கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, December 6th, 2016

எமது கடற்றொழிலாளர்களைப் பெரும் பாதிப்புகளுக்கு உட்படுத்தி வருகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில் மற்றும் பிற மாவட்டங்களிலுள்ள கடற்றொழிலாளர்களது அத்துமீறியதும், மனிதாபிமானமற்றதுமான தொழில் முயற்சிகள் தொடர்பிலேயே அதிக அவதானத்தினை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இந்தியக் கடற்றொழிலாளர்களது வர்த்தக ரீதியிலான கடற்றொழில் காரணமாக எமது கடற்றொழிலாளர்களுக்கான வாரத்திற்குக் குறைந்தபட்ச மூன்று நாள் தொழிலில்கூட சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நாளாந்த உழைப்பு மறுக்கப்பட்டு வரும் நிலையே தொடர்கின்றது.

இந்தியக் கடற்றொழிலாளர்களது வர்த்தக ரீதியிலான பாரியதும், நவீன முறைகளில் அமைந்ததுமான இழுவலைப் படகுகளின் முன்பாக, எமது பாரம்பரிய கடற்றொழில் முயற்சிகளுக்குத் தாக்குப் பிடிக்க இயலாத நிலையே ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தற்போதைய நிலையில் பாக்கு ஜல சந்தியில் பாரியளவில் கடல் வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், அழிவு தரும் விளைவுகளே எமக்கு எஞ்சியிருக்கின்றன.

இந்த வகையில், எமது கடற் பரப்புக்குள் அத்துமீறி நுழைகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்கள் நாளொன்றுக்கு சுமார் 600 மெற்றிக் தொன் கடலுணவினை அறுவடை செய்கின்றனர். இவ்வாறு இந்தியத் தொழிலாளர்கள் வருடந்தோறும்  அறுவடை செய்கின்ற சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான மெற்றிக் தொன் கடலுணவானது, அவர்களது உள்@ர்த் தேவைகள் போக, எஞ்சியவை வருடந்தோறும் சுமார் 5 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் மேலதிகமாக ‘இந்தியக் கடலுணவு உற்பத்தி’ என்ற பெயரிடப்பட்டு வெளிநாடுகளுக்கு இந்திய நிறுவனங்களால் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், எமது கடற்றொழிலாளர்கள் நாளாந்தம் அறுவடை செய்யும் கடலுணவில் நூற்றுக்கு 15 சத வீதத்திற்கும் குறைவான வர்த்தக ரீதியிலான இறால், நண்டு, கணவாய் போன்ற கடலுணவைப் பெறுகின்ற நிலையே காணப்படுகின்றது. ஏனைய 85 சத வீதமானவை வர்த்தகப் பெறுமதி அற்றதாகவும், குஞ்சுகளாகவுமே இருப்பதால், அவை உள்ளூர் நுகர்வோரின் தேவைக்கும், பெரும்பாலானவை மீண்டும் கடலுக்குள் கொட்டப்படும் நிலையிலுமே இருக்கின்றன.

அதே நேரம், தொழில் வாய்ப்பு மட்டுப்படுத்தப்படுதல், போதிய முதலீட்டு ஊக்குவிப்பு இன்மை, இவற்றால் ஏற்படுகின்ற உற்பத்திக் கொள்ளவு ஆற்றலுக்குக் கீழ் மட்டத்தில் உற்பத்தி அறுவடைகளின் தரம் தள்ளப்பட்டிருப்பமையினால் எமது சிறிய கடற்றொழிலாளர்களது உற்பத்திகளுக்கான கேள்வியானது மறுக்கப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது. இதனால், எமது நாட்டின் நாளொன்றுக்கான கடலுணவு மூலமான இழப்பு சுமார் 10 – 20 மில்லியன் ரூபாவாக உள்ளது. அதன் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் மட்டுமன்றி மொத்த, சில்லறை வியாபாரிகள், பதனிடும் தொழிலாளர்கள், ஏற்றுமதியாளர்கள் எனப் பல தரப்பினரும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது மட்டுல்ல, இந்தியக் கடற்றொழிலாளர்களது இழுவலைப் படகுகளின் பயன்பாடு காரணமாக கடல் புற் படுக்கை சேற்று மேடுகள், பவளப் பாறைகள் போன்ற முக்கிய வளங்கள் பாதிக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றன. அத்துடன், மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்ததைப் போல், சுமார் 30 வருட கால யுத்தப் பாதிப்புகளுக்கு உட்பட்டு, தொழில் உட்பட அனைத்து ரீதியிலும் முடக்கப்பட்டிருந்த எமது மக்கள், தங்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தயாராகி வருகின்ற நிலையில், இருக்கின்ற நிதி கொண்டும், கடன் பெற்றும் கொள்வனவு செய்யப்பட்டதும், அரசு உட்பட அரசசார்பற்ற நிறுவனங்கள் வழங்கியதுமான எமது கடற்றொழிலாளர்களது தொழில் உபகரணங்கள் தொடர்ச்சியாகச் சேதப்படுத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றன.

அந்த வகையில், 2015ம் ஆண்டில் எமது நாடு மீன் உற்பத்தி ஏற்றுமதியானது  2014ம் ஆண்டுடன்  ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது,  32.9 சத வீதத்தால் குறைவடைந்திருந்தது. அந்த வகையில் இந்த கடலுணவு உற்பத்தியானது 2015ம் ஆண்டில் 520,190 மெற்றிக் தொன்னாகக் குறைவடைந்திருந்தமையைக் காணலாம்.

அதே நேரம், குளிரூட்டப்பட்ட கடலுணவு உற்பத்தி ஏற்றுமதியில் எமது அயலக நாடான இந்தியா 10 இலட்சத்து 582 அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாகப் பெற்றுள்ளது.

2014ம் ஆண்டில் நாம் 19,591 மெற்றிக் தொன் டின் மீன்களை இறக்குமதி செய்திருக்கின்றோம். 2015ம் ஆண்டு இது 49,016 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது. நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட தீவில் வாழுகின்ற நாம், எமது கடல் அறுவடைகளைப் பறிகொடுத்தும், கடல் வளங்களை அழிவுக்கு உட்படுத்தக் கொடுத்தும், எமது கடல் வளத்தினால் உரிய பயன்களை எட்டாமலும் இருப்பதால் இந்த நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அத்துடன், வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற இன்னுமொரு பாரிய நெருக்கடி பிற மாவட்டக் கடற்றொழிலாளர்கள் அங்கு அத்துமீறியதும், தடை செய்யப்பட்டதுமான கடற்றொழில்களில் ஈடுபடுவதாகவும்,

குறிப்பாக, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியில் ஆழ்கடல் தொழிலில் ஈடுபடுகின்ற கடல்தொழிலாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற கிராமங்களில் வாழுகின்ற மக்கள் தங்களது விவசாய நிலங்களையும், தங்களது கடல் வளத்தையும் இழந்து நிற்கிறார்கள். ஆழம் குறைந்த அவர்களது கடல் பரப்பில் சிறு தொழில்களை அவர்கள் மேற்கொள்கின்றபோது, பிற பகுதிகளிலிருந்து அங்கு அத்துமீறி நுழையும் கடற்றொழிலாளர்கள் இயந்திரப் படகுகள் மூலம் தடை செய்யப்பட்ட உபகரணங்களால், வர்த்தக ரீதியிலான தொழில் செய்து இந்த மக்களின் வாழ்வாதாரங்களை இல்லாதொழிப்பதுடன், அவர்களது தொழில் உபகரணங்களையும் அழித்து வருகின்றனர்.

அதே போன்று, புதுமாத்தளன் பகுதியில், அப்பகுதியில் தடைசெய்யப்பட்டுள்ள  நிலையில், அத்துமீறி, தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டு, கடலட்டைப் பிடிப்போரால் அந்த மக்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை, வடக்கு, கிழக்கு மகாணங்களில் பல பகுதிகளிலும் தொடர்வதாகவே அறிய முடிகின்றது.

அதே நேரம், கிழக்கு மாகாணத்தில் நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டு வருகின்ற கடலரிப்பு காரணமாக அங்குள்ள கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

வான் வெட்டப்படாமை காரணமாக பானந்துறை கடற்றொழிலாளர்கள் தங்களது  தொழிலில் ஈடுபடுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகவும்,

அம்பாறை, அறுகம்பே கடற்கரைப் பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டிடங்கள் காரணமாக அங்குள்ள கடற்றொழிலாளர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள இயலாது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

எனவே, எமது கடற்றொழிலாளர்கள் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து மீண்டு, சுதந்திரமாக அவர்கள் தொழில் துறையில் ஈடுபடக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு கௌரவ அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் வழி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், எமது பகுதியில் இறங்குதுறைகள் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகள் காணப்படுகின்றன. கடற்றொழிலாளர்களது வாழ்க்கை நிலை மேம்படுத்தப்பட வேண்டிய நிலைகள் காணப்படுகின்றன. தற்போது, கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வடக்கு மாகாணத்திலும் முன்னுரிமை அடிப்டையில் அத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதே நேரம், கடல் உயிரினப் பெருக்கம் கருதி எமது கடற்றொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாத 45 நாள் காலகட்டத்தின்போது அவர்களுக்கென ஒரு நிவாரணத் திட்டம் ஏற்படுத்தப்படுதல் வேண்டும்.

அத்துடன், பல்கலைக்கழகங்களில் விவசாய பீடங்கள் செயற்படுவதைப் போன்று, கடற்றொழில் சார்ந்த கற்கை நெறிக்கென பல்கலைக்கழக மட்டத்தில் தனியான பீடங்களை அமைக்க வேண்டும்.

அத்துடன், வடக்கு – கிழக்கு உட்பட நாட்டில் கடல் உற்பத்தி வளப் பகுதிகளில் ரின் மீன் பொதியிடல் தொழிற்சாலைகள் – பாரியளவில் இல்லை எனினும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களாக அமைக்கப்படல் வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் இந்தச் சபையில் முன்வைக்க விரும்புகின்றேன்.

அந்த வகையில், கௌரவ அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் இந்த அமைச்சைத் திறம்பட நடத்துவதற்குத் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் வடக்கு – கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கும் சென்று கடற்றொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களது பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றார். அந்த வகையில் அவருக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related posts:

அரசு கூறும் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை! நாடாளுமன்றில்  டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
வடக்கில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் ...

மலையக மக்களும் இலங்கையின் இறையாண்மையுள்ள தமிழ் மக்கள்தான்- நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்த...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
கிளிநொச்சி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கு நீர் வசதி விரைவில் கிட்டும் - டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத...