பாக். முன்னாள் ஜனாதிபதியின் சொத்துக்கள் பறிமுதல்: நீதிமன்றம் உத்தரவு!

Sunday, September 18th, 2016

பாகிஸ்தானில் மதகுரு  ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முஷாரப் ஜனாதிபதியாக இருந்தபோது 2007ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடியது. இந்த மோதலில் மதகுரு அப்துல் ரஷீத் காஜி கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு முஷாரப் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

மேலும், தேசத்துரோக வழக்கு, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற முஷாரப், கடந்த மார்ச் மாதம் துபாய் சென்றார்.

அதன்பின்னர் இதுவரையில் நாடு திரும்பவில்லை. அவர் மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தொடர்ந்து சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையில் தோய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முஷாரப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அரசு நிர்வாகத்திற்கு உதவி செய்வதற்காக ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்காக, அவர்கள் மீதோ அதிகாரிகள் மீதோ வழக்கு பதிவு செய்ய முடியாது என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி நிராகரித்தார். அத்துடன், விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். இதனால் இந்த வழக்கு தொடர்பில் திடீர் திருப்பங்கள் அடுத்த சில தினங்களில் ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

pak_musharap

Related posts: