மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுதி – பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Tuesday, January 21st, 2020


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் காணப்படுவதனால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனவும் அதன் பங்காளிகளும் வெற்றிபெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பில் பேசிய அவர், 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம்  திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 4 மாத காலங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்காக 1,474 பில்லியன் ரூபாவை ஒதுக்கும் கணக்கு வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளமையினால் அரசாங்கத்தின் செலவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனவே தேர்தலுக்கு பின்னர் புதிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து பிரிவுகளுக்கும் கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, நாட்டில் 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் பொருளாதார வளர்ச்சியை அடைய தனியார் துறையிலிருந்து அதிகபட்ச பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் நீதித்துறையின் சுயாதீனத்தை நிலை நிறுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒருமித்து செயற்பட வேண்டும் என்றும் ஒரு அரசாங்கம் என்ற ரீதியாக நாட்டில் நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related posts: