ஏ.ரி.எம். மில் பணம் எடுக்கும்போது அவதானமாயிருக்குமாறு அறிவுறுத்தல் – நிதி மோசடி தொடர்பாக விசாரணை!

Thursday, February 7th, 2019

அரச மற்றும் தனியார் வங்கிகளில் ஏ.ரி.எம் எனப்படும் தன்னியக்க இயந்திரமூடாக முன்னெடுக்கப்பட்ட நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கையிலுள்ள வங்கிகளில் ஏ.ரி.எம். எனப்படும் தன்னியக்க இயந்திரங்களில் கருவியொன்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் குழுவொன்றினால் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்தத் தரவுகளைப் பயன்படுத்தி போலியான அட்டைகளுடாக பணம் பெறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் குற்றத்தடுப்புத் திணைக்களத்தினர் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில்  இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்த நிறுவனமான லங்கா க்ளியர் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஏ.ரி.எம். எனப்படும் தன்னியக்க பணம் வழங்கல் இயந்திரமூடாக கொடுக்கல், வாங்கலில் ஈடுபடும்போது அவதானத்துடன் செயற்படுமாறு ஏ.ரி.எம். இயந்திரத்தைப் பயன்படுத்துவோருக்கு லங்கா க்ளியர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏ.ரி.எம். இயந்திரத்தைப் பயன்படுத்துவோர் கவனம் செலுத்த  வேண்டிய சில முக்கிய விடயங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. நிதி கொடுக்கல், வாங்கலுக்கு பயன்படுத்தப்படும் ஏ.ரி.எம். இயந்திரத்தில் அநாவசியமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆராயுங்கள். ஏ.ரி.எம். இயந்திரமூடாக கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுகையில் உங்களை சூழவுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.

சந்தேகத்துக்கிடமான பொருள் அல்லது நபர்கள் தொடர்பில் வங்கியின் பாதுகாப்புப் பிரிவு அல்லது பொலிஸாருக்கு அறிவியுங்கள். ஏ.ரி.எம். இயந்திரத்தைப் பயன்படுத்தும் அனைவரும் தமது ஏ.ரி.எம். அட்டைக்குரிய வங்கியில் கொடுக்கல், வாங்கலுக்கான குறுந்தகவல் அறிவித்தலை செயற்படுத்திக்கொள்ளுங்கள்.

Related posts: