ஆட்சி தற்போது யார் கையில் இருக்கிறது? டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, June 28th, 2019

அவசரகாலச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டாலும் எமது நாட்டின் நடைமுறை நிலைமைகளை கருத்தில் கொண்டு மனிதாபிமான அணுகுமுறையானது கடைப்பிடிக்கப்படுவது அவசியமாகும் என்ற எமது நிலைப்பாட்டினை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணைகளில் பல்வேறு விடயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எனினும் தற்போதைய தெரிவுக்குழுவின் விசாரணைகளைப் பொறுத்த வரையில் அதன் நகர்வுகள் மேலும் அரசியல் ரீதியிலான நெருக்கடி நிலைமைக்குள் நாட்டை தள்ளிவிடுமோ? என்ற அச்ச நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

ஒரு பாதிப்பு தொடர்பில் ஆராய்கின்றபோது அது இன்னொரு பாதிப்பினை நோக்கிச் சென்றுவிடக் கூடாது என்பதில் மிக அவதானமக இருக்க வேண்டிய தருணத்தில் இந்த நாடு இருந்து கொண்டிருக்கின்றது என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.   

அத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணைகள் எந்தளவிற்கு நம்பகத் தன்மை வாய்ந்தது? என்ற கேள்வியும் பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் புனித பாப்பரசரைச் சந்திப்பதற்காக வத்திக்கான் சென்றிருந்த எமது காதினல் அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை சர்வதேச ஊடகங்களின் முன்பாகத் தெரிவித்திருந்தார்.

இது இந்த நாடு குறித்த சர்வதேசத்தின் நம்பகத் தன்மை தொடர்பிலான கேள்விக் குறியானதொரு நிலையினைத் தோற்று வித்திருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான காலகட்டத்தில் அரசு மீது காதினல் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையினை காதினல் அவர்கள் முற்று முழுதாகவே தற்போது இழந்திருப்பதாகத் தெரிய வருகின்றது. இதற்கு இந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என நினைக்கின்றேன்.

இத்தகைய நிலையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் வெறும் அரசியல் மயமாக்கப்படாமல் குறித்த விடயம் தொடர்பில் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வழிவகுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்

தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தில் சிலர் கூறி வருகின்ற நிலையில் அதனை மறுக்கின்ற கருத்துக்களும் அரசாங்கத்தில் மேலும் சிலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இராணுவத் தளபதி கூட எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே ஒரு முக்கிய விடயம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்றபோது அது தொடர்பில் பொறுப்புணர்ச்சியுடன் அறிவிப்பதற்கென முதலில் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டியத் தேவை இந்த அரசாங்கத்திடம் இருக்க வேண்டும்.

அவ்வாறின்றி இத்தகைய முரண்பாட்டுக் கருத்துக்களை ஒவ்வொரு தரப்பினர் கூறுகின்றபோது அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக பங்கரவாத அச்சுறுத்தல் நாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றதா? அல்லது பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதற்காக அவசர காலச் சட்டம் நீடிக்கப்படுகின்றதா? என்றொரு சந்தேகம் மக்களிடத்தே ஏற்படுகின்றது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எவ்வாறு தடுத்திருக்கலாம்? என்பது குறித்தே இப்போது விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றவர்கள் பல்வேறுவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த நாட்டின் பாடத் திட்டத்திலேயே தவறான கொள்கைகள் காணப்படுவதாகவும் ஒருவர் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். அவரது கருத்துக்களைப் பார்க்கின்றபோது மதராஸ்ரா அடிப்படைவாதம் – பயங்கரவாதத்திற்கும் அடித்தளம் இட்டிருக்கின்றதோ? என்ற சந்தேகமும் உருவாகின்றது. அதனால் இந்த அடிப்படைவாத கல்வி முறை இல்லாதொழிக்கப்பட வேண்டும்

நாட்டின் கல்வித் திட்டம் தொடர்பில் குறிப்பாக தமிழ் மொழி மூலமான பாடத் திட்டங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் இருக்கின்றன. இதில் முக்கிய சில விடயங்கள் குறித்து நான் இந்தச் சபையின் அவதானத்திற்கு பலமுறை கொண்டு வந்துள்ளேன்.

குறிப்பாக தமிழ் மொழி மூலமான வரலாற்றுப் பாடநூல்கள் அதனைக் கற்கின்ற மாணவர்களுக்கு தமிழர்களோ முஸ்லிம்களோ இந்நாட்டைச் சார்ந்தோர் அல்லர் அவர்கள் அந்நியமானவர்கள் என்ற கருத்தினையே போதிக்கின்றன. இது ஒரு பாரதூரமான விடயமாகும்.

இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் இலங்கையர்கள் என இந்த நாட்டில் ஏதாவது ஆபத்து ஒன்று நிகழுகின்றபோது ஒரு சிலரால் வாய் வார்த்தையாகக் கூறப்பட்டாலும் அதனை வரலாற்று ரீதியிலாக ஒப்புவிக்கக்கூடிய வரலாற்று சான்றுகள் பல இருக்கின்ற நிலையிலும் தமிழ் மொழியிலான பாடத் திட்டங்களில் அவை இல்லை.

குறிப்பாக மஹாவம்சத்திலே குறிப்பிட்டுள்ள விடயங்களைக் கூட இந்த நாட்டு கல்வித்துறை ஏற்க மறுக்கின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது.

எனவே இன மத பேதங்களை அகற்றி எல்லோரும் இந்நாட்டு மக்கள் என அனைத்து மக்களும் உணர்வு ரீதியில் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலான வழிவகைகளை கல்வித் திட்டத்தில் இருந்தே – அதுவும் ஆரம்பக் கல்வித் திட்டத்திலிருந்தே முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் நாட்டு மக்களிடையே இன்னுமொரு பாரிய சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நாட்டை ஆட்சி செய்பவர்கள் யார்? என்ற சந்தேகமே அது

இந்த சந்தேகம் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்பிருந்தே எமது மக்களுக்கு இருந்து வருகின்றது. அப்படி ஒன்று இல்லாத காரணத்தினால்தான் அத்தகையதொரு தாக்குதல் மிக இலகுவாகவே மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்படும் நிலையில் இந்த எமது மக்களின் சந்தேகம் அந்தத் தாக்குதலுக்குப் பின்னர் மேலும் வலுத்துவிட்டுள்ளது என்றே தெரிய வருகின்றது.

ஒரு அடிப்படைவாதம் தாக்குதல் நடத்திவிட்டுப் போக ஏனைய அனைத்து அடிப்படைவாதங்களும் தலை நிமிர்ந்து விட்டுள்ள ஒரு நிலைமையைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இத்தகைய அடிப்படைவாதிகள் ஆட்சியை தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு பொது மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய உறுதி மொழிகளை இவர்கள் வழங்கி வருகின்ற நிலைமையும் காணப்படுகின்ற நிலையில் இவற்றை பார்வையாளர்கள் வரிசையில் நின்று ஆட்சியாளர்கள் பார்த்துக் கொண்டிருக்ககின்ற நிலைமையானது நாட்டின் பரிதாப நிலைமையினையே எடுத்துக் காட்டுகின்றது.

இத்தகைய செயற்பாடுகள் முற்றிலும் சுயலாப அரசியலை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாதிகளின் ஏனைய மதங்களுக்கிடையேயும் இனங்களுக்கிடையேயும் விரிசல்களை வளர்ப்பதற்கான செயற்பாடுகளாகவே செயற்படுத்தப்பட்டு வருவதையும் காணக் கூடியதாகவே இருக்கின்றது.

இத்தகைய செயற்பாடுகள் இந்த நாட்டின் அமைதிக்கு எந்தளவில் பாதிப்புகளை ஏற்படுத்தப் போகின்றன? என்பது பற்றி சிந்தித்து செயற்பட வேண்டிய நீங்கள் வாக்குகளுக்காக வளைந்து, நெளிந்து கொண்டிரக்கின்றீர்கள் என்றால் இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு அமைதி என்பiவை எல்லாம் எதற்காக? என்றே மக்கள் கேட்கிறார்கள்.

இன்று இந்த நாட்டிலே எமது மக்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இதில் ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் வேறு பூதாகரமாகி விட்டுள்ளன.

மக்கள் உணவை கையில் எடுக்கும் போது இருக்கின்ற விலை வாயில் போடுவதற்குள் அதிகரித்து விடுகின்றது. இப்படி மக்கள் அன்றாடம் உண்பதற்கே வழி தேடிக் கொண்டிருக்கின்றபோது சீன சிகரெற்றுகள் பற்றி வாத விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள். உணவின்றி 11 மாதக் குழந்தை தென்பகுதியிலே இறந்துவிடுகின்ற பரிதாபங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் தாய் தனது இரண்டு சிறு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கின்ற பரிதாபங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

போதை வஸ்து ஒழிப்பு பற்றி பேசப்பட்டு வரும் நிலையில் போதை வஸ்துகளுக்கு அடிமையாகாத சுமார் 1500 பாடசாலை மாணவர்கள் பாடசாலை மட்டங்களில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவருகின்றன.  

இத்தகைய மக்களது அன்றாடப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் மூடி மறைத்துக்கொண்டு இது எந்த நாடு? என்பது பற்றி நீங்கள் பட்டிமன்றம் நடத்துவதிலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறீர்கள். 

எதை விற்றேனும் தாம் மட்டும் வயிற்றை நிரப்பினால் போதும் என்ற கொள்கை வீட்டுக்கும் உதவாது நாட்டுக்கும் உதவாது!

ஒரு வகையில் இன்று இந்த நாட்டு மக்களிடத்தே தெளிவான அரசியல் சிந்தனைக்கு நீங்கள் வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள். அண்மையில் புகையிரதத் திணைக்களத்தினரின் பணிப் பகிஸ்கரிப்பு நாட்களில் இந்த நாட்டு மக்கள் தெரிவித்திருந்த கருத்துக்கள் அதற்கு சான்று பகர்கின்றன. நாங்கள் இட்ட புள்ளடி இன்று எங்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது’ என மக்கள் கூறுகின்றனர். 

இதே அரசியல் தெளிவினை இன்று எமது மக்களும் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு அரசாங்கத்துடன் தரகு அரசியல் நடத்துகின்ற தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் எமது மக்களால் துரத்தப்படுகின்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

எனவே பொது மக்கள் பாதுகாப்பு என்பதுடன் பொது மக்களது வாழ்க்கை தொடர்பிலும் சற்றேனும் சிந்திக்க வேண்டும். வாக்குகளை நம்புகின்ற நீங்கள் அதை வழங்குகின்ற மக்களையும் நம்ப வேண்டும்.   வாக்குகளுக்காக அடிப்படைவாதக் குழுக்களையும் இனவாதக் குழுக்களையும் நம்பி மீண்டும் இந்த நாட்டில் முரண்பாட்டு மோதல் நிலைமைகளை உருவாக்க முயற்சிக்க வேண்டாம் எனக் கேட்டுககொள்கின்றேன்.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 7 ஜூலை 2011 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் - ந...
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில...

சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு  பண வீக்கத்தை எதிர்கொள்ளப் போதாது - நாடாளுமன்றத்தி...
நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  - புதிய அரசியல் யாப்ப...
தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பது  கண்டிக்கத்தக்கது – கண்டிச் சம்பவம் குறித...