யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் விரைவில் ஊரடங்கு தளர்கிறது – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பரிந்துரை!

Thursday, April 16th, 2020

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய  நான்கு மாவட்டங்களிலும் படிப்படியாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் இது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும், வடக்கு ஆளுனர் மற்றும் பொலிசாருடன் ஆராய்ந்து இது தொடர்பான இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தும் ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

யாழ் மாவட்டத்தின் ஊரடங்கை உடனடியாக தளர்த்தும் சாத்தியமில்லை. இன்னும் சில நாட்கள் கண்காணிப்பு அவசியமானது. ஆனால் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளின் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த நடவடிக்கையெடுக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா அபாயமற்ற பகுதிகளில் முதலில் ஊரடங்கு தளர்த்தப்படும் என தெரிவித்த வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணத்தில் முதலில் ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளாக, அபாயமற்ற பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள தீவகம், தென்மராட்சி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் உள்ளடங்கும் என தெரிவித்துள்ளார்.

Related posts: