பாரச்சூட் இல்லாமல் 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த அமெரிக்க வீரர்!

Monday, August 1st, 2016

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஸ்கை டைவிங் வீரரான லுக் ஐகின்ஸ் 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாரச்சூட் இல்லாமல் பாலைவனப் பகுதியில் குதித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அந்த ‘லைவ்’ வீடியோவை உங்களுக்காக இணைத்துள்ளோம்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஸ்கை டைவிங் வீரரான லூக் ஐகின்ஸ்(42) இதுவரை பாரச்சூட் மூலம் வானில் இருந்து கீழே குதிக்கும் சுமார் 18 ஆயிரம் சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். இதில் எல்லாம் திருப்தியடையாத அவர் வேறு ஏதாவது வகையில் மிகப்பெரிய உலக சாதனையை படைக்க வேண்டும் என விரும்பினார்.

இத்தனை முறை பாரச்சூட்டுடன் குதித்த நாம், இம்முறை பாரச்சூட் இல்லாமல் வானில் இருந்து கீழே குதித்தால் என்ன? என்று யோசித்தார். இதற்காக சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், இன்று அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் அந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

விமானத்தில் பறந்து சென்ற லூக், சுமார் 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கலிபோர்னியாவில் உள்ள பாலைவனப்பகுதியை நோக்கி பாரச்சூட் ஏதுமின்றி கீழே குதித்தார். மணிக்கு 150 மைல் வேகத்தில் பூமியை நோக்கி விழுந்து கொண்டிருந்த அவர் சுமார் 18 ஆயிரம் அடி தூரத்துக்கு வந்தபின்னர் தான் அணிந்திருந்த ஆக்சிஜன் முகமூடியையும் கழற்றி விட்டார்.

அவர் வந்து விழ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் 100 அடிக்கு 100 அடி பரப்பளவு கொண்ட வலை ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தை சுற்றிலும் லூக்கின் குடும்பத்தாரும், அவரது நண்பர்களும், ரசிகர்களும் துடிதுடிக்கும் இதயங்களுடன் காத்திருந்தனர்.

இந்த காட்சிகள் அனைத்தையும் பிரபல டி.வி. சேனல் ‘லைவ்’ ஆக ஒளிபரப்பியது. திட்டமிட்டபடி பாலைவனத்தில் விரிக்கப்பட்டிருந்த அந்த வலைக்குள் பத்திரமாக வந்து விழுந்த லூக் ஐகின்ஸ், சில வினாடிகளுக்கு பின்னர் உடலில் ஒட்டியிருந்த தூசை தட்டிவிட்டபடி படபடப்புடன் அங்கு நின்றிருந்த மனைவி மோனிக்காவை நோக்கி ஓடோடி சென்று கட்டியணைத்து முத்தமழை பொழிந்தார்.

Related posts: