மன்னார் மாவட்டத்தில் 90 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம் – மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Tuesday, October 12th, 2021

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாடசாலைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்  இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – ”மன்னார் மாவட்டத்தில் மடு கல்வி வலயத்தில் 44 பாடசாலைகள் 2588 மாணவர்களைக் கொண்டதாகவும், மன்னார் வலயத்தில் 46 பாடசாலைகள் 3 ஆயிரத்து 784 மாணவர்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளது.

அத்துடன் குறித்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்ற போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெளிவு படுத்தியிருந்தார்.

மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பேருந்து போக்குவரத்து தொடர்பாக அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம்,மற்றும் வவுனியாவில் இருந்து  மன்னாரிற்கு வருகின்ற ஆசிரியர்களுக்காக விசேட பேருந்து சேவை ஒன்றையும் ஆரம்பிக்க உள்ளமை குறித்தும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் உள்ளூர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயணம் செய்வதற்கு முறையான போக்குவரத்து சேவையை ஆரம்பிக்குமாறு அரச தனியார் போக்குவரத்து துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர் வரும் 21 ஆம் திகதி முன் பள்ளி பாடசாலைகளையும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

000

Related posts: