ஈராக் சிறுவன் நீரில் மூழ்கடிப்பட்டு இறந்த சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோருகிறது பிரித்தானியா!
Friday, September 16th, 2016
ஈராக்கிய நகரான பாஸ்ராவில் 2003ஆம் ஆண்டில் 15 வயது ஈராக்கிய சிறுவன் ஒருவனை வாய்க்கால் நீரில் மூழ்கி இறக்க வைத்தற்காக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் மன்னிப்பு கோரியுள்ளது.
அஹமத் ஜப்பார் கரீம் அலி என்ற இந்தச் சிறுவன் கலவரத்தில் ஈடுபட்டதான சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டு அதற்கு தண்டனையாக ஒரு வாய்க்காலுக்குள் இறங்குமாறு படையினரால் நிர்ப்பந்திக்கப்பட்டான்.
அஹ்மத் அலிக்கு நீந்தத்தெரியாது என்ற நிலையில், அவன் தண்ணீரில் தத்தளித்தபோதும் அவனைப் படையினர் காப்பாற்றவில்லை.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு படையினர் 2006ம் ஆண்டு திட்டமிடப்படாத ஆட்கொலை என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் பற்றி முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சர் ஜார்ஜ் நியூமன் தலைமையில் நடந்த ஒரு விசாரணை அறிக்கை கவலைகளை எழுப்பியது.
படையினரின் அந்த நடவடிக்கை மோசமானது, அச்சுறுததும் நடத்தை, அது ஏற்படுத்தக்கூடிய ஆபத்தைப் பற்றி கவலை இல்லாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அந்த அறிக்கை வர்ணித்தது.இந்த விசாரணை இராக்கை 2003-2011 காலகட்டத்தில் பிரிட்டன் ஆக்ரமித்திருந்த போது ஏற்பட்ட பொதுமக்கள் மரணங்கள் குறித்து நடத்தப்படும் பல விசாரணைகளில் ஒன்று.
இராக் மரண விசாரணைகள் என்றழைக்கப்படும் இந்த விசாரணைக் குழு 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிரிட்டஷ் படைகள் சம்பந்தப்பட்ட சிறு எண்ணிக்கையிலான இராக்கிய மரணங்கள் பற்றி இது விசாரித்தது.
இந்த சம்பவங்களுக்கு எந்தத் தனி நபர் அல்லது பல நபர்கள் பொறுப்பு என்று அது பரசீலிக்கவில்லை. ” இந்த சம்பவம் ஒரு மோசமான சம்பவம் , இதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம்” , என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
“பிரிட்டிஷ் படைகள் தவறிழைத்ததாக வரும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம், சர் ஜார்ஜ் விசாரணையின் அறிக்கைகளிலிருந்து சரியான படிப்பினைகளைப் பெற்று இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை உறுதி செயவோம்”, என்றும் அது கூறியது.

Related posts:
|
|
|


