5,450 பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, August 2nd, 2023

5 ஆயிரத்து 450 பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி தர மேம்பாடு தொடர்பில், பதுளையில் இடம்பெற்ற அதிபர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகியனவற்றை கற்பிப்பதற்காக குறித்த பட்டதாரிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரிய வெற்றிடங்களுக்காக உள்வாங்கப்படவுள்ளனர். இதேவேளை, அடுத்த வருடத்திற்கான பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் குறிப்பிட்ட திகதிகளில் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆசிரிய உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் இன்னும் ஆசிரியர் சேவைக்குள் இணைத்து கொள்ளப்படாதுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி அவர்கள், ஆசிரிய உதவியாளர்களாக இணைத்து கொள்ளப்பட்டிருந்தனர். அவர்கள், தமது பயிற்சியினை உரிய வகையில் பூர்த்தி செய்திருந்தும், இன்னும் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்படாதுள்ளனர்.

கடந்த மாதத்திற்குள் மத்திய மாகாணத்தில், உள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவித்திருப்பினும், தொடர்ந்தும் இந்த நியமனம் இழுபறி நிலையிலேயே காணப்படுகின்றது.

எவ்வாறாயினும், மலையகத்தை பிரதிநிதிப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பினும், இதுவரை தமக்கான நியமனம் தொடர்பில் எவரும் கரிசனை காட்;டவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையிலும், தொடர்ந்தும் 10 ஆயிரம் ரூபா வேதனத்தில் பணியாற்றுவது பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மலையக ஆசிரிய உதவியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: