பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தெரிவு!

Tuesday, April 12th, 2022

பாகிஸ்தானின் புதிய பிரதமராக அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமர் போட்டியில் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதருமான ஷபாஸ் ஷெரீப் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்திருந்தன.

இந்தப் போட்டியில் இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி(பி.டி.ஐ.) சார்பில் ஷா மஹ்மூத் குரேஷி மனுத்தாக்கல் செய்திருந்தார். புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டு பாராளுமன்றம் கூடியது. புதிய பிரதமரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், அதை தனது கட்சி புறக்கணிப்பதாக ஷா மஹ்மூத் குரேஷி அறிவித்தார்.

இதையடுத்து அவரது கட்சி எம்.பிக்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.  இதனால் எதிர்க்கட்சி வேட்பாளரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் தலைவருமான ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். இன்று இரவே அவர் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக பிடிஐ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை இராஜினாமா செய்வார்கள் என்று, முன்னாள் தகவல்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: