வாய்ப்பேச்சு வல்லவர்களிடம் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதன்  விளைவுகள்தான் தமிழ்மக்களது உரிமைகளும் தேவைகளும் மழுங்கடிக்கப்படுகின்றன.

Tuesday, April 19th, 2016

ஏற்கனவே நாம் செய்துவந்த சேவைகளினூடாக நடைபெற்ற அபிவிருத்திப் பணிகளையும் கட்டுமாணப் பணிகளையும் புதிய அரசை கொண்டுவந்தவர்கள் என கூறுபவர்கள் மக்கள் நலன் சார்ந்து அவர்களது தேவைகளை முன்னிறுத்தி அரசியல் நகர்வுகளை மேற்கொள்பவர்களாக இருந்திருந்தால் 100 நாள் திட்டத்திற்குள்ளேயே மக்களது அடிப்படைத் தேவைகளையும் வாழ்வாதார வசதிகளையும் முன்னிறுத்திய தீர்வுகளை கண்டிருக்க முடியும். அத்தகைய தூரநோக்கற்ற செயற்பாடுகள் மூலமே தமிழ் மக்கள் இன்றும் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக வாழவேண்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பாக பூநகரி பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்ததாவது –

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் நலன்சார்ந்து ஒருபோதும் சிந்திப்பது கிடையாது. மக்களுக்கு என்றுமே பிரச்சினைகள் இருக்கவேண்டும் என்றும் அவை தொடரப்படுவதனால்தான் அரசியலில் தமது இருப்புக்களை தக்கவைக்கமுடியும் என்ற எண்ணத்தை முன்னிறுத்தி அவர்களது அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

புதிய அரசு ஒன்று ஆட்சிக்குவரும்போது அதனிடமிருந்து 6 மாதங்களுக்குள் எமக்கான தேவைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கவேண்டும். அதை தவறவிடுவோமேயானால் அந்த ஆட்சியில் நிலையான ஒரு தீர்வை எப்போதுமே பெற்றுக்கொள்ளமுடியாது என்பதுதான் கடந்தகால வரலாறு.

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய உண்மையானவர்களிடம் மக்கள் பிரதிநிதிகளுக்கான அரசியல் அதிகாரங்களை கொடுக்காது வெறும் வாய்ப்பேச்சு வல்லவர்களிடம் அதிகாரங்களை கொடுத்ததன்  விளைவாகத்தான் தமிழ்மக்களது அரசியல் உரிமைகளும் அபிவிருத்தி தேவைகளும் இன்றுவரை பூரணப்படுத்தப்படாத நிலைக்கு காரணமாகியுள்ளது.

இதை மாற்றியமைக்க மக்கள் விழிப்படைய வேண்டும் என்பதுடன் மாறுதல்களையும் மக்கள் செய்ய முன்வரவேண்டும் என்றார்.

இதன்போது குறித்த மக்கள் பிரதிநிதிகள் தாம் தமது பகுதிகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பாக செயலாளர் நாயகத்திடம் தெரிவித்திருந்தனர். அவர்களது கரத்தக்களை ஏற்றுக்கொண்ட செயலாளர் நாயகம் குறித்த பகுதி மக்களது தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் தான் துறைசார் அதிகாரிகளது கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: