமது மக்களுக்கு எதுவுமே செய்யாதிருப்பதுடன், இவ்வாறு எமது மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்ற கல்விக்கும்கூட எந்தளவிற்குத் தடையாக இருந்து வருகின்றனர் என்பதையே இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகின்றது

நான் இந்த சபையில் எழுப்பும் கேள்விகளும் எடுத்துரைக்கும் நியாயங்களும், தரகு தமிழ்த் தலைமைகள் விரும்புவது போல் நாளை ஊடகங்களில் மட்டும் வெளி வரவேண்டும் என்பதற்காக அல்ல. எமது மக்களின் தீராப்பிரச்சினைகளுக்கு தீர்வு தேவை என்பதற்காகவே நான் குரல் எழுப்புகிறேன்

நான் ஆட்சியில் பங்கெடுத்த காலங்களில் குரலெழுப்ப வேண்டிய அவசியம் எனக்கு இருந்திருக்கவில்லை. எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற அளவில் மின்னாமல் முழங்காமல் பொழிகின்ற வான் போல் முடிந்தளவு செயல் வீர காரியங்களாக நான் சாதித்து காட்டியிருக்கின்றேன். நான் அப்போது கொண்டிருந்த அரசியல் பலத்தை விடவும் பன் மடங்கு அரசியல் பலத்தோடு இன்றிருக்கும் தரகுத் தமிழ் அரசியல் தலைமைகள் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஆளுமை இருந்திருந்தால், தமிழ் மக்கள் மீதான அக்கறை இருந்திருந்தால், தீர்வு காண வேண்டும் என்ற விருப்பம் இருந்திருந்தால், அல்லது ஆற்றலும் அனுபவமும் இருந்திருந்தால், நான் இன்று எடுத்து கூறும் நியாங்களுக்கு என்றோ தீர்வுகள் கிடைத்கிருக்கும்.

வேலையற்ற பட்டதாரிகளின் தொகை ஆண்டு தோறும் பெருகி வருகிறது, தொண்டர் ஆசிரியர்களின் குரல்கள் இன்னமும் ஒலித்து வருகிறது, காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம் நீடித்து வருகிறது, இவைகளை எல்லாம் தமது அரசியல் பலத்தை வைத்தே அரசுடன் அவர்கள் பேசி அதற்கென தீர்வுகள் காண முடியவில்லை. இந்த இலட்சணத்தில் விமானம் ஏறி ஐ. நா கூட்டத்தில் கலந்து கொள்ள ஜெனீவா போக புறப்படுகிறார்கள்.

வலிகளும் வதைகளும் சுமந்த எமது மக்களின் காதுகளில் பூ வைத்து, அதன் பெயரால் இவர்களுக்கு கிடைத்திருப்பது ஜெனீவா என்னும் வருடாந்த திருவிழா! ஜெனீவாவில் இருந்து எதை கொண்டு வந்தீர்கள் என எமது மக்கள் நாளையும் கேட்பார்கள். எதை கொண்டு வந்தோம் என்று எமது மக்களுக்கு நீங்கள் பதிலளிப்பீர்கள்?

சுவிஸ் நாட்டின் சொக்கிலேட்டும் மணிக்கூடும் உங்கள் குடும்பங்களுக்கு மட்டும் கொண்டு வந்தீர்கள் என்பதை எமது மக்களுக்கு சொல்வீர்களா? உங்கள் பயணப்பைகளில் பாதி இடம் வெற்றிடமாக வைத்து சென்றீர்கள். அதில் உங்கள் பிள்ளைகளுக்கு சுவிஸ் பொம்மைகளை நிரப்பி வருவதை சொல்வீர்களா?

வருகின்ற வாய்ப்புகள் எதுவாயினும் அதை நாம் பயன்படுத்தும் கொள்கையுடையவர்கள் நாங்கள், ஐ.நா வின் அழுத்ததால் எமது மக்களுக்கு விமோசனம் கிடைக்குமென்றால் அதையும் நாம் வரவேற்போம். ஆனாலும் உள்ளுரிலேயே மேய முடியாத மாடுகள் நீங்கள், ஐ.நாவை காட்டி உங்கள் உல்லாச மேய்ச்சலை எமது இனத்திற்கான மோட்சமாக நீங்கள் காட்டுவதையே நான் தவறு என்று கூறுகின்றேன்.

வேதாளம் குடிபுகுந்த வீட்டில் படுத்துறங்கி பூபாள விடியல் பாடி விழித்தெழ ஒரு போதும் முடியாது. நேற்று என்பது உடைந்த பானை! நாளை என்பது மதில்மேல் பூனை!! இன்று என்பதே கையில் உள்ள வீணை!!! இதுவே தமிழ் பேசும் மக்கள் இனி வழங்க வேண்டிய ஆணை! அதற்காகவே நாம் காத்திருக்கின்றோம்

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தேசிய பாடசாலைகள் அடங்கலாக 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 438 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. இதேபோன்று வடக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் அதிகளவில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பல கிராமிய மட்ட பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் மற்றும் வளப் பற்றாக்குறைகள் காரணமாக பல பாடசாலைகளுக்கு செல்கின்ற மாணவர்களது எண்ணிக்கையில் வீழ்ச்சி நிலை காணப்படுகின்றது. இதற்குக் காரணம், அப்பாடசாலைகளில் காணப்படுகின்ற பற்றாக்குறைகளாகும். ஒழுங்கு முறையில் ஆசிரியர் மற்றும் ஏனைய வளங்கள் பகிரப்பட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.

இன்று, குறிப்பாக மீள்குடியேற்றப் பகுதிகளில் – வன்னிப் பகுதிகளில் – அப் பகுதிகளில் பாடசாலைகள் இயங்குகின்ற நிலையிலும் மாணவர்கள் அப்பாடசாலைகளுக்குச் செல்லாது, 10 முதல் 20 கிலோ மீற்றர் தூரம் வரையில் நடந்து சென்று வேறு பாடசாலைகளில் கல்வி கற்கின்ற நிலையும் காணப்படுகின்றது என்றால், அதற்குக் காரணம் இந்த வளப் பற்றாக்குறையே ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளாக 50 மாணவர்களுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கின்ற பாடசாலைகள் மூடப்படும் என்றும் இந்த நிலையில் வடக்கில் 248 பாடசாலைகள் மூடப்படும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் ஏறத்தாள 1000 பாடசாலைகள் தற்போது இயங்குகின்றன

ஏறத்தாள இந்த 1000 பாடசாலைகளில் 248 பாடசாலைகள் மூடப்படுமானால், மூடப்படுகின்ற பாடசாலைகளின் மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைகள் இணைப்பதானால்,  அவ்வாறு இணைக்கப்படுகின்ற பாடசாலைகளிலும் வளப் பற்றாக்குறைகள் காணப்படுமானால், அந்த மாணவர்களது கல்வி நிலை என்னாவது? என்ற கேள்வி எழுகின்றது.

‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்ற திட்டத்தின் கீழ் அந்தப் பாடசாலை சகல வளங்களுமுள்ள பாடசாலையாக்கப்படும் என நீங்கள் அதற்குப் பதில் கூறினால், அந்த வகையில் எத்தனைப் பாடசாலைகள் வடக்கு மாகாணத்திற்குக் கிடைக்கும்?

வளப் பற்றாக்குறைகள் காரணமாக இன்று மூடப்படும் நிலைக்கு அரச பாடசாலைகள் தள்ளப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுமதி பெற்று இயங்கும் தனியார் பாடசாலைகள் மற்றும் அவற்றின் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்பட்டு வருகின்ற ஏனைய தனியார் பாடசாலைகள் உட்பட 400 தனியார் பாடசாலைகளில் பணியாற்றுகின்ற ஆசியரியர்களுக்கு ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கமைவாக முதற்கட்டமாக அரச அனுமதி பெற்றதும், அரச உதவி பெறாததுமான 13 தனியார் பாடசாலைகளில் பணியாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு ஊதியமும், கொடுப்பனவும் வழங்கவென தற்போது 160 மில்லியன் ரூபா நிதியை கல்வி அமைச்சு வழங்கவுள்ளதாகவும் அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆகவே, அரச பாடசாலைகள் மூடப்படுவதும், தனியார் பாடசாலைகளுக்கென அரச நிதி ஒதுக்கல்களும் தொடருமானால், இந்த நாட்டின் இலவசக் கல்விக்கு மூடுவிழரவினை நீங்கள் விரைவிலேயே நடத்தி விடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

மறுபக்கத்தில் இந்திய அரசின் 250 மில்லியன் ரூபா நிதியுதவியினால் வடக்கு மாகாணத்தில் 27 பாடசாலைகளில் கட்டிடங்களை அமைக்கும் பணி 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கட்டுமானப் பணிகள் கொழும்பு அரசினால் முன்னெடுக்கப்பட்டு, 12 பாடசாலைகளில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்னும் 15 பாடசாலைகளில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முடிவடைந்திருக்க வேண்டிய கட்டடப் பணிகள்  இன்னும் முடியவில்லை. இந்திய அரசு ஒதுக்கிய அந்த நிதிக்கு கொழும்பில் என்னவாயிற்று? என்று தெரியவில்லை.

கடந்த 2013ஆம் ஆண்டு முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்வர்கள் ஆசியர் பணிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டனர். எனினும், இவர்கள் சேவையாற்றியிருந்த 03 வருட காலத்தை அவர்களது சேவைக் காலத்துடன் சேர்த்துக் கொள்ளாது அவர்களை 2016ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டவர்களாகக் கணித்து அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆசிரியர்கள் வேதனையில் இருக்கிறார்கள். இவ்வாறான அநேகமான பிரச்சினைகள் வடக்கு மாகாண கல்வித்துறையில் காணப்படுகின்றன

தமிழ் மொழி மூலமான பாடசாலை பாடநூல்களில் காணப்படுகின்ற கருத்துப் பிழைகள், எழுத்துப் பிழைகள், பிழையான தகவல்கள், பொருத்தமற்ற விடயங்கள், மூடிமறைப்புகள், போன்ற பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் நான் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

இறுதியாக தமிழ் மொழி மூல வரலாற்றுப் பாடநூல்கள் தொடர்பில் நான் இந்தச் சபையில் கேள்வி தொடுத்திருந்த நிலையில், அதற்கென மீண்டும் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்வோம் என கௌரவ கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் இன்னும் ஒரு தீர்மானமில்லை

ஒரு நாட்டின் உண்மையான வரலாற்றை குறுகிய அரசியலுக்காக யாரும் மூடி மறைத்தாலும், அதனை இந்த நாட்டு வரலாற்றிலிருந்து மறைத்துவிட முடியாது. மாணவர்கள் பெற வேண்டிய கல்வியில் இத்தகைய வரலாற்று மூடி மறைப்புகளை மேற்கொண்டு, தமிழ் மட்டுமல்ல சிங்கள மொழி மூல மாணவச் சமூகத்திற்கும் இந்த நாட்டில் துரோகமே இழைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத் திட்டத்தின் பிரகாரம் 2019ஆம் ஆண்டிலிருந்து நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்கான வணிகப் பிரிவு தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் மொழி மூலமான வணிகக் கல்விக்கான புதிய ஆசிரியர் வழிகாட்டிக் கைநூலில் கருத்துப் பிழைகளும், ஆங்கில மொழி மூலமான தவறுகளும், பிழையான கலைச் சொற்களும் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், பாட நூல்கள் தயாரிப்பிலிருந்து, பாடசாலை மட்ட வளங்கள் வரையில் தமிழ் மொழி மூலமான கல்வித்துறையானது இந்த நாட்டில் பாரிய பின்னடைவினையே கொண்டிருக்கின்றது.

மலையகத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கும் தமிழ் மொழி மூல கல்வியில் பல்வேறு தடைகள் இருப்பதைக் காணக்கூடியதாகவே இருக்கின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 97 தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் இருக்கின்றன. சுமார் 1 இலட்சத்து 12 ஆயிரம் தமிழ் மக்கள் அங்கு வாழ்கின்றனர். அங்கே கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பில் கணித, விஞ்ஞான பாடங்களைக் கற்பிக்கின்ற வகையில் ஒரு பாடசாலைகூட கிடையாது எனத் தெரிய வருகின்றது. பதுளை மாவட்டத்திலும் இத்தகைய நிலையே நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்படியே தமிழ் மொழி மூலக் கல்வித்துறை குறித்து நிறையவே விடயங்கள் இருக்கின்றன. எனினும் நேரம் கருதி அவை அனைத்தையும் இங்கு குறிப்பிட இயலாமல் இருக்கின்றது. எனவே, இத்தகைய குறைபாடுகள், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கௌரவ கல்வி அமைச்சர் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்

வடக்கு மாகாணத்திலே நீருக்கான – குடி நீருக்கான தட்டுப்பாடு எந்தளவிற்கு இருக்கிறதென்பதை கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நன்கறிவார்கள்.

அண்மையில் கூட இரணைமடு திட்டம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தபோது, ‘இரணைமடுத் திட்டத்தை அரசியல் ஆக்க வேண்டாம்’ எனத் தெரிவித்திருந்தார். இது உண்மை. யாழ்ப்பாணத்திற்கான உத்தேச இரணைமடு குடிநீர்த் திட்டமானது, கிளிநொச்சி வாழ் மக்களுக்கு எவ்விதமான பாதிப்புகளையும் கொண்டுதரப் போவதில்லை என்ற போதிலும், சில சுயலாப அரசியல்வாதிகள் இதனை அரசியல்மயப்படுத்தி வருகின்றனர்.

எனினும், இந்த பின்புலத்தை அறிந்துகொண்டுள்ள கௌரவ அமைச்சர் ஹக்கீம் அவர்கள் எமது மக்களின் நன்மை கருதி அத் திட்டத்தை நிச்சயமாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதேநேரம், இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகளின்போது ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக தற்போது ஒரு மாத காலமாக குளத்திலுள்ள அதிகளவிலான நீர் வெளியேறி வீண் விரயமாகி வருவதாக விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்தும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்

யாழ் குடாநாட்டுக்கான குடிநீர் தேவையினைத் தீர்ப்பதற்காக இரணைமடு திட்டத்திற்கு மேலதிகமாக, வேறு திட்டங்கள் குறித்தும் அவாதானங்களைச் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, மழை காலங்களில் பெறப்படுகின்ற நீரே நிலத்திற்குள் சென்று சுண்ணாம்புக் கற்பாறைகளுக்குள் சேகரிக்கப்படுவதால் நிலத்தடி நீர்வளம் பேணப்படுகின்றது. எனினும், நிலத்தினுள் செல்லக்கூடிய நீரின் அளவினைவிட அதிகளவு நீர் விவசாயத் தேவைகளுக்கென வெளியேற்றப்படுகின்ற காரணத்தால், அங்கு ஏற்படுகின்ற வெற்றிடங்களை கடல் உவர் நீர் புகுந்து நிரப்புகின்ற தாக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன.

எனவே, ஏற்கனவே இருக்கின்ற உவர் நீர்த் தடுப்பனைகளை மறுசீரமைப்பதும், புதிதாக பல்வேறு பகுதிகளிலும் – உவர் நீர்த் தாக்கங்கள் உள்ள பகுதிகளில் அமைப்பதும் தொடர்பில் அதிகளவிலான அவதானங்கள் செலுத்துப்பட வேண்டும். இதே நிலைமையே கிளிநொச்சி மாவட்டத்திலும் காணப்படுகின்றது

மழை நீர் சேகரிப்பினை மேலும் பரவலாக மேற்கொள்வதற்கும் பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.  வடக்கிலே குறிப்பாக பூநகரிக் குளத் திட்டம், பாலியாற்றுத் திட்டம், மற்றும் மழை காலங்களில் வன்னேரிக் குளத்திலிருந்து அதிகளவில் வெளியேறுகின்ற நீரைத் தாங்கக் கூடியதாக தேவன் குளத்தை வன்னேரிக் குளத்துடன் இணைக்கும் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து ஆராய முடியும். இதற்கென ஜய்க்கா நிறுவன நிதியுதவியுடனான ‘எல்லங்கா’ திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என நினைக்கின்றேன்

அதேநேரம், நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடனான ‘யாழ்ப்பாணத்திற்கு நீர்’ திட்டமும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிய வருகின்றது. அதேநேரம் வடமத்திய கால்வாய்த் திட்டமும் செயற்படுத்தப்படுமானால் வடக்கின் நீர்த் தேவையினை போதுமானளவு பூர்த்தி செய்ய முடியும் என எண்ணுகின்றேன். மாவலி ‘எல்’ வலையத் திட்டமும் எமது மக்களுக்கு மிக முக்கியமானதொரு திட்டமாகும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வசதியின்மைகள் தொடர்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது பல்வேறு வசதியின்மைகளுக்கு மாணவர்கள் முகங்கொடுத்து வருவதாக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் அண்மையில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்திருந்தனர்.

விடுதி வசதி இன்மைகள், விளையாட்டு மைதான குறைபாடுகள், விரிவுரை மண்டபங்களில் காணப்படுகின்ற குறைபாடுகள் என பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் கூறப்படுகின்றது. இவை தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானமெடுப்பார் என நம்புகின்றேன்

அதேநேரம், கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களது காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேலும் சில முக்கியத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

அந்த வகையில், தாதியர் கற்கை நெறிக்கான பதிவும், அங்கீகாரமும் இன்னும் அங்கு இல்லாத நிலை காணப்படுகின்றது. சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த ஏற்பாட்டை அமைச்சர் அவர்கள் செய்து தர வேண்டும்.

அதேபோன்று இந்து மத கற்கை நெறிக்கான பீடமொன்றினையும், கடல் தொழில் சார்ந்த ஒரு பிரிவினையும் யாழ் பல்கலைக்கழத்தில் நிறுவுவதற்கும் அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு,

வவுனியாவில் பல்கலைக்கழகமொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற எமது நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றப் போவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

Related posts:

களுத்துறை கன்னங்கர பாடசாலை தமிழ்ப் பிரிவின் இன்றைய நிலை கவலைக்கிடமானது - டக்ளஸ் தேவானந்தா சபையில் தெ...
ஊடகங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில்...