மெக்சிக்கோவின் ஜனாதிபதியானார் அன்ரஸ் மனுஎல்!

Tuesday, July 3rd, 2018

மெக்சிக்கோ ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் அன்ரஸ் மனுஎல் லொப்பேஸ் ஒப்ராடோ (Andres Manuel Lopez Obrador) 53 சதவீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மெக்சிக்கோ நகரத்தின் முன்னாள் முதல்வராக பணியாற்றிய இவர் ஊழலுக்கு எதிராக பாரிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர் அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவிற்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதியினால், அமெரிக்காவில் வாழும் மெக்சிக்கோ பணியாளர்களுக்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைக்கு மெக்சிக்கோ பெரும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது.

இது தவிர, மெக்சிக்கோவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக மெக்சிக்கோ குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், இடதுசாரி வேட்பாளர் அன்ரஸ் மனுஎல் மெக்சிக்கோவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

எப்படியிருப்பினும், டொனால்ட் ட்ரம்ப் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர், அமெரிக்காவிற்கு எதிரான கடும்கோப்பான செயல்பாடுகளில் ஈடுபடுவார் என கருதப்படுகிறது.

பொருளாதார விடயத்தில், அமெரிக்காவுடன் மெக்சிக்கோ மாறுபட்ட கருத்தை கொள்ளுமானால், மெக்சிக்கோவின் பொருளாதாரம் வெனிசுவேலா போன்ற நிலைக்கு தள்ளப்படலாம் என எதிர்கட்சிகள் தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related posts: