பன்றிக்குள் வளரும் மனித உறுப்புகள்!

Tuesday, June 7th, 2016

அமெரிக்க விஞ்ஞானிகள் பன்றிகளின் உடலுக்குள் மனித உறுப்புக்களை வளர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்.

Gene Editing என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மரபணு திருத்த தொழில்நுட்பம் மூலம் மரபணுக்களை எளிதாகவும் விரைவாகவும் மாற்றியமைத்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மனித உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான உடலுறுப்புகள் போதாமைக்கு இந்த ஆய்வின் முடிவு தீர்வாக அமையும் என்று சில நிபுணர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் இந்த ஆய்வு பல தார்மீக கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

தற்போதைய ஆய்வில் மனித குருத்தணுக்கள் கருவுற்று ஒரு நாளே ஆன பன்றியின் கருவுக்குள் ஊசிமூலம் செலுத்தப்பட்டன. பன்றிக்குள் மனித கணையத்தை வளர்ப்பதற்கு கலிபோர்னிய பல்கலைக்கழக பேராசிரியர் பப்லோ ரோஸ் முயற்சி செய்திருக்கிறார்.

“இந்த பன்றியின் கரு இயல்பாக வளரும் என்று எதிர்பார்கிறோம். ஆனால் அதன் கணையம் முழுக்க முழுக்க மனித செல்களில் இருந்து வளரும். அந்த கணையம் மனிதர்களுக்கு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படும்”, என்கிறார் அவர்.

இது மரபணு திருத்தும் தொழில்நுட்பம் என்றழைக்கப்படுகிறது. பன்றியின் கருவுக்குள் கணையத்தை உருவாக்குவதற்கான மரபணு உத்தரவுகளை மூலக்கூற்று கத்தரிக்கோல் மூலம் அகற்றுகிறது. அந்த வெற்றிடத்தை மனித செல்களால் நிரப்பி மனித கணையத்தை வளர்க்கலாம் என்பது நோக்கம்.

இதே தொழில்நுட்பம் மற்ற மனித உறுப்புகளையும் வளர்க்க உதவக்கூடும். இதில் முக்கியமாக, இப்படியான பன்றிக்கருக்களின் வளரும் மூளைகளில் மனிதத்தன்மைகள் உள்வாங்கப்படுகின்றனவா என்பது ஆராயப்படும்.

இந்த கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை என்று இந்த துறையின் முன்னோடியான மினிசோட்டா பல்கலைக்கழக பேராசிரியர் வால்டர் லோ தெரிவித்துள்ளார்..

“நாங்கள் மனிதர்களுக்காக சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் என்று எதை உருவாக்கினாலும் மூளைக்குள் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்போம். அது பெருமளவு மனிதனைப்போல் இருந்தால் அந்த சிசு பிறப்பதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்”, என்றார் அவர்.

விலங்குப் பண்ணைகளை எதிர்க்கும் செயற்பாட்டாளர்களோ உடலுறுப்புகளுக்காக விலங்குப்பண்ணைகள் உருவாக்கப்படுவதை எதிர்க்கிறார்கள்.

பண்ணைகளில் இரக்கத்துக்கான அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் புபீட்டர் ஸ்டீவன்சன், விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கான இன்னொரு வழி உருவாவது தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்தார்.

“முதலில் அதிகமானவர்களை உடலுறுப்பு தானம் செய்யவைப்போம். அதன் பின்னும் தேவைப்பட்டால் பன்றிகளை பயன்படுத்துவதைப்பற்றி பரிசீலிக்கலாம். அப்போதும் கூட இதற்காக கூடுதலாக பன்றிகள் வளர்க்காமல், மனிதர்க்ள் உண்ணும் இறைச்சியின் அளவைக்குறைத்த பிறகே இதை செய்யலாம்”, என்றார் அவர்.

உலக அளவில் உடலுறுப்புக்காக காத்திருப்போர் பட்டியலில் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் உடலுறுப்புகள் கிடைக்காமல் ஆண்டுதோறும் இறக்கிறார்கள். ஆனாலும் மரபணு திருத்தம் மூலம் பன்றிகளின் கருக்களில் வளரும் உடலுறுப்புகள் மனிதர்களுக்குப் பொருத்தும் பரிசோதனைகள் நடக்க இன்னும் நீண்டகாலம் பிடிக்கக்கூடும். (நன்றி பி.பி.சி)

Related posts: