யாழ்ப்பாணம் சீரழிய அனுமதியேன்! – நீதிபதி இளஞ்செழியன் !

Thursday, August 11th, 2016

தற்போது அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை மீண்டும் சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என, 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 141 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக்கோரி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் தொடர்பான விசாரணை மேல் நீதிமன்றத்தில் 10ஆம் திகதி நடைபெற்றது.

அப்போது, அந்தப் பிணை மனு விண்ணப்பத்திற்குப் பிணை வழங்கக் கூடாது என அரச சட்டத்தரணி ஸக்கி இஸ்மாயில் ஆட்சேபனை தெரிவித்து வாதாடினார். இதனையடுத்து அந்தப் பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் மேலும்தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணம் தற்சமயம் அமைதியாக உள்ளது. குற்றச் செயல்கள் குறைவடைந்து காணப்படுகின்றன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சைக்காக மாணவர்கள் தம்மைத் தயார் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன் லட்சக்கணக்கான மக்கள் நல்லூர் திருவிழாவுக்காக படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். நாட்டின் வெளிப் பிரதேசங்களில் இருந்து வருபவர்களும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுமாக யாழ்ப்பாணம் விருந்தினர்களால் நிரம்பி வழிகின்றது.

இந்த வழக்கில் பெருந்தொகையான 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 80 லட்ச ரூபா என மதிப்பிடப்படுகின்றது. கைது செய்யப்படாதிருந்தால் அந்த சந்தேக நபர் இலட்சாதிபதியாகியிருக்கக்கூடும். கைது செய்யப்பட்டமையால் அவர் இப்போது சிறைக் கைதியாகியுள்ளார். இந்தச் சூழ்நிலையில் போதைப் பொருள் குற்றசாட்டுக்கு உள்ளான நபர்களை பிணையில் விடுவது ஆபத்தான நிலைமையையே ஏற்படுத்தும். பொது நலனும், சமூக நலனும் பாதிக்கப்படும். ஆகவே இந்த நீதிமன்றம் இந்தப் பிணை மனுவை நிராகரிக்கின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

Related posts: