பயணச்சீட்டுக்களை நான்கு விதமாக விநியோகிக்க நடவடிக்கை – தொடருந்துத் திணைக்களம்!

Saturday, December 29th, 2018

தொடருந்து பயணச்சீட்டுக்களை நான்கு விதமாக விநியோகிப்பதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் – ஜூலை மாதங்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இதற்கான கேள்விக்கோரல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 வெளிநாட்டு நிறுவனங்கள் கேள்வி மனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தொடருந்து திணைக்கள முகாமையாளர் டிலான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டத்தில், இலத்திரனியல் அட்டைகள், இயந்திரத்தின் உதவியில் பயணச்சீட்டுக்களை வழங்குதல், தொலைபேசி செயலிகள் மூலமாக பயணச்சீட்டுக்களை பதிவுசெய்தல் மற்றும் வழமையான முறையில் பயணச்சீட்டுக்களை பெறுகின்ற முறைமைகள் உள்ளடக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கான இயந்திரங்கள் தொடருந்து நிலையங்களிலும் வியாபாரத் தொகுதிகளிலும் நிறுவுவதற்கு திட்டமிடப்படுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்தள்ளது.

அத்துடன் இலத்திரனியல் அட்டைகள் ஊடாக கட்டணங்களை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளிலும் இலத்திரனியல் அட்டைகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது பயணக் கட்டணங்களை அறவிடும் முறைமையை எதிர்வரும் காலங்களில் நிறுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக தொடருந்து திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் தொடருந்து கட்டணங்கள் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டணங்களுக்கான பயணச் சீட்டுக்கள் வழங்கப்படுவதில்லையென பயணிகளால் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் எமது செய்திச் சேவை தொடருந்து திணைக்கள முகாமையாளரிடம் வினவியபோது பதிலளித்த அவர், ஏற்கனவே அச்சிடப்பட்ட பயணச்சீட்டுக்கள் எஞ்சியுள்ளதால் தொடர்ந்தும் அவற்றையே விநியோகித்து வருவதாக தெரிவித்தார்.

Related posts: