இடைக்கால அறிக்கை பிரதமரின் செயலாளரிடம் கையளிப்பு!

Monday, June 5th, 2017

வெள்ளம், மண்சரிவு என்பனவற்றினால் ஏற்பட்ட அனர்த்தம் பற்றி தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்காவிடம் கையளிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையே  பிரதமரின் செயலாளரிடம் நேற்று ஒப்படைக்கபட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கையின் சுருக்கம் குறித்து  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சமன் ஏக்கநாயக்க தொலைபேசி மூலம் அறிவித்தார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களினதும் மக்களதும் பொருளாதார செயற்பாடுகளை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் மத்திய வங்கியும் தேசியக் கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சும் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளன.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற வரவு செலவுத் திட்ட சட்டகத்திற்குள் மேற்கொள்ளக்கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.  மேலதிக நிதியை சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் பிரதமர் அவரது செயலாளர் பணிப்புரை வழங்கினார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் என்பனவற்றின் பிரதிநிதிகளுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் வழங்குவதற்காக இரண்டு பில்லியன் ரூபாவை விடுவிக்க திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேசங்கள், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகிய தரப்புக்களின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான குழுவொன்றும் அமைக்கப்பட இருக்கின்றது.

Related posts: