யாழில் பொலிஸாரின் சித்திரவதைகள் அதிகரிப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு முறைப்பாட்டுப் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பு!

Friday, December 14th, 2018

யாழில் பொலிஸாரின் சித்திரவதைகள் தொடர்பில் இந்த ஆண்டு 31 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது கடந்த ஆண்டை விட இது அதிகமாகும். தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளன. இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் அத்துமீறிச் செயற்படுகின்றனர். தடுத்து  வைத்திருப்பவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்குகின்றனர் என்று அடுக்கான குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மனித உரிமைகள் ஆவணத்தில் சொல்லப்பட்டுள்ள எல்லா உரிமைகளையும் மக்கள் அனுபவிக்கின்றார்களா என்பது தற்போதுள்ள கேள்வி. மனித உரிமை மீறல்களை நாம் தொடர்ந்து பார்த்து பழக்கப்பட்டு அது சாதாரண விடயமாகிவிட்டது.

கடந்த நவம்பர் மாதம் வரையில் 278 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனாலும் ஆயிரத்து 500 பேர் வரையில் மனித உரிமை ஆணைக்குழுவை நாடி வந்தார்கள். அவர்கள் ஏதோ ஒரு வகையில் மனித உரிமைகள் மீறப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்ட வரைமுறைக்கு உட்பட்ட 278 முறைப்பாடுகளை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். இலங்கையில் சித்திரவதை என்பது குற்றமாக உள்ள நிலையிலேயே இவ்வாறு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தொந்தரவு செய்தல் தொடர்பில் 27 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டத்துக்குப் புறம்பாக தடுத்து வைத்தல் தொடர்பில் 13 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அரச நிறுவனங்களிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்து 71 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றார்.

Related posts: