மாகாண சபைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க ஜனாதிபதி அலுவலகம் ஒத்துழைப்பு வழங்க தயார் – ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவிப்பு!

Saturday, August 19th, 2023

மத்திய அரசாங்கத்துடன் பணியாற்றும்போது மாகாண சபைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க ஜனாதிபதி அலுவலகம் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடனும், பிரதம செயலாளர்களுடனும் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த மாகாண ஆளுநர்கள், மாகாண சபைக்குட்பட்ட அதிகார எல்லையில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.

சில பாடசாலைகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் உள்ளதை சுட்டிக்காட்டிய ஆளுநர்கள், சில பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்ததோடு, ஆசிரியர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் அதனை சீராக்க சந்தர்ப்பம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற கருத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடங்கள், கட்டி முடிக்கப்படாமல் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதால் சில கட்டிடங்கள் சேதமடைந்து வருவதாகவும், அவற்றை சீர்செய்வதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் ஆளுநர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் இடை நடுவில் கைவிடப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்த நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், சில திட்டங்களுக்கு இதுவரை நிதி கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: