MCC யின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் சங்ககார!

Wednesday, October 2nd, 2019


கிரிக்கெட் விதிகளை வகுக்கும் இங்கிலாந்து MCC கிளப்பின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கரா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு விதியை புகுத்த வேண்டும் என்றால் அதற்கு லண்டன் லோட்ஸ் மைதானத்தில் செயல்பட்டு வரும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் (Marylebone Cricket Club) உறுப்பினர்கள் அதனை ஆராய்ந்து, விவாதித்து முடிவெடுத்தால் மட்டுமே அது சாத்தியம்.

1787ம் ஆண்டு தொடங்கப்பட்ட MCC கிளப் கிரிக்கெட் விளையாட்டின் விதிகளை வகுத்து அதன் மாண்புகளை காத்து வரும் ஒரு அமைப்பாகும். MCC கிளப்பின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கரா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆங்கிலேயர் அல்லாத ஒருவர் MCCயின் தலைவராவது இதுவே முதல் முறையாகும். இன்று முதல் ஒராண்டுக்கு குமார் சங்கக்கரா இப்பதவியில் நீடிப்பார்.

MCC கிளப்புடன் நீண்ட கால பிணைப்பில் இருந்த சங்கக்கராவை இப்பொறுப்புக்கு முன்னாள் தலைவரான அந்தோனி வ்ரெஃபோர்ட் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டின் மாண்புகளை காத்துவரும் MCC கிளப்பின் தலைவராக பொறுப்பேற்பது உயரிய கௌரவமாக கருதுவதாக குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சங்கக்கரா, இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றதுடன், விக்கெட் காப்பாளரைக அதிக விக்கெட்களை வீழ்த்தியவர், அதிக சதங்கள், இரட்டை சதங்கள் போன்ற சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: