வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் !

Monday, October 7th, 2019


வலிகாமம் வலயக்கல்விப்பணிப்பாளரின் அடாவடி செயற்பாடுகளை நிறுத்தி பொருத்தமான நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் எடுக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்ரானின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாணத்தின் வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளரால் முறைகேடான விதத்திலான இடமாற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இடமாற்றச்சபையின் எந்த அங்கீகாரமும் இன்றி சில ஆசிரியர்களைப் பழிவாங்குவது போன்றும், சில தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சாதகமாகவும் செயற்படுத்தும் வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளரின் மிக மோசமான செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்விடயங்கள் தொடர்பாக -வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும், வடமாகாண கல்விப் பணிப்பாளருக்கும் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் இதுவரை பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படாமையே – வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளரின் இத்தகைய செயற்பாட்டுக்குக் காரணமாகும்.

சாதாரணமாக தேர்தல் காலங்களில் எந்த இடமாற்றங்களையும் வழங்க முடியாது. இத்தகைய சூழலிலும் வலிகாமம் வலயக்கல்விப்பணிப்பாளர் இடமாற்றங்களைத் தொடர்ச்சியாக முறைகேடாக செய்துவருவது – அரசியல் பின்புல செயற்பாடாக இருக்கலாம் எனவும் நாம் சந்தேகிக்கின்றோம்.

ஆசிரியர்களின் மேன்முறையீடுகளுக்கு கூட சந்தர்ப்பம் வழங்காமல் – அவர்கள் பணியாற்றிய பாடசாலைகளில் கையொப்பமிட அனுமதிக்காமல் அடாவடித்தனமாக செயற்பட்டு வருகின்றார். ஆசிரியர்களுக்கு உள்ள மேன்முறையீடு செய்யும் உரிமையை நசுக்கும் அளவுக்கு வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு – சட்டத்தை மீறும் அதிகாரங்களை வழங்கியது யார்?

இவரின் இந்த அடாவடித்தனத்துக்கு – வடமாகாண கல்வியமைச்சு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கும் இடையில் நடந்த சந்திப்பில் -தொழிற்சங்கங்களுடன் கல்வியமைச்சும் வெளிப்படைத் தன்மையாக செயற்பட தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இச்சந்திப்பில் – வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும், வடமாகாண கல்விப்பணிப்பாளரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆனால் – இந்த முறைகேடான இடமாற்றங்கள் தொடர்பான விபரத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் வலிகாமம் வலயக்கல்விப்பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளரிடம் கேட்டபோதும் -எமக்கு விபரங்கள் தொடர்ச்சியாக மறைக்கப்படுகின்றன.

வடமாகாண ஆளுநருடனான சந்திப்பில் எட்டப்பட்ட கருத்துக்களை மதித்து ௲ நாம் பல தடவைகள் வடமாகாண கல்வி செயலருக்கும், வடமாகாண கல்விப் பணிப்பாளருக்கும் இவ்விடயம் தொடர்பாக தெரிவித்திருந்த நிலையில் – இத்தகைய பல முறைகேடான இடமாற்றங்களிற்கு நடவடிக்கை எடுக்காததன் பின்னணி என்ன? என்பதை வடமாகாண ஆளுநர் கண்டறிய வேண்டும்.

இடமாற்றச்சபையின்றி வலிகாமம் கல்விப்பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்கள் அனைத்ததையும் உடன் நிறுத்தி வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts: