23,000 ஊழியர்களின் வினைத்திறனில் பல பிரச்சினைகள் – செலவீனங்களை பார்க்கும்போது பெரும் சுமையாக உள்ளது – மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தகவல்!

Saturday, October 21st, 2023

இலங்கை மின்சார சபையின் 23,000 க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் வெளி நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட ஊழியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பணி நடைபெறாத காரணத்தினால் அவர்களுக்காக செலவழிக்கப்படும் பணம் முற்றிலும் வீணானது என மின்சார சபையின் மூத்த அதிகாரி ஒருவர் தென்னிலங்கை ஊடமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த செலவை அமைச்சினால் தாங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –

“இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்தாலும் அவர்களின் செயல்திறன் குறித்து பல சிக்கல்கள் உள்ளன .

மின்சார சபையின் இவ்வளவு பெரிய ஊழியர்களை பராமரிப்பதற்கு அமைச்சு மாதாந்த செலவு செய்தமையே மின்சாரக் கட்டண உயர்வை மறைமுகமாகப் பாதித்துள்ளது.

பெரும்பாலான ஊழியர்கள் தேவையில்லாத இடங்களில் கடமைகளைச் செய்ய நியமிக்கப்படுகின்ற நிலையில் அத்தகைய ஊழியர்களிடமிருந்து சபை எதிர்பார்க்கும் கடமைத் திறனைப் பெற முடியாது.

பணியாளர்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் தேவையில்லை.

23,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தாலும் பெரும்பாலான பணிகள் மற்ற மூன்றாம் தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

நிறுவனத்தில் அதிக பணியாளர்கள் இருக்கும்போது, ​​ஆண்டுதோறும் வெளி நிறுவனங்களில் இருந்து பணியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு சம்பளம் வழங்குவது பெரும் பிரச்னையாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் இதே முறையில் இப்பணி நடைபெற்று வருகிறது.

செலவு முகாமைத்துவம் தொடர்பில் அமைச்சு பல தடவைகள் அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும், அதற்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்

இதேவேளை, மின்சார சபையில் பணிபுரியும் 23,000 ஊழியர்களின் வினைத்திறனில் பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும், வருடாந்த செலவீனங்களை வைத்துப் பார்க்கும் போது இது பெரும் சுமை எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சு மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதுடன், இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: