வங்கதேசத்தில் போர் குற்றங்களில் ஈடுபட்ட ஜமாத் தலைவரின் மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்!

Friday, May 6th, 2016

வங்கதேசத்தில் போர் குற்றங்களில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாமி அடிப்படைவாத அமைப்பின் தலைவர் மோத்தியுர் ரகுமான் நிஜாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்துள்ளது.

வங்கதேசத்தில் கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலை போர் நடந்தது.  இந்த போரின்பொழுது கொலை, கற்பழிப்பு மற்றும் முக்கிய தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றங்களில் பலர் ஈடுபட்டனர்.  இந்நிலையில் போர் குற்றங்கள் குறித்து விரிவான அளவில் விசாரணை நடந்தது.

இதில் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அடிப்படைவாத அமைப்பின் தலைவரான நிஜாமி (வயது 72) குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு சுப்ரீம் கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  இந்த தீர்ப்பினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன் நிஜாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீது கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நடந்த விசாரணையில் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் 4 பேர் கொண்ட அமர்வு முன் நிஜாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மனுவினை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா தலைமையிலான அமர்வு விசாரித்து குறித்த மனுவை நிராகரிக்கப்பட்டது என தனது தீர்ப்பினை அறிவித்துள்ளார்.

 சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவினால் நிஜாமியை அரசாங்கம் தூக்கிலிடுவதற்கு இருந்த சட்டபூர்வ ஒரே தடையும் நீங்கி விட்டது.  எனினும் ஜனாதிபதியின் கருணையை பெறுவது ஒன்றே நிஜாமிக்கு உள்ள ஒரே வாய்ப்பு.ஆனால் போர் குற்றங்களில் ஈடுபட்ட 2 பேரது வேண்டுகோளினை ஜனாதிபதி அப்துல் ஹமீது இதற்கு முன் நிராகரித்து உள்ளார்.  அவர்களில் நிஜாமின் முக்கிய உதவியாளர் ஒருவரும் அடங்குவார்.  அவர்கள் இருவருக்கும் கடந்த வருட இறுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: