வாய்ப்பு கிடைக்காவிட்டால் அமெரிக்காவுக்காக விளையாடத் தயார் – லியம் பிளங்கெட் தெரிவிப்பு!

Wednesday, June 3rd, 2020

இங்கிலாந்து அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால், அமெரிக்க அணிக்காக விளையாடத் தயாராக உள்ளதாக லியம் பிளங்கெட் கூறியுள்ளார்.

35 வயது வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட், இங்கிலாந்து அணிக்காக 13 டெஸ்டுகள், 89 ஒருநாள், 22 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2019 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணியின் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறாத பிளங்கெட், அடுத்த தொடர்களுக்காகப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 55 இங்கிலாந்து வீரர்களின் பட்டியலிலும் இடம்பெறவில்லை.

பிளங்கெட்டின் மனைவி அமெரிக்காவைச் சேர்ந்தவர். இதனால் இங்கிலாந்து அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால், அமெரிக்க அணிக்காக விளையாடத் தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இது நடக்கவேண்டுமென்றால் அமெரிக்காவில் மூன்று வருடங்கள் பிளங்கெட் வசிக்கவேண்டும். அமெரிக்க ஒருநாள் அணி, கடந்த வருடம் சர்வதேச ஆட்டங்களில் விளையாடத் தகுதி பெற்றது. தன்னுடைய நிலை பற்றி ஒரு பேட்டியில் பிளங்கெட் கூறியதாவது:

உலகின் சிறந்த ஒருநாள் அணிக்காக விளையாட விருப்பப்படுகிறேன். இன்னும் என்னால் இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியும். உலகக் கோப்பை முடிந்தபிறகு அப்படியொன்றும் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இங்கிலாந்து அணியினர் வேறொரு பாதையில், இளம் வீரர்களைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுவதாக என்னிடம் சொல்லப்பட்டது.

நான் இங்கிலாந்தைச் சேர்ந்தவன். எப்போதும் அப்படித்தான் இருப்பேன். ஆனால் நான் சரியான உடற்தகுதியில் இருந்தும் சர்வதேச அளவில் விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால் நான் ஏன் அமெரிக்க அணிக்காக விளையாடும் வாய்ப்பை எடுத்துக்கொள்ளக் கூடாது?

நான் அங்குச் சென்று, அமெரிக்கக் குடிமகனாகி அல்லது கிரீன் கார்ட் பெற்று, அமெரிக்க கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவ முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: