சமுர்த்தி பெண் உத்தியோகத்தரால் தற்கொலை செய்துகொண்ட குடும்பஸ்தர்: அநாதையாக்கப்பட்ட பிள்ளைகள்!

Friday, August 28th, 2020

சமுர்த்தி அலுவலகத்தினதும், சமுர்த்தி உத்தியோகத்தரதும் செயற்பாடு காரணமாக யாழ்ப்பாணத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார் என குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறிப்பாக, அந்த முறைப்பாட்டில் அலுவலகத்தில் வைத்து பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவரை அவமரியாதையாக திட்டியதாக குறிப்பிடப்படுகிறது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் இந்த சம்பவம் நடந்தது. கடந்த 20ஆம் திகதி, சிவயோகன் என்கிற குடும்பஸ்தர் உயிரை மாய்த்தார்.

அவரது மனைவி ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், அவரது விபரீத முடிவையடுத்து பிள்ளைகள் அநாதரவாகியுள்ளனர்.

அவரது மரணத்திற்கு சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவமரியாதையாக திட்டியதேக காரணமென உறவினர்கள், முறைப்பாடு கையளித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபரின் சமுர்த்தி கொடுப்பனவை, சமுர்த்தி அலுவலகம் சில மாதங்களாக வெட்டியுள்ளது. அந்த கொடுப்பனவை மீள வழங்கும்படி அவர் சமுர்த்தி பண்டத்தரிப்பிலுள்ள அலுவலகத்திற்கு சென்று அடிக்கடி கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.

சமுர்த்தி கொடுப்பனவை நிறுத்தியதற்கான சரியான காரணங்கள் எதையும் தமக்கு சொல்லவில்லையென்றும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

சம்பவ தினத்தில் சமுர்த்தி அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர், மிகுந்த விரக்தியுடனும், அவமானத்துடனும் காணப்பட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அவர் மது அருந்திவிட்டு வீடு திரும்பியதாகவும், பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தன்னை மரியாதைக் குறைவாக பலர் முன்னிலையில் பேசியதாக அவர் பிள்ளைகளிடமும், தெரிந்தவர்களிடமும் மனவிரக்தியுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

“எடுக்கிறது பிச்சைக்காசு” என்ற வவார்த்தை உள்ளிட்ட பல தரக்குறைவான சொற்பிரயொகங்களை பலர் முன் சமுர்த்த பெண் உத்தியோகத்தர் பாவித்ததாக அவர் விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது நடவடிக்கையெடுக்குமாறு கோரி, உறவினர்களால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: