2023 பெப்ரவரியில் க.பொ.த சா/த பரீட்சை – தரம் ஒன்றிற்கு மாணவர்களைச் சேர்க்கும் சுற்றறிக்கையும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Friday, June 3rd, 2022

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சா/த பரீட்சை 2023 பெப்ரவரியில் நடத்தப்படும் எனவும் அடுத்த வருடம் (2023) தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கான சுற்றறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேநேரம் 1.1 மில்லியன் மாணவர்களுக்கு போஷாக்கு உணவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை எனவும், அதனை இரட்டிப்பாக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவது தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வருடத்துக்கான உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கிடையில் நடத்தப்படும் எனவும் புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபரிலும், டிசம்பரில் நடைபெற விருந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனும் பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: