வீழ்ந்தது இந்தியா: வெற்றியை ருசித்தது மேற்கிந்திய தீவுகள் அணி!

Sunday, August 28th, 2016

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

2 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர், பொதுவான இடமான அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் பார்க் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அங்கு இந்த போட்டிக்கு (ஆகஸ்ட் 27, 28) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் இன்று நடக்கும் முதல் டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்திலே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தது. தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் 33 பந்தில் 7 சிக்சர், 6 பவுண்டரி என 79 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த லெவிசும் இந்திய அணியின் பந்துகளை சிதறடித்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ஓட்டங்கள் சேர்த்தது. தொடர்ந்து விளாசிய லெவிஸ் சதம் அடித்தார். அவர் 49 பந்தில் 9 சிக்சர், 5 பவுண்டரி என 100 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது.பின்னர் வந்த ரஸல் 22 ஓட்டங்களும், அணித்தலைவர் பிராத்வெய்ட் 14 ஓட்டங்களும் எடுத்தனர். சிம்மோன்ஸ் (1) வந்த வேகத்தில் கிளம்பினார்.

20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டு இழப்பிற்கு 245 ஓட்டங்களை குவித்தது. பிராவோ (1), சாமுவேல்ஸ் (1) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இந்திய அணி சார்பில், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து 246 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 7 பந்துகளை சந்தித்து இருந்த நிலையில் ரஸ்ஸல் பந்துவீச்சில் ரஹானே(7) வெளியேறினார்.

ஆனால் மறுபக்கம் துவக்கம் முதலே அதிரடி காட்டினார் ரோகித் ஷர்மா. இதனிடையே ரோகித் ஷர்மாவுடன் களமிறங்கிய விராட் கோஹ்லி 9 பந்துகளை சந்தித்து 16 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பிராவோ பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ராஹுல் மற்றும் ரோகித் ஜோடி மேற்கிந்திய தீவுகள் அனியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. 28 பந்துகளை சந்தித்த ரோகித் ஷர்மா 62 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பொல்லார்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ராஹுலுடன் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் தோனி தனது அதிரடி பாணியில் மேற்கிந்திய பந்து வீச்சாளர்களை திக்குமுக்காட செய்தார். ஆனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியால் 244 ஓட்டங்களை மட்டுமே எட்ட முடிந்தது. ராஹுல்(110), தோனி(43) ஓட்டங்கள் குவித்தனர்.

மேற்கிந்திய அணி சார்பில் பிராவோ(2), ரஸ்ஸல் மற்றும் பொல்லாட் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Related posts: