தேசிய அரசு மீது கொண்டிருக்கும் அக்கறை தேசிய பிரச்சினை மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, February 21st, 2019

ஏற்றுமதி அபிவிருத்தி தொடர்பில் பொதுவாக இந்த நாட்டின் நிலைமையினைப் பார்க்கின்ற போது,  “நல்ல சகுனம்’ என்று சொல்வதுபோல், ஆளுக்காள் இந்த நாட்டின் “ஏற்றுமதி அபிவிருத்தி நாளை விருத்திடைந்துவிடும், நாட்டின் பொருளாதாரம் நாளை வளர்ச்சி பெற்றுவிடும்” எனக் கூறிக் கொண்டிருந்தாலும், இந்த நாட்டில் எப்போதாவது  நடக்குமா? என்ற சந்தேகத்திலேயே நாட்டின் பொருளாதார நிலைமை இருந்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஏற்றுமதித் துறைகளைப் பலப்படுத்தாமல் இந்த நாட்டுக்கு பொருளாதார விருத்தியில்லை என்பதுவே உண்மை நிலையாகும். ஆனால், இது தொடர்பில் உரிய அவதானங்கள் இந்த நாட்டில் செலுத்தப்படுவதில்லை என்பதே அதிலும் பார்க்க உண்மை நிலையாக இருக்கின்றது.

இன்று இந்த நாட்டில் வறுமை மிகவும் அதிகரித்துள்ள மாகாணமாக வடக்கு மாகாணமே முன்னணியில் இருக்கின்றது இதற்கு அடுத்த நிலையில் கிழக்கு மாகாணம் இருக்கிறது. அண்மையில் ஆட்சியிலுள்ள பலரும் வடக்கு மாகாணத்திற்குச் சென்று வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஆளுந்தரப்பு தமிழ்த் தேசிய உறுப்பினர்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கற்களை நாட்டியதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்தது.இந்த நாட்டின் ஜனாதியாக இருந்தாலும் சரி, அன்றி  பிரதமராக இருந்தாலும் சரி, அல்லது தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் எவராயினும் சரி, அவர்கள் வடக்கு கிழக்கு நோக்கி வரும் போது கருப்புக்கொடி காட்டி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த காலம் ஒன்று அன்று இருந்தது. ஆனாலும்,  அந்த காலம் இன்று சற்று மாறிவந்திருக்கிறது.

தென்னிலங்கை மற்றும் அரச தலைவர்களுக்கு எதிரான அதே எதிர்ப்பு கோசங்களும் கூச்சல்களும் இன்னமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் அரச தலைவர்கள் கிட்ட நெருங்கி வந்ததும் ஆக்கிரோசமாக குரைத்துக்கொண்டிருந்தவர்கள் தமது எஜமானர்களை கண்டவர்கள் போல் வாலைச் சுருட்டிகொண்டு படுத்து விடுகிறார்கள்.

யாருக்கு எதிராக கூச்சல் இடுகிறார்களோ அவர்களே நேரில் வந்து முதுகில் தடவியதும், எதிர்ப்பு கூச்சலிட்டவர்கள் சூரியனை கண்ட பனித்துளிகள் போல் உருகி விடுகிறார்கள். நாணிக்கோணி அடங்கி விடுகிறார்கள். எந்தவித எதிர்ப்புகளும் இன்றி இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் தமிழர் வாழும் மண்ணுக்கு சகல மரியாதை வரவேற்புகளோடும் இன்று வந்து போகிறார்கள். அண்மையில் கூட கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கு நோக்கி வந்திருந்தார்.

சிங்களத்தலைமை தமிழருக்கு தீர்வு வழங்காது என்று சீறி எழுந்தவவர்களே பிரதமரை வரவேற்றார்கள். அபிவிருத்தி வெறும் சலுகை என்று சொன்னோரே இன்று பிரதமருடன் இணைந்து அடிக்கற்கள் நாட்டுகின்றனர். தம் தோளில் தடவிய பிரதமரை தொழுது நின்றவர்கள் பிரதமர் தென்னிலங்கை திரும்பியதும், மறுபடி ஊடகங்களை அழைத்து அதே பிரதமருக்கு எதிராக போர்க்கொடி ஏந்துவது போல் புலுடா விடுகின்றார்கள்.

போலித்தமிழ் தேசியம் பேசுவோரின் இத்தைகைய இரட்டை வேட திருகுதாளங்கள் யாவும் தத்தமது சொந்த சலுகைகளை பெறுவதற்காகவா? அல்லது  தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவா?

போலிதேசியம் பேசாமல், புலுடாக்களை கைவிட்டு உண்மையாகவே தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைகளையும், தமிழர் தேசத்தின் அபிவிருத்தி பணிகளையும் அவர்கள் விரும்புவார்களேயானால்  நிச்சயமாக நாம் அதை வரவேற்போம்.

தென்னிலங்கை அரசுடன் தேன் நிலவு கொண்டாடுவது எமது மக்களின் விருப்பங்கள் அல்ல! மாறாக, எமது தாயக தேசத்தின் உரிமையை வென்று கொடுப்பதே எமது இலட்சியக்கனவாகும்

உரிமைகளை நாம் வென்றெடுக்கும் வழிமுறைக்கு வந்தவர்களை மாவிலை தோரணம் தொங்கவிட்டு நாம் வரவேற்போம். ஆனாலும், எவ்வாறு எங்கள் உரிமைளை பெற முடியும் என்ற பொறிமுறைக்கும் அவர்கள் இன்னும் வர வேண்டும்.

நாம் கூறும் பொறி முறை என்பது ஊடகங்களில் அரசுக்கு எதிராக எதிர்ப்பு கூச்சலிட்டு வீரப்பிரதாபம் காட்டி விட்டு, அரச தரப்பினரை கண்டவுடன் மட்டும் அவர்களோடு கூடிக்குலாவுவது அல்ல.

அரசுக்கு எதிராக ஊடகங்களிலும், நாடாளுமன்றத்திலும் வீரம் பேசி கூச்சலிட்டு விட்டு, பின் கதவால் நுழைந்து அதே அரசுடன் கூனிக்குறுகி நின்று தத்தமது  பிள்ளைகளுக்கும், உறவுகளுக்கும் மட்டும் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்திலும், இலங்கை மத்திய வங்கியிலும் உயர் பதவிகளை பெற்றுக்கொடுப்பது அல்ல.

வறிய இளைஞர் யுவதிகளின் வாழ்வில் ஒளியேற்றவே எங்கள் பொறிமுறையே ஒழிய, தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே எங்கள் பொறிமுறையே அன்றி பொய்யான விளம்பரங்களை நம்பி வந்த அப்பாவி தமிழ் மக்களை சப்ரா என்ற மோசடி நிதி நிறுவனத்தின் பெயரால் அவர்களை ஏமாற்றி தற்கொலை நிலைக்கு தள்ளிவிட்டு அவர்களை இருண்ட வாழ்விற்குள் சிறை வைப்பதல்ல எங்கள் பொறிமுறை.

உணர்ச்சி பொங்க பேசி எமது மக்களை அரசுக்கு எதிராக தூண்டி விட்டு, மறுபுறத்தில்  தமது பிள்ளைகளின் பிறந்தநாள் விழாவிற்கு மட்டும் அதே அரச தலைவரை தமது வீட்டிற்கே அழைத்து பிறந்தநாள் கொண்டாடி குதூகலிப்பதல்ல எங்கள் பொறி முறை.

நாடாளுமன்றத்தில் உணர்ச்சி வேகப்பேச்சு! தேநீர் விடுதியில் சமரசப்பேச்சு! ஊடகங்களில் உரிமை குறித்து கொட்டி முழக்கம்! அரச தலைவர்களை கண்டவுடன் பெட்டிப்பாம்பு! இதுவல்ல எங்கள் பொறிமுறை!

உள்ளொரு பேச்சும் வெளியொரு பேச்சும் இன்றி என்றும் ஒரே முகத்துடன் உள்ளதை மட்டும் பேசும் அறம் காக்கும் அரசியலே எங்கள் பொறிமுறை!

இயற்கை அனர்த்தங்களில் கூட இழப்புகளை சந்தித்த மக்களுக்கு இதுவரை உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. இது யார் குற்றம்?

அரசின் குற்றமா? அல்லது, இது தாமே உருவாக்கிய அரசு என்றும், தாமே காப்பாற்றிய அரசு என்றும் மார் தட்டி உரிமை கோரும் தரகுத்தமிழ் அரசியல் கூடாரங்களின்  குற்றமா?

அண்மையில் வடக்கு மாகாணத்தில் வெள்ளப் பாதிப்புகளுக்கு கஜா புயல் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள மக்களுக்கு உரிய இழப்பீடுகள், விவசாய செய்கைகள் அழிவுக்கான இழப்பீடுகள் என்பன கூட முறையாக இன்னமும் எமது மக்களுக்கு வழங்கப்படாத நிலையில்,எமது மக்களின் முன்பாக வந்து அடிக்கற்களை நாட்டுவதாலேயோ, திட்டங்களை அறிவிப்பதாலேயோ எமது மக்களின் வயிறுகள் நிரம்பிவிடப் போவதில்லை.

அல்லது எமது மக்களின் முன்பாக போய் நின்று, புதிய அரசியல் யாப்பில் ‘அது இருக்கிறது, இது இருக்கிறது’ என தங்களது மோதாவித் தனங்களை கட்டவிழ்த்துக் கொண்டிருப்பதாலும் எமது மக்களின் வறுமை நிலை ஒழியப் போவதில்லை.

இந்த நாட்டில் மக்கள் இன்று மிகவும் கொடுமையான பொருளாதார நிலைமையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், ‘அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்  என்ற விடயத்தை தெற்கில் பேசிக் கொண்டும்,  ஆளுந்தரப்பின் அடுத்த போலித் தமிழ்த் தேசியத் தலைவர் யார் என்ற விடயத்தை வடக்கில் பேசிக் கொண்டும், இதனையே தலைப்புகளாக்கி எமது மக்கள் மனங்களில் திணித்துக் கொண்டு, எமது மக்களின் பிரச்சினைகள், இந்த நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் என்பன மழுங்கடிக்கப்பட்டு வருகின்ற ஒரு சூழலே தோற்றுவிக்கப்பட்டுள்ளது

இன்றைய நிலையில் இந்த நாட்டுக்குள் மிகப் பயங்கரமான போதைப் பொருட்கள் கூட அதிக பயன்பாட்டில் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் போதைப் பொருள் ஒழிப்பினை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருக்கிறார்.

இந்த நிலையில் போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் உள்ளிட்ட 24 பேர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருவதாக ஆளுந்தரப்பு இராஜாங்க  அமைச்சர் ஒருவரே கூறி வருகின்றனர்.

இந்த 24 பேர் குறித்து தொலைபேசி மூலமாக அவர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் இன்றைய ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. ‘இறக்குமதி பால்மாவில் எவ்விதமான கலப்பும் இல்லை’ என இந்த நாட்டு சுகாதார அமைச்சர், அதிகாரிகளையும் வைத்துக் கொண்டு அடிக்கடி ஊடகங்களில் மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ‘இல்லை இறக்குமதி பால்மாவில் கலப்படம் உள்ளது’ என இதே ஆளுந்தரப்பின் பிரதி அமைச்சர் ஒருவர் கூறிவருகின்றார். இதனை மருத்துவர் சங்கத்தினரும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய நிலையில், இந்த நாட்டு மக்கள் யாரை நம்புவது எனத் தெரியாமல், ஒரு கேள்விக் குறியாகவே இருக்கின்றனர். இவ்வாறு, மக்களை தொடர்ந்தும் கேள்விக் குறியாகவே வைத்திருப்பது தான் உங்களது திட்டமா எனக் கேட்க விரும்புகின்றேன். ஆளுங்கட்சி குறித்து எதிர்க்கட்சி இவ்வாறான முறைப்பாடுகளை முன்வைத்தால் அது ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சி அரசியல் என கூறலாம். ஆனால், இங்கே?. இதை என்னவென்று கூறுவது.

எமது மக்களின் பிரச்சினைகளைத் திசை திருப்பி விடுகின்ற தலைப்புகள் திட்டமிட்டே உருவாக்கப்பட்டு, இந்த நாட்டு மக்களின் அடிப்படை மற்றும் நாளாந்த பிரச்சினைகளை ஒத்தி போடுகின்ற நிலைப்பாடானது இன்று நேற்றல்ல, மிக நீண்ட காலமாகவே இந்த நாட்டு தேசிய அரசியலில் நிலை கொண்டிருப்பதன் காரணமாகவே இன்று இந்த நாட்டில் எமது மக்களின் பிரச்சினைகள் பலவும் புரையோடிப்போய், தீராப் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. அந்த பிரச்சினைகள் மேலும் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி நாடளாவிய ரீதியில் வியாபித்துள்ளன. மேலும், புதிய, புதிய பிரச்சினைகளும் அவற்றுடன் சேர்ந்து கொண்டுள்ளன

எமது மக்களது அரசியல் அதிகாரங்கள் தொடர்பிலான தீர்வு என்பது அவசியமாகும். அதற்கு தற்போது நடைமுறையில் – நடைமுறை சாத்தியமாக இருக்கின்ற 13வது திருத்தச் சட்டத்தின் மூலமான மாகாண சபை முறைமையை முழுமையாக – அதாவது, 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளவாறான விடயங்களை முழுமையாக செயற்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து,

படிப்படியாக முன்னேறிச் செல்லலாம் என்ற யோசனையை நாம் நீண்ட காலமாக முன்வைத்து வருகின்றோம். அதை உங்களில் பலரும் ஏற்றுக் கொள்கின்றீர்கள்.

இவ்வாறு தற்போது அரசியல் யாப்பில் இருக்கின்ற – இந்த நாட்டில் அனைத்து மக்களாலும், அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்ற மாகாண சபை முறைமையை முழுமையாக செயற்படுத்திச் செல்கின்றபோது, படிப்படியாக அதற்கான அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதென்பது நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறையாகும். அவ்வாறு செய்கின்றபோது, எந்த இனத் தரப்பினருக்கும் சந்தேகமோ, நம்பிக்கையீனமோ தோன்றுவதற்கு வாய்ப்பிருக்காது. ஏனெனில் நாம் அவற்றை இந்த நாட்டில், நாட்டு மக்கள் முன்பாக செயற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதால், அது குறித்து பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை.

ஆனால், அவ்வாறு செய்யாது, அதிகாரப் பரவலாக்கம் என அதே மாகாண சபையை முன்வைத்து, நீங்கள் வரைபுகளை கொண்டு வருகின்றபோது, இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் குழப்பங்கள் ஏற்படத்தான் செய்யும். அதில், என்னென்ன இருக்கின்றன என்ற தெளிவுகள் எமது மக்களிடம் இல்லை. அதிலுள்ளவை செயற்படுத்தப்பட்டால் என்னென்ன நடக்கும் என்ற சந்தேகம் மக்களிடையே இருக்கின்றது. எனவே, மக்களுக்குத் தெளிவு படுத்தப்படாத எதுவும் சாத்தியமில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதே நேரம், இந்த விடயத்தை – அதாவது மந்திரவாதியை போல் ‘புதிய அரசியல் யாப்பு ஒவ்வொரு தீபாவளியின் போதும், அடுத்த தீபாவளிக்கு வருமென்றும்’, மூன்றரை வருடங்கள் கழிந்து ‘வந்துவிட்டது’ என்றும் அதன் பின்னர் அதில் என்னென்ன இருக்கின்றன என்பது பற்றி எமது மக்களுக்குத் தெளிவுபடுத்தாமலேயே ‘அதிலே அது இருக்கிறது. இது இருக்கிறது’ எனக் கூறிக் கூறியே இந்த நான்கு வருடங்களாக எமது மக்களுக்கு பலவந்தமாகப் போய் நின்று போதிக்கின்ற தமிழ் தரப்பு அரசியல்வாதிகள், இந்த நான்கு வருடங்களில் எமது மக்களின் வறுமை நிலைமையைப் போக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் எனக் கேட்க விரும்புகின்றேன்.

தொழில் வாய்ப்புகளுக்காக வருகின்றவர்கள் மத்தியில், நுண் கடன் தொல்லைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள வழி தேடி வருகின்றவர்களிடம், சொந்த காணிகளை, நிலங்களை மீட்க வருகின்றவர்களிடம், சுய தொழில் முயற்சிகளுக்கு உதவி கேட்டு வருகின்றவர்களிடம், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு இழப்பீடுகள் கோரி வருகின்றவர்களிடம், தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்துத் தாருங்கள் எனக்கோரி வருவோரிடம், கடல் தொழில், விவசாய செய்கைகளில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அகற்றித் தருமாறு கோரி வருபவர்களிடம், வீட்டு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோரி வருபவர்களிடம் போய் ‘புதிய அரசியல் யாப்பில் சமஸ்ரி மறைந்து கொண்டிருக்கிறது’ எனக் கூறுவது தான் இவர்களுக்கு வாக்களித்த எமது மக்களுக்கு இவர்கள் செய்கின்ற சேவையா எனக் கேட்க விரும்புகின்றேன்

வடக்கு மாகாண சபையை ஏற்று அதனை மக்கள் நலன்சாரா வெற்றுச் சபையாக நாசமடித்த இவர்கள் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட மாகாண சபைகளை மக்களின் பிரதிநிதிகளுடன் மீள உயிர் பெற வாய்ப்பளிக்கின்ற மாகாண சபை தேர்தலை பற்றி வாய் திறக்காது அரசியல் அதிகாரங்கள் பற்றி பிதற்றி வருவது எமது மக்களை ஏமாற்றுகின்ற செயல் அல்லவா.

எவ்விதமான அரசியல் அதிகாரங்கள் கிடைத்தாலும் அவற்றை மாகாண சபைகளின் ஊடாகத்தான் இந்த நாட்டின் அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமைவாக செயல்படுத்த இயலும். அதற்கு மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளுடன் இயங்க வேண்டும். இதனை அவர்கள் மறந்து விட்டு மேடை இன்றி ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அந்த வகையில் பார்க்கின்றபோது, மதங்களையும், சம்பிரதாயங்களையும், போலித் தேசியத்தையும், கட்சி நலன்களையும் மாத்திரமே பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த நாட்டில் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றதே அன்றி, இந்த நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்கான அவதானிப்புகள் முன்வைக்கப்படுவதில்லை என்றே பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

இந்த நாடு சுதந்திரமடைந்த காலகட்டத்தில் இந்த நாட்டின் தனிநபர் வருமானமானது ஜப்பானுக்கு அடுத்த நிலையில் காணப்பட்டது. அக்காலகட்டத்தில் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு பின்னாலிருந்த தாய்வான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, மாலைத்தீவுகள் போன்ற நாடுகள் 80களிலேயே இலங்கையின் பொருளாதார வளர்ச்சியினையும் மீறிய உயர் நிலைக்குச் சென்றுவிட்டது.

இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் கைத்தொழில் துறையில் அதே காலகட்டத்தில் எம்மைவிட வளர்ச்சி நிலையினை அடைந்தன.

ஆசியாவிலேயே வறுமையான நாடாக அன்று இனங்காணப்பட்ட பங்களாதேஷ் கூட இன்று கைத்தொழில் மற்றும் பொருளாதார ரீதியில் மிகுந்த வளர்ச்சியை எட்டி நிற்கின்றது. இத்தகைய நிலையில் இந்த நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து சிந்தித்துப் பாருங்கள்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாடு சுதந்திரமடைந்த நிலையில், தேயிலை, இறப்பர், தெங்கு அடிப்படையிலான ஏற்றுமதி பொருளாதாரம் இருந்தது. நெல் மற்றும் உணவுப் பயிர் உற்பத்தி அடிப்படையிலான அண்டியதான விவசாய பொருளாதாரம் இருந்தது. இன்று அவற்றின் நிலை என்னவென்றெ தெரியாமல் இருக்கின்றது.

போதைப் பொருள் வியாபாரிகள் – கடத்தல்காரர்கள் ஏற்றுமதியாகியும், போதைப் பொருட்கள் இறக்குமதியாகியும் கொண்டிருக்கின்ற நிலையே நாட்டில் இன்று தோன்றியிருக்கின்றது.

2019 – 2023 காலகட்டத்துக்குள் செலுத்தப்பட வேண்டிய சர்வதேச கடன்களின் அதிகரிப்பு காணப்படுகின்றது. அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்ளத்தக்க மாற்று வழிகளை நீங்கள் ஆராய்வதாக இல்லை.

ஏற்றுமதிக்குரிய வெளிநாட்டு சந்தைவாய்ப்புக்களின் விரிவாக்கங்கள் தொடர்பில் போதிய அவதானங்கள் இல்லை. இதனிடையே மீள் ஏற்றுமதி செய்யப்போய் எமது நாட்டு மிளகுக்கும் கருங்காவுக்கும் (கொட்டப்பாக்கு) தற்போது சர்வதேச சந்தையில் பெறுமதி குறைந்துள்ளது.

சுங்கத் திணைக்களத்தில் பணிப் பகிஸ்கரிப்பு இடம்பெற்றபோது தான் இந்த மீள் ஏற்றுமதி தொடர்பிலான முறைகேடுகள் எமது மக்களுக்குத் தெரிய வருகின்றன.

இந்த நாட்டில் ஏற்றுமதிப் பயிர்களுக்கு என்ன குறை இருக்கின்றது? தேயிலை, இறப்பர், மிளகு, கருவா, பனை, கித்துள், தெங்கு, சாதிக்காய், ஏலம், கராம்பு என இந்த நாட்டில் எத்தனையோ பயிர்கள் மிக செழிப்பாக வளர்கின்றன. ஏன் அவற்றை உரிய முறையில் ஊக்குவித்து வளர்த்து, முடிவுப் பொருட்களாக்கி அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடியாது  எனக் கேட்க விரும்புகின்றேன்.

இன்னும், தற்போதைய நவீன சந்தைக் கேள்விகளுக்கு ஏற்ற பயிர்களை விளைவிக்க முடியும், கைத்தொழில்கள் மற்றும் சேவைகளை ஊக்குவிக்க முடியும்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, ‘அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்?’ என்றும், ‘புதிய அரசியல் யாப்புக்குள் சமஸ்ரி எங்கே ஒளிந்திருக்கிறதென்றும்’ வாத, விவாதங்களை நடத்திக் கொண்டு, இப்படியே காலத்தை ஓட்டிக் கொண்டிருப்போமேயானால், இந்த நாடு ஒருபோதும் முன்னேறப் போவதில்லை என்பதை வலியுறுத்துகின்றேன்.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் - டக்ளஸ் எம்.பி. அஞ்ச...
உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை உழைக்கும் மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்...