கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்களுக்கு சென்றடைய இரண்டரை வருடங்கள் செல்லும் – உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவிப்பு!

Thursday, May 14th, 2020

கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் ஆகும் என கொரோனா தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான மற்றும் நன்கு பலன் தரக்கூடிய தடுப்பூசியை உருவாக்கக் குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதை அதிகளவில் உற்பத்தி செய்து, 7.8 பில்லியன் உலக மக்களுக்கு கொண்டு செல்ல மேலும் ஒரு வருடம் ஆகும் என அவர் கூறியுள்ளார்.

இலண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில், உலக சுகாதார பேராசிரியராகவும் பணியாற்றி வரும் டேவிட் நபரோ, சில கிருமிகளுக்கான பாதுகாப்பான தடுப்பூசி பல வருடங்களாகியும் உருவாக்க முடியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும், கொரோனா குறித்த எச்சரிக்கையை முன்பே ஏன் தெரிவிக்கவில்லை என உலக மக்கள் தங்கள் நாட்டு அரசையும், உலக சுகாதார நிறுவனத்தையும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஸ்பெயின், இத்தாலி, பிரித்தானியா மற்றும் அமெரிக்க மக்கள் நாம் இன்னும் விரைவாக செயல்பட்டுருக்க முடியாதா என கேட்கின்றனர். முன்பே முடிவுகளை எடுத்திருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும் என இப்போது நாம் உணர்ந்திருக்கிறோம்.

ஆனால், இந்தியாவில் முதல் தொற்று கண்டறியப்பட்டபோதே, முடக்கத்தை அறிவித்திருந்தால், மில்லியன் கணக்கான மக்கள் உடனடியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறார் டேவிட் நபரோ.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் உயர்ந்து வரும் நிலையில், அதில் 50 முதல் 70 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை என அரசு தரவுகள் கூறுகின்றன.

வலுவான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும் நபருக்கு, கொரோனா அறிகுறியே தெரியாது. ஆனால், அவரால் மற்றவர்களுக்கு நோய் பரவும் என நிபுணர்கள் நம்புகின்றனர் எனவும் டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.

Related posts: