இந்திய தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து குக் ஓய்வு!

Wednesday, September 5th, 2018

இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்திருக்கும் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான அலஸ்டைர் குக், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை அடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி உருவாக்கிய தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படும் குக் இங்கிலாந்து அணிக்கு 2010 / 11 ஆண்டு காலப்பகுதியில் கிடைத்த பிரபலமான ஆஷஸ் வெற்றி 2012/13 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய சுற்றுப் பயணத்தின் போது கிடைத்த டெஸ்ட் தொடர் வெற்றி ஆகியவற்றுக்கு பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தார். அத்துடன் அவர் கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இரட்டைச் சதங்களை விளாசி திறமையை நிருபித்திருந்தார்.

எனினும் அலஸ்டைர் குக் அண்மைக் காலங்களில் துடுப்பாட்டத்தில் அந்தளவு பிரகாசிக்கவில்லை. இதேநேரம் 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் தலைவர் பதவியை துறந்த அவர் அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் 35 இற்கு கீழான ஓட்ட சராசரியைக் காட்டி இந்த ஆண்டில் ஒரேயொரு அரைச்சதம் மாத்திரமே பெற்றிருக்கின்றார். இவை அனைத்தையும் ஒரு எச்சரிக்கையாக கருத்திற்கொண்டே அலஸ்டைர் குக் தனது ஓய்வை அறிவித்திருக்கின்றார் என நம்பப்படுகின்றது.

“கடந்த சில மாதங்களில் எனக்கு உருவாகிய யோசனைகள் அதன் பிறகு நான் தீர்க்கமாக ஆராய்ந்து எடுத்த முடிவுகள் என்பவற்றின் அடிப்படையில் நான் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை அடுத்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கின்றேன்“ என குக் தெரிவித்தார்

“என்ன இருந்தாலும் இது ஒரு சோகமான நாள். என்னிடம் இருந்த அனைத்தையும் மீதம் வைக்காமல் கொடுத்து விட்டேன் என்பதை எனது முகத்தில் ஒரு புன்னகையை காட்டி மட்டுமே தெரிவிக்க கூடியதாக உள்ளது“ என குக் மேலும் பேசினார்.

இங்கிலாந்து அணியில் குக் போன்று திறமையாக யாரும் இதுவரையில் செயற்பட்டிருக்கவில்லை. குக் இதுவரையில் டெஸ்ட் போட்டிகளில் 32 சதங்கள் அடங்கலாக 12254 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம் குக் ஓவல் மைதானத்தில் விளையாடப் போகும் கடைசி டெஸ்ட் போட்டி அவரது 159 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் குக் வரலாற்றில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரராகவே ஓய்வு பெறவிருக்கின்றார்.

“நான் ஒரு போதும் நினைத்து பார்க்காத விடயங்கள் பலவற்றை அடைந்திருக்கின்றேன். அதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த ஆங்கில விளையாட்டின் சிறந்த வீரர்கள் உடனும் சேர்ந்து ஆடியதில் இன்னும் சந்தோஷம். (ஓய்வு பெறும் விடயத்தை) நான் சக வீரர்களுடன் ஓய்வறையில் வைத்து பகிராததன் காரணம் அது சிலருக்கு கடினமானதாக அமையலாம் ஆனாலும் இதுவே சிறந்த நேரமாக இருக்கின்றது“ எனக் கூறிய அலஸ்டைர் குக் அவரது கடந்த கால கிரிக்கெட் வாழ்க்கையில் நினைவுகூறக் கூடியதாக இருந்த விடயங்கள் சிலவற்றை பகிர்ந்திருந்தார்.

கிட்டத்தட்ட 12 வருட காலம் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த அலஸ்டைர் குக் அதற்கு உதவியாக இருந்த அவரது குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

அலஸ்டைர் குக் சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்தாலும் அவரது தாய்க் கவுன்டி கழகமான எசெக்ஸ் அணிக்கு தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடவிருப்பதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது “எனக்கு 12 வயதில் இருந்து அனைத்து விதத்திலும் உதவியாக இருந்த எசெக்ஸ் கழகத்திற்கு நன்றி.

நான் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டின் பருவகாலத்திற்காக ஆட மிகவும் ஆவலுடன் உள்ளேன். இங்கிலாந்து அணி எதிர்காலத்தில் ஒவ்வொரு தடவை சாதிக்கும் போதும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் நான் அப்படியான (சாதனைகள்) ஒவ்வொன்றையும் மிகவும் களிப்புடன் பார்த்தவாறு இருப்பேன்“ எனப் பேசியிருந்தார்

Related posts: