சுயநினைவு திரும்புமா என்று கண்டறியும் பரிசோதனை!

Tuesday, June 7th, 2016

மூளையின் ஸ்கேன் செய்யப்பட்ட பகுதியை காட்டும் படம். இடதுபுறம் உள்ள படம் கோமா நிலையில் உள்ளவரின் மூளை அமைப்பையும், நடுவில் உள்ள படம் பாதி விழிப்பு நிலையில் உள்ளவரின் மூளை அமைப்பையும், கடைசியில் உள்ள படம் நல்ல நிலையில் உள்ளவரின் மூளை அமைப்பையும் காட்டுகிறது.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஏற்படும் வேறுபாடுகள் காரணமாக மனிதர்களுக்கு மத்தியில் பல்வேறு வகையான பாகுபாடுகள் தோன்றினாலும் மனிதர்கள் அனைவருக்குமே வாழ்க்கை என்பது நிலையில்லாததே. உதாரணமாக, பிறப்பு மற்றும் இறப்பு குறித்து கூறும்போது தெய்வப்புலவர் திருவள்ளுவர், திருக்குறளில் உள்ள நிலையாமை என்னும் அதிகாரத்தில்

‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு’என்கிறார்.

அதாவது, நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு என்பதே குறள் சொல்லும் செய்தி.

இறப்பு என்பது மிகவும் துயரமானது என்றால், நரம்புக்கோளாறுகள் அல்லது விபத்துகள் காரணமாக உயிருள்ளவரை உறங்கிக்கொண்டே இருக்கும் துரதிர்ஷ்டவசமான நிலைக்கு மனிதர்களைத் தள்ளிவிடும் ‘கோமா’ என்பது அதைவிடக் கொடுமையானது.

முக்கியமாக, கோமா நிலைக்கு சென்றவர்களுக்கு சுய நினைவு திரும்புமா திரும்பாதா?, ஒருவேளை திரும்பும் என்றால் எப்போது திரும்பும்? போன்ற பல கேள்விகளுக்கு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் விண்வெளி வரை சென்று கோலோச்சுகின்ற இந்த 21 நூற்றாண்டிலும் இன்னும் விடை காண முடியவில்லை.

ஏனென்றால், மனிதர்களின் மூளை ஒவ்வொன்றும் வித்தியாசமானது. அதனால் கோமா நிலையில் உள்ளவர்களுக்கு எப்போது சுயநினைவு திரும்பும் என்பதை கணிப்பது எளிதானதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக, தற்போது பரவலான பயன்பாட்டிலிருக்கும் PET scan அல்லது பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்றழைக்கப்படும் ஸ்கேன் பரிசோதனையானது கோமாவில் இருக்கும் ஒரு நோயாளி எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார் என்பதையும், அவருக்கு சுய நினைவு திரும்புவது சாத்தியமா என்பதையும் கண்டறிய உதவக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சுவாரசியமாக, மூளையிலுள்ள உயிரணுக்கள் எவ்வளவு சர்க்கரையை உட்கொள்கின்றன என்பதை கணக்கிடும் PET scan பரிசோதனையானது, தற்போது ஒருவர் முழுமையான கோமாவில் இருக்கிறாரா அல்லது விழிப்புணர்வுடன் இருப்பதற்கான சில அறிகுறிகளுடன் இருக்கக்கூடிய அரை கோமா நிலையில் இருக்கிறாரா என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதே PET scan பரிசோதனையைப் பயன்படுத்தி கோமாவில் இருக்கும் ஒரு நோயாளிக்கு எப்பொழுது சுயநினைவு திரும்பும் என்பதை திட்டவட்டமாக கூற முடியும் என்று நிரூபித்து அசத்தியிருக்கிறது டென்மார்க்கிலுள்ள கோப்பன்ஹேகன் மற்றும் அமெரிக்காவிலுள்ள ஏல் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நரம்பியலாளர் ரான் கியூப்பர்ஸ் தலைமையிலான ஆய்வுக்குழு.

சுருக்கமாகச் சொன்னால் ‘ஒரு மூளை பாதிப்புக்கு பின்னர் சுய நினைவை இழந்த ஒருவருக்கு மீண்டும் சுயநினைவு திரும்ப வேண்டுமானால், அவரது மூளை உயிரணுக்களில் ஒரு குறைந்தபட்ச வளர்ச்சிதை மாற்றம் நிகழ வேண்டும்’ என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது என்கிறார் ரான்.

முழுமையாக சுயநினைவே இல்லாத, அல்லது அரைகுறையான சுய நினைவு கொண்ட, மூளைக் காயங்களால் பாதிக்கப்பட்ட சுமார் 131 நோயாளிகளை FDGPET எனும் ஒருவகையானPET scan பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களின் நரம்புகளில் நிகழும் வளர்ச்சிதை மாற்றம் கணக்கிடப்பட்டது. பின்னர் அந்த முடிவுகளைக் கொண்டு, இதற்கு முன்னர் இதே அளவு வளர்ச்சிதை மாற்றம் கொண்டிருந்த கோமா நோயாளிகளுக்கு ஒருவருடத்துக்குள் சுயநினைவு திரும்பியதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில், 42 சதவீதத்திற்கும் குறைவான மூளை செயல்பாடு கொண்ட கோமா நோயாளிகளுக்கு ஒரு வருடத்துக்குள் சுயநினைவு திரும்பவில்லை என்பது கண்டறியப்பட்டது.

ஆக மொத்தத்தில், 42 சதவீதத்திற்கு அதிகமாக மூளை செயல்பாடு நிகழும்போதுதான் மனிதர்களுக்கு சுயநினைவு ஏற்படுகிறது என்ற நரம்பியல் உண்மையை முதல் முறையான வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்த ஆய்வு மூலமாக FDGPET எனும் பரிசோதனையைப் பயன்டுத்தி கோமாவில் இருக்கும் ஒருவருக்கு ஒரு வருடத்தில் சுயநினைவு திரும்பிவிடும் என்பதை சுமார் 94 சதவீதம் உறுதியாக சொல்ல முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(நன்றி இணையம்)

Related posts: