18 இலட்சம் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை  –  டிரம்ப் !

Saturday, January 27th, 2018

அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் உட்பட 18 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவில் சட்ட விரோத குடியுரிமையை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதற்கு 2500கோடி அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதற்கான நிதியை பெற டிரம்ப் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. நிதி ஒப்புதல் பெறுவதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, குழந்தை பருவத்திலேயே அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக குடியேறியவர்கள் ‘டிரீமர்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை வெளியேற்றுவதை தள்ளி வைக்கும் ‘டாகா’ எனப்படும் திட்டம் ஒபாமா அதிபராக இருந்தபோது அமுல்படுத்தப்பட்டது.

ஆனால் தற்போதைய அதிபர் டிரம்ப் அவர்களை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிற நிலையில், டிரம்பின் கனவு திட்டமான மெக்சிகோ எல்லை சுவர் கட்ட 2500 கோடி டாலர் நிதியை வழங்க எதிர்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் ஒப்புதல் வழங்கினால் ‘டிரீமர்ஸ்’ எனப்படும் சட்ட விரோதமாக குடியேறிவர்களுக்கு அடுத்த 10-12 ஆண்டுகளில் குடியுரிமை வழங்க ஆவண செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆளும் குடியரசு கட்சி எம்.பி.க்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இக்கருத்தை டிரம்ப் வெளியிட்டார். இதன்மூலம் 18 லட்சம் பேர் குடியுரிமை பெறுவார்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: