எம்.பி.க்களுக்கு தமிழ் தெரிந்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்! அமைச்சர் மனோ கணேசன்!

Tuesday, February 21st, 2017

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் தெரிந்திருப்பது அவசியம் என சட்ட விதிகள் வகுக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இது குறித்து அவர் பேசியதாவது: தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஒரு மொழியை மட்டுமே அறிந்தவர்களாக உள்ளனர்.

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் தெரிந்திருந்தால் மட்டுமே இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் உணர முடியும்.

குறிப்பாக, இலங்கைத் தமிழர்களுக்கு உள்ள பிரச்சினைகளை சிங்கள மொழியை மட்டுமே அறிந்த எம்.பி.க்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.எனவே, அனைத்து எம்.பி.க்களும் தமிழ் மொழியை கற்றறிவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

இது தொடர்பான சட்ட விதிகளை வகுப்பது அவசியம். அலுவல் மொழிக் கொள்கையைச் செயல்படுத்த இலங்கை அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இலங்கை மக்களின் பிரச்சினைகள் சிங்களவர் விவகாரம் என்றும், தமிழர் விவகாரம் என்றும் காலங்காலமாக வேறுபடுத்தியே கூறப்படுகிறது.இத்தகைய வேறுபாடுகள் நிலவும் வரை நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.

சமூக நல்லிணக்கத்துக்காக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதேவேளையில், நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் உள்ள சில தீவிரவாத அமைப்புகள் மக்களிடையே தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர் என்றார் மனோ கணேசன்.

Mano

Related posts:

யாழ் மாநகர ஆளுகைக்குட்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை - மாந...
ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரசெனிகா கொவிட் தடுப்பூசிகளை இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொ...
ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படவிருந்த 1,989 மில்லியன் ரூபா மாத இறுதிக்குள் வழங்கப்படும் - அமைச்சர் ...