வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் – விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வரவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என இனங்காணப்பட்டுள்ளார்கள்.

அதன் அடிப்படையில் அவர்கள் நால்வரும் தற்பொழுது மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்வாங்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிதுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ள விரும்பத்தகாத செயற்பாடு தொடர்பில் மூன்று உயர் அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –

” வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரால் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன் துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அவர்கள் நால்வரும் தற்பொழுது மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்வாங்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விரைவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரினாலும் எமக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொலிஸ் நிலையம் ஒன்றில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகள் நடைபெற்று விசாரணை முடிவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.

எனினும் தற்பொழுது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நான்கு உத்தியோகத்தர்கள் இடமாற்றப்பட்டுள்ளார்கள் ஏனென்றால் அவர்கள் அதே இடத்திலே கடமையாற்றினால் அங்குள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை அழித்து விடுவார்கள் என்ற காரணத்தினால் அவர்களை இடம் மாற்றி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை.

இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை பொலிஸ் உயர் மட்டத்தில் விசாரணைகளை விரைவாக செயற்படுத்துமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளோம் .” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் இறுதிச் சடங்குகள் இன்றுநடைபெற்றது.

இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அலெக்ஸிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்

அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை பொலிஸாரின் கோர முகத்தை எடுத்துக் கட்டுவதுடன் சம்பந்தப்பட்ட பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்

யாழ்- வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞனை கடந்த 08ஆம் திகதி திருட்டுச் சம்பவம் ஒன்றின்  விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்துள்ளனர்.

இந்நிலையில்  தனது நண்பனுடன் குறித்த இளைஞன்  பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் இருவரையும் கைதுசெய்த பொலிஸார் இருவரையும்  மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம்  உத்தரவிட்டது.

விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு  கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இளைஞனின் உயிரிழப்பை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில், உடலில் சித்தரவதை காயங்கள் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதேவேளை பொலிஸார் தன்னை எவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள் என்பது குறித்து   இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர்  கூறிய வீடியோவொன்றும் இணையத்தில் வெளியாகி பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் நண்பன் மீதான களவு குற்றசாட்டு தொடர்பிலான வழக்கு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்றம்  அனுமதித்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: