முதல் தடவையாக விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் எலினா ரிபக்கினா!

Sunday, July 10th, 2022

அகில இங்கிலாந்து லோன் டென்னிஸ் கழக மத்திய அரங்கில் சனிக்கிழமை (09) நடைபெற்ற ஒன்ஸ் ஜெபோருடனான சீமாட்டிகள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 2 – 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற எலினா ரிபக்கினா முதல் தடவையாக விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றில் சம்பியனான முதலாவது கஸக்ஸ்தானியர் என்ற வரலாற்றுச் சாதனையை ரிபக்கினா படைத்தார்.

ரஷ்யாவில் பிறந்த ரிபக்கினா, 2018இல் கஸக்ஸ்தான் பிரஜையாகி அந்நாட்டுக்காக  விளையாடி வருகிறார்.

நிரல்படுத்தலில் 17ஆம் இடத்திலிருந்த 23 வயதான ரிபக்கினா, விம்பிள்டனில் தனது 7 வெற்றிகளில் 2 செட்களில் மாத்திரமே தோல்வி அடைந்தார்.

தரவரிசையில் 2ஆம் இடத்திலுள்ள டியூனிசிய வீராங்கனை ஒன்ஸ் ஜெபோருடனான இறுதிப் போட்டியின் முதலாவது செட்டில் 3 – 6 என்ற புள்ளிகள் அடிப்படையில் எலினா ரிபக்கினா தோல்வி அடைந்தார்.

முதலாவது செட்டில் ஜெபோர் வெற்றிபெற்றதால் அவர் சம்பியனாவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அடுத்த 2 செட்களில் மிகத் திறமையாக விளையாடிய ரிபக்கினா முறையே 6 – 2, 6 – 2 என வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

இந்த வெற்றியின் மூலம் தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ரிபக்கினா வென்றெடுத்தார்.

விம்பிள்டனில் சம்பியனானது எனக்கு பெரு மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுத்துள்ளது என ரிபக்கினா குறிப்பிடார்.

இந்த வெற்றி குறித்து பேசிய ரிபக்கினா,, ‘எனக்கு வார்த்தைகள் வரமாட்டேன் என்கிறது. இரசிகர்கள் கூட்டம் நம்பமுடியாததாக இருந்தது. ஒன்ஸை வாழ்த்த விரும்புகிறேன். ஒன்ஸ் நீங்கள் ஒரு உத்வேகம் கொண்ட வீராங்கனை. உங்களை எதிர்த்த விளையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்பமுடியாத சூழ்நிலையில் இங்கு விளையாடக் கிடைத்தது பெருமை தருகிறது.

‘இரண்டாவது வாரத்தில் நுழைவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு சம்பியனாக இருப்பது ஆச்சரியம் தருகிறது. எனது அணியினர் இல்லாமல் நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். எனவே அவர்களுக்கு எனது மிகப் பெரிய நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். எனது பெற்றோருக்கும் முக்கியமாக நன்றி கூறுகிறேன்’ என்றார்

000

Related posts: