பிரான்ஸ் தேவாலய தீவிபத்து : விசாரணை அதிகாரிகள் சந்தேகம்!

Thursday, June 27th, 2019

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நாட்டர்டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்துக்கு அலட்சியமாக தூக்கியெறியப்பட்ட சிகரெட் துண்டோ, மின்கசிவோ காரணமாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டர்டாம் தேவாலய தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், அந்த விபத்துக்கு காரணமாக இருந்திருக்கக் கூடிய பல்வேறு சூழல்களை பட்டியலிட்டுள்ளனர்.

அலட்சியமாக தூக்கியெறியப்பட்ட சிகரெட் துண்டு, மின்சாரக் கசிவு ஆகியவையும் அந்தப் பட்டியலில் அடங்கும். இருப்பினும், அந்த விபத்துக்கு சதிவேலை காரணமாக இல்லை என்று விசாரணை அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர் என்று நீதித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரீஸ் நகரில் அமைந்துள்ள, புகழ்பெற்ற நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென தீப்பிடித்தது.

அதன் காரணமாக, 12-ஆவது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட்டப்பட்ட அந்த தேவாலய மேற்கூரையின் பெரும் பகுதி எரிந்து சேதமடைந்தது.

மேலும், இந்தத் தேவாலயத்துக்கு கம்பீரத்தை அளித்து வந்த புகழ்பெற்ற கூம்பு வடிவ கோபுரம் இடிந்து விழுந்தது. அத்துடன், தேவாலயத்தின் உள்பகுதி, மேற்சுவர், ஜன்னல்கள் மற்றும் ஏராளமான கலைப் படைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்தன.

இந்த விபத்து குறித்து 50 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் நீதித் துறை அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related posts: