20 வருடங்கள் ஆசிரியப் பணி புரிந்த பலரும் உள நெருக்கீடுகளால் ஓய்வுபெறும் அவலம் – தமிழர் ஆசிரியர் சங்கம்!

Sunday, January 20th, 2019

வடக்கு – கிழக்கு மாகாண ஆசிரியர்களில் இருபது வருடங்கள் சேவை நிறைவு செய்த பெரும்பாலானவர்கள் அறுபது வயதுக்கு முன்னரே உள நெருக்கீடுகளால் ஓய்வுபெற முடிவு செய்கின்றனர். அதை அவதானிக்க முடிகிறது என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாகவுள்ளது. அதற்கான காரணங்கள் பலவற்றைப் பல தடவைகள் நாம் ஆதாரபூர்வமாக வெளியிட்டோம்.

இதைவிட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது பல்வேறு நெருக்கீடுகள் பிரயோகிக்கப்படுகி;ன்றன. குற்றம் செய்யாத அதிபர்கள், ஆசிரியர்கள் நியாயமின்றித் தண்டிக்கப்படுகின்றனர். இடமாற்றம் செய்யப்படுவதும் திருப்தியில்லாமல் விசாரணைகள் நடத்தப்படுவதும் பக்கச்சார்பாகத் தீர்ப்புகள் வழங்கப்படுவதும் ஒருபுறம் இருக்க மாணவர்களைக் கட்டுப்பாட்டுடன் வழிப்படுத்த முடியாவர்களாக அதிபர்கள், ஆசிரியர்கள் இருக்கின்றனர். மாணவர்களுக்குச் சட்டரீதியாக அதிகளவு அநாவசிய சுதந்திரமும் சமூகத்தில் புகுந்துள்ள சமூகத்தையும் சந்ததியையும் அழிக்கின்ற நடைமுறைகளுமே இத்தகைய நிலைமைக்குக் காரணம். இவை அனைத்தும் சட்டத்தாலும், சமூகத்தாலும் மாற்ற அல்லது நிறுத்த முடியாதவை. இவற்றை அதிபர்களும் ஆசிரியர்களும் மாற்றலாம் என்கின்ற நிலை கடந்துவிட்டது.

அதிபர்களும் ஆசிரியர்களும் சேவையிலிருந்து ஓய்வுபெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்கின்ற முடிவால் பெருமளவான ஆசிரியர்கள் ஓய்வுபெறுகின்றனர்.

மாறாகத் தவறு செய்கின்ற அதிகாரிகள் தண்டிக்கப்படுவதும் இல்லை. கண்டிக்கப்படுவதும் இல்லை. அவர்களுக்குப் பதவி உயர்வுகளே வழங்கப்படுகின்றன. இதைவிட சிலர் ஓய்வின் பின்னரும் பதவியில் தொடர ஆசைப்படுகின்றனர். அதே அதிகாரிகள் அதிபர்களையும், ஆசிரியர்களையும் விசாரணை செய்கின்ற அதிகாரிகளாகவும் தீர்ப்பு வழங்குகின்ற நீதிபதிகளாகவும் நியமனம் செய்யப்படுகின்றமை கவலைக்குரியது.

தவறு செய்யும் அதிகாரிகள் குறித்து முறைப்பாடு செய்தால் அதுபற்றி சிறிதளவும் கவனம் கொள்ளாததால் ஆசிரியர்கள் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

இறப்பைவிட மௌனமாக அடங்கியிருப்பது அல்லது ஒதுங்கியிருப்பதென்று அதிபர்களும், ஆசிரியர்களும் முடிவெடுத்திருக்கின்றமை அவர்களின் புத்திசாதூரியம் என்பதை விட இயலாத்தன்மை என்றே தோன்றுகிறது. மாணவர்கள் கைகட்டி நின்ற காலம்போய் ஆசிரியர்கள் கைகட்டி நிற்கும் சூழல் இன்று உள்ளது. ஏற்கனவே வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பாடத்துறை சார்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளன. இந்த நிலையில் பெருமளவான ஆசிரியர்கள் ஓய்வுபெற்றால் இன்னும் நிலமை மோசமாகும் என்றுள்ளது.

Related posts: