வடக்கில், 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் – 16,480 குடும்பங்கள் பயன் – ஏப்ரல் 06 இல் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பிரசன்ன ரணதுங்க ஆகியோரால் ஆரம்பிக்க ஏற்பாடு!

Tuesday, April 2nd, 2024

வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும், அம்மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

குறித்த நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரது பிரசன்னத்துடன் இந்த 24 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏப்ரல் 6 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன..

வவுனியா மாவட்டத்தில் 06 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில், இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. வவுனியா, வவுனியா வடக்கு, வெங்கலச்சிக்குளம், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

“அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்” என்ற அரசாங்கத்தின் எண்ணக் கருவின் கீழ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின்படி, மீள்குடியேற்றப் பிரிவு சமூக நீர் திணைக்களத்துடன் இணைந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்துகிறது.

2021 ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், வட மாகாணத்தில் 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டன. இதன் மொத்த திட்ட மதிப்பு 211 மில்லியன் ரூபாவாகும். முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில், முதல் கட்டமாக, 26 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 16,480 குடும்பங்கள் பயனடையவுள்ளன.

இந்த நனோ நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நாளொன்றுக்கு சுமார் 2,000 லீற்றர் தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்யும் திறனைக் கொண்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts: