20 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியும் – சட்டமா அதிபர் அறிவிப்பு!

Wednesday, September 2nd, 2020

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் என சட்டமா அதிபர் நீதியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த வரைபு சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த வரைவு நீதியமைச்சின் செயலாளர் ஊடாக தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பொதுஜன வாக்கெடுப்பின்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றலாம் என சட்டமா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கொண்டுவரும் அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, செப்டம்பரில் இரண்டாம் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒக்டோபர் இறுதிக்குள் அதனை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பரில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தியுள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் தீவிரம் காட்டிவரும் நிலையில், இந்தத் திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய இடமளிக்கப் போவதில்லை என எதிர்த் தரப்பினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: