சுவாதி கொலை வழக்கு :பிலால் உட்பட அறுவரது சாட்சியம் பதிவு!
Sunday, August 7th, 2016
சுவாதி கொலை வழக்கில் முகமது பிலால் உள்பட 6 பேரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஒருவார தேடுதல் வேட்டைக்குப் பின்னர் செங்கோட்டை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார்.ராம்குமாரை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் போலீசாருக்கு சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.சுவாதியின் ஆண் நண்பரான முகமது பிலாலிடம் பல முறை போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.
ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து இருந்த போதும் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து முகமது பிலாலிடம் விசாரணை நடத்தப்பட்டது.புதன்கிழமை இரவு திடீரென முகமது பிலாலை காவல் நிலையத்திற்கு வரவழைத்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நுங்கம்பாக்கம் போலீசார் உள்ளதால் அதற்கு தேவையான ஆதாரங்கள் குறித்தும் சுவாதி தொடர்பான தகவல்கள் குறித்தும் விசாரணை நடத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நாளை திங்கட்கிழமையன்று புழல் சிறையில் உள்ள ராம்குமாரை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் நடக்க வைத்து போலீசார் வீடியோ பதிவு எடுக்கவுள்ளனர்.அப்போது பிலாலையும் உடன் வைத்து அவரிடமும் சில தகவல்களை பெறவுள்ளனர். அதற்காக பிலாலை நேரில் வர வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நேற்று சுவாதி கொலை வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்பு சுவாதியின் நண்பர் முகமது பிலால், சுவாதியின் தோழி உள்பட 6 பேரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related posts:
|
|
|


