‘பீல்ட் மார்ஷல்’ பதவி வகிப்பவர்களுக்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படாது – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Tuesday, April 6th, 2021

இலங்கையில் ‘பீல்ட் மார்ஷல்’ பதவி வகிப்பவர்களுக்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படாது என தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களது வாழ்நாள் வரையில் பீல்ட் மார்ஷல் பதவி நீடிக்குமெனவும்  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போதே இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

பீல்ட் மார்ஷல் பதவியென்பது இராணுவத்தில் உள்ள உயர் பதவி. இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பீல்ட் மார்ஷல் பதவியும், அதற்கு இணையான கடற்படையினரின் பதவியும், அப்பதவியைப் பெறுபவர்கள் வாழ்நாள் வரையில் நீடிக்கும் .ஆனால் இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படாது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அவரதுப் பணியாட் தொகுதிக்காக 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவருக்குப் படையினரின் உத்தியோகபூர்வ காரொன்றும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

அட்மிரல் கரன்னாகொடவுக்குப் பணியாட் தொகுதிக்காக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் , அவருக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. பணியாட் தொகுதியினரின் பாவனைக்காக ஜீப் ரக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது.

விமானப் படையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற டபிள்யூ.டி.ஆர்.ஜே. குணதிலக்கவுக்கு பணியாட் தொகுதிக்காக 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளதோடு உத்தியோகபூர்வ இல்லமோ, வாகனமோ வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: