உயிரைப் பணயம் வைத்து தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பேன் – ஜனாதிபதி!

Thursday, May 2nd, 2019

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை என்று ஒருவருக்கொருவர் குறைகூறிக் கொள்வதனை விடுத்து நாடு என்ற வகையில் ஒரே இனமாக ஒன்று திரண்டு அன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தின் வடுக்களை நினைவிற்கொண்டு பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் அனைவரும் ஒரே கொடியின் கீழ் ஒன்று திரள வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உயிரை பணயம் வைத்தேனும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்கு உறுதிபூண்டு இருப்பதாக ஜனாதிபதி அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து குடிமக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு நிபுணத்துவத்துடன் கூடிய விசேட வேலைத்திட்டங்களை எமது பாதுகாப்பு படையினர் நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துன்பியல் சம்பவத்தை தடுப்பதற்கான பொறுப்பை தவறவிட்டவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட விசேட விசாரணை குழுவின் இடைக்கால அறிக்கை தனக்கு கிடைத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்று சட்டமா அதிபருடன் கலந்துரையாடியதன் பின்னர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் உழைக்கும் மக்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் பிரிவினையின்றி ஒன்று திரள்வார்கள் என்று ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related posts: